'மே, 1968... 'அர்ச்சகரின் மீதுதான் தவறு!' - அந்த இளைஞனின் உதடுகளில் இருந்து உஷ்ணமாக வெளிப்பட்டன வார்த்தைகள். கோபம் அனலாகத் தெறிக்கும் தன் மகனின் முகத்தை விநோதமாகப் பார்த்தார்கள் பெற்றோர் இருவரும். 'என்ன நடந்தது எனத் தெரிந்துதான் பேசுகிறாயா? தமிழரான அந்த அர்ச்சகரை சிங்களவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?' - பதில் கோபத்துடன் திருப்பிக் கேட்டார் அந்த இளைஞனின் தந்தை. 'தெரியும், சிங்களவர்கள் கொளுத்திவிட்டார்கள். அவர்கள் கொளுத்தும் முன்பே அர்ச்சகர் அவர்களைக் கொன்றிருக்க வேண்டும்' - கோபம் குறையாமல் அந்த இளைஞன் சொல்லவும் கூடுதலாக அதிர்ச்சி தந்தைக்கு! 'தேவாரத்தையும், திருவாசகத்தையும் சொல்லிக்கொடுத்து, திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் எனப் படித்த உன்னிடம் இருந்தா இப்படிப்பட்ட வார்த்தைகள் வருகின்றன? தவறு, பகைவனிடம்கூட நாம் அன்பு பாராட்டத்தான் வேண்டும். அன்பே சிவம், அன்பே கடவுள், அன்பே உலகம்!' எனப் பதிலுக்கு அழுத்தி அழுத்தி அந்த இளைஞனுக்கு அன்பைப் போதிக்கிறார் அந்தத் தந்தை! 30 ஆண்டு காலமாக ஈழத் தமிழர்களுக்காக ராணுவம் கட்டிப் போராடிய பிரபாகரன்தான் அந்த இளைஞன். பிரபாகரனுக்கு அன்பை அழுத்தி அழுத்திச் சொன்னவர் தந்தை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை. சிங்களப் பகைவனுக்குக்கூட அன்பு பாராட்ட வேண்டும் எனப் போதித்த பிரபாகரனின் பெற்றோர் திருவேங்கிடம் வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் இப்போது சிங்கள அரசின் முரட்டுச் சித்ரவதைகளில் அவதிப்பட்டு வருவதாகக் கடல் கடந்து வரும் தகவல்கள்தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனங்களில் வேதனை வலியைப் பரவவைத்திருக்கிறது.இலங்கை வல்வெட்டித்துறையில் நன்கு அறியப்பட்ட நடுத்தரவர்க்கக் குடும்பம் திருவேங்கிடம் வேலுப்பிள்ளையினுடையது. இலங்கை அரசாங்கத்தில் மாவட்டக் காணி அதிகாரியாகப் பணிபுரிந்தவருக்கு பிரபாகரன், ஜெகதீஸ்வரி, விநோதினி என மூன்று குழந்தைகள். மகன் பிரபாகரன் தேர்ந்தெடுத்த பாதையை மாற்ற ஆரம்பத்தில் எவ்வளவோ முயற்சித்தவர். பின்னாட்களில் மகனுக்குப் பின்னால் திரண்ட போராட்ட வீரர்களைப் பார்த்து, தவிப்புடன் ஆசி வழங்கி போராட்டத்துக்குத் தத்துக் கொடுத்தார் மகனை. அதன் பிறகு சிங்கள அரசுக்கும் பிரபாகரனின் படைக்கும் பல முறை போராட்டங்கள் நடந்தபோதெல்லாம் முதலில் பாதிக்கப்படுவது வேலுப்பிள்ளைதான். வேதனை யும் பயமும் உள்ளுக்குள் நொறுக்கினாலும், மகனின் வீரப் போராட்டத்துக்காக எதையும் வெளிக்காட்டாமல் வெள்ளந்தி மனிதராக வாழ்ந் தவர். ஒரு கட்டத்தில் இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்துக் கொடுக்க... மூத்த மகள் ஜெகதீஸ்வரி கணவருடன் கனடா சென்றுவிட்டார். இளைய மகள் விநோதினி திருச்சியில் தங்கி விட்டார். மரபுவழி ராணுவப் போர் உக்கிரமாகத் தொடங்கிய காலத்தில் பிரபாகரன், தன் பெற்றோரை வற்புறுத்தி 83-ம் ஆண்டில் இந்தியா அனுப்பிவைத்தார். திருச்சி ராமலிங்க நகரில் இருந்த விநோதினியின் வீட்டில் தங்கியிருந்தபடி மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தனர் இருவரும். பின்னர், விநோதினியும் கனடா சென்றுவிட, தங்களுக்கு மருத்துவம் பார்த்த முசிறி டாக்டர் ராஜேந்திரனுடன் முசிறியிலேயே தங்கி இருந்தனர். அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் 2003-ம் ஆண்டில் தமிழீழம் கிளம்பிப் போனார்கள். அதன் பிறகு கடைசி வரை பிரபாகரனுடயே இருந்தவர்களை இறுதிக்கட்டப் போரின்போது தமிழகத்துக்குச் செல்லும்படி எவ்வளவோ கூறி இருந்திருக்கிறார் பிரபாகரன். 'வாழ்வோ, சாவோ... இனி உன்னோடுதான்' என்ற உறுதியோடு இருந்தவர்கள், சிங்கள ராணுவத்தின் கைகளில் சிக்கியது காலத்தின் கோலம்தான். ''போர் பாதிப்பின் அடையாளமாக எஞ்சிஇருந்த மிச்சசொச்சம் தமிழ்ச் சொந்தங்கள் சொந்த தேசத்துக்கு உள்ளேயே நாடு கடத்தப்பட்ட அகதிகளாக ராணுவத்திடம் சரண் அடைந்திருந்தனர். அந்த மக்களோடு மக்களாக மாணிக் ஃபார்ம் அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்திருந்தனர் பிரபாகரனின் பெற்றோர். அவர்களைத் தேடி வந்த ராணுவத்தினர் ஏனைய மக்களைச் சித்ரவதைக்கு உள்ளாக்கியபோது, தாங்களாகவே முன்வந்து 2009, மே 20-ம் தேதி தங்களை ஒப்புக் கொடுத்தனர் பிரபாரனின் பெற்றோர். வவுனியா இடைத்தங்கல் முகாமுக்கு இருவரையும் அழைத்துச் சென்ற ராணுவம், அங்கு தனிமையில் வைத்திருந்தது. 76 வயதான வேலுப்பிள்ளையும், 71 வயதான பார்வதியம்மாளும் உடல்நிலை மோசமாகி மிகவும் சிரமப்பட்டபோதுகூட, அவர்களுக்கான மருத்துவ உரிமையைப் பறித்தது ராணுவம்'' என்று இப்போது சொல்லும் சில ஈழத் தமிழ் பிரமுகர்கள், ''60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு உதவியாக உறவினர் ஒருவரை வைத்துக்கொள்ளலாம் என்ற பொது விதி யைக்கூட பிரபாகரனின் பெற்றோருக்கு அவர்கள் மறுத்துவிட்டனர். ஒரு மாத காலம் வவுனியா முகாமில் இருந்தவர்களை, பின்பு சிங்கள ராணுவம் எங்கோ கொண்டு சென்றது. இதுவரை விவரம் தெரியாமல் இருந்தது. இப்போது, அந்த அப்பாவி முதியவர்கள் இருவரும் 'ஃபோர்த் ஃப்ளோர்' எனப்படும் இலங்கை மத்திய குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் இருப்பதாக வரும் செய்திகள் கேட்டு நடுங்கிப் போயிருக்கிறோம்'' என்கிறார்கள் உள் ளார்ந்த பதைபதைப்புடன்! 'ஃபோர்த் ஃப்ளோர்' என்ற வார்த்தையைக் கேட்டு ஏன் பதைபதைக்க வேண்டும்? அது அப்படித்தான்! ஜெ.ஆர்.ஜெயவர்த்தனே ஆட்சிக் காலத்தில் கொழும்பு கொல்பிட்டிப் பகுதியில் உள்ள கட்டடத்தின் நான்காவது மாடிக்கு மெள்ள மெள்ள அப்படியரு 'புகழ்' சேரத் துவங்கியதாம்! இலங்கை மத்தியக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அங்கே ஹிட்லரின் சித்ரவதைக் கூடத்தைவிட பயங்கரமான நிகழ்வுகளை அரங்கேற்றிக் காட்டுவது வழக்கமாம். அரசுக்கு எதிரான முக்கிய தமிழ்முகங்கள் சிக்கிவிட்டால்... அவர்களை சிறுகச் சிறுக நொறுங்கவைத்து ரகசியங்களைப் பிடுங்க முடிவெடுத்துவிட்டால்... இந்த 'ஃபோர்த் ஃப்ளோரு'க்குக் கொண்டுபோய்விடுவார்களாம். ''இங்கே போய் உயிரோடு திரும்பியவர்கள் மிக அபூர்வம்தான்! அப்படி உயிரோடு திரும்பி வர்றவங்களும் வாழ்நாள் முழுக்க நிம்மதியாத் தூங்க முடியாது. கனவிலும் மிரட்டும் கொடுமைகள் அப்படி! சுவர் எங்கும் தெறித்து விழுந்த ரத்தக்கறைகளும், ஓயாத மரணவலி ஒலங்களும் அந்த நான்காம் மாடியில் ஒலித்துக்கொண்டே இருக்குமாம். அந்த இடத்தை 'சாத்தானின் மாளிகை' என்றும் 'பிசாசுக் கூடாரம்' என்றும் விவரம் தெரிந்த தமிழர்கள் சொல்வது வழக்கம்'' என்று விளக்கம் கிடைக்கிறது. விசாரணைக்காக வரும் நபர்களை வகைப்படுத்தியே சித்ரவதை தொடங்குவார்களாம். ஆடைகளைக் கழற்றி, பனிக்கட்டிகள் நிரம்பி இருக்கும் ஓர் அறையில் நடுங்கும் குளிரில் உறையவைப்பது... கேட்கிற கேள்விக்கு 'திருப்தி'கரமான பதில் வராவிட்டால், குளிருக்கு நேரெதிரான பாஸ்பரஸ் ட்ரீட்மென்ட் நடக்குமாம். பாஸ்பரஸை உடலில் தடவி, கொதிக்கிற மின் தகட்டைக் கையிலெடுத்து... மேற்கொண்டு கேட்டால், இளகிய மனங்கள் துடிதுடித்துப் போகும். தலைகீழாகத் தொங்கவிடுவது... பிறகு, பி.வி.சி. பைப்புகளில் மணலை நிரப்பி அடித்து நொறுக்குவது... தலைகீழாகத் தொங்குபவரின் தலையில் முழுக்க பெட்ரோல் நிரம்பிய ஒரு பாலிதீன் பையை மாட்டுவது... மூச்சுவிட முடியாமல் அவர்கள் பெட்ரோலை மெள்ள மெள்ளக் குடிப்பதையும்... அதன் நெடி மிகுந்த காற்றைச் சுவாசிப்பதையும் ரசிப்பது! விதவிதமாக நீள்கின்றன இந்த சித்ரவதைப் படலங்கள். வாய் வழியே பெட்ரோல் சென்று அரை மயக்க நிலையில் ஆழ்ந்த பிறகும், கேட்ட கேள்விக்குப் பதில் வராவிட்டால் வாய்க்குள் தீக்குச்சியைக் கொளுத்திப்போடுவார்களாம் குரூர அதிகாரிகள்! இதில், உடலின் உள்ளுறுப்புகள் தீயினால் வெந்து பொசுங்கிவிடும். உயிர் ஊசலாடிக்கொண்டு இருக்கும்போது, நான்கைந்து பேர் மட்டுமே கால்நீட்டி அமரக்கூடிய ஓர் அறைக்குள் 20-க்கும் மேற்பட்ட நபர்களை நின்ற நிலையில் அடைத்துவிடுவார்களாம். துளிகூட வெளிச்சம் புகாத அந்த இருட்டறைக்குள் முனகலும், மூச்சுவிடும் சத்தமும் மட்டும்தான் துணையிருக்கும். மற்றபடி எல்லாமே அந்தகாரம்தான்! மனநிலையை உருக்கி, உண்மைகளை வாங்குவதற்காக இப்படி உணவு, தண்ணீர் தராமல் பலநாட்கள் இருட்டுக்குள் வைத்திருப்பது உண்டு என்றும் இலங்கைத் தமிழ்ப் புள்ளிகள் மத்தியில் பரவிக்கிடக்கிறது சேதி. ''பெண்களின் நிலைமையோ எழுத்தில் வடிக்க முடியாது'' என பயம் பரவ 'ஃபோர்த் ஃப்ளோர்'பற்றி விவரிக்கிறார்கள் இலங்கைத் தமிழ் நிருபர்கள் சிலர். ''இத்தகைய ஓரிடத்தில் கடந்த நான்கு மாதங்களாக விசாரணை என்ற பெயரில் பிரபாகரனின் தாய் - தந்தை வைக்கப்பட்டு இருப்பதாக அறிகிறோம். வேலுப்பிள்ளைக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் உள்ளனவாம். தாய் பார்வதியம்மாளுக்கும் சர்க்கரை, உயர் ரத்த அழுத்த பாதிப்பு உண்டாம். அவர்களுக்கு அங்கே என்னவிதமான மருத்துவக் கண் காணிப்பு அளிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. அவர்களிடமிருந்து சிங்கள அதிகாரிகள் என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்றும் புரியவில்லை! இருவரையும் தனித்தனியே பிரித்து தனிமைச் சிறையில் அடைத்துவைத்திருப்பதாக துளியளவு இரக்கமுள்ள சில அதிகாரிகள் மூலம் தகவல் வருகிறது. முதுமையில் தனிமையின் பயம் எத்தகைய மனக் குழப்பங்களை உண்டாக்கும் என்று சொல்லத் தேவையில்லை. உணவுக் கட்டுப்பாட்டுக்கும் வழியில்லை அந்த நோயாளித் தம்பதிக்கு! இந்திய எம்.பி-க்கள் குழு இலங்கை சென்றபோது 'பிரபாகரனின் பெற்றோரைப் பார்க்க வேண்டும்' என வேண்டுகோள் வைத்திருக்கிறார் திருமாவளவன். இதற்கு மறுப்புத் தெரிவித்த அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரரான பசில், பிரபாகரனின் பெற்றோர் நலமுடன் இருப்பதாக மட்டுமே தெரிவித்திருக்கிறார். ''அவர்களை வெளியில் விடுவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், அவர்கள் இந்தியாவில் தங்குவதாக இருந்தால் மட்டும்தான் வெளியில் விடுவோம். மற்ற வெளிநாடுகளுக்குப் போனால், அவர்கள் எங்களுக்கு எதிராகப் பேட்டி கள் கொடுப்பார்கள். இப்படித்தான் டாக்டர் தமிழ்வாணியை நாங்கள் வெளியில்விடச் சம்மதித்தோம். ஆனால், லண்டன் போனவர் எங்களையே விமர்சித்தார். அந்த மாதிரி பிரபாகரனின் பெற்றோர் செயல்படக் கூடாது அல்லவா?'' என்று பசில் ராஜபக்ஷே, திருமாவளவனிடம் சொன்னதாக எங்களுக்கு ஒரு தகவல் இருக்கிறது'' என்கிறார் இலங்கை தமிழ் பத்திரிகையாளர் ஒருவர். இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் மற்றும் எம்.பி. சோனாதி ராஜா ஆகியோரின் உதவியுடன் பெற்றோரை மீட்டுத் தமிழகம் கொண்டுவரும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறாராம் பிரபாகரனின் சகோதரி விநோதினி. இதற்கு இலங்கை அரசாங்கம் எந்தளவு ஒத்துழைக்கும் என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும். அமெரிக்க நாடாளுமன்றத்தில் இலங்கை குறித்த போர்க் குற்ற அறிக்கை தாக்கலாகி இருப்பதைத் தொடர்ந்து, இங்கிருந்து யாரையும் இனி வெளிநாடுகளுக்கு அனுப்ப இலங்கை சம்மதிக்காது என்கிறார்கள் கொழும்பு பத்திரிகையாளர்கள்! ''பிரபாகரனின் பெற்றோருக்கு உண்மையில் என்ன நடந்தது, அவர்களது இப்போதைய நிலைமை என்ன என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்'' என்று தமிழீழ ஆதரவு அமைப்புகள் கோரிக்கை வைக்கத் தயாராகி வருகின்றன. இலங்கையின் சித்ரவதை அத்தியாயம் இப்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை
source:Kvikatan |
No comments:
Post a Comment