காத்மாண்டு: பூமி வெப்பமயமாதலின் ஆபத்து பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, எவரெஸ்ட் சிகரத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடத்த நேபாள அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நேபாள வனத் துறை அமைச்சர் தீபக் பகோரா கூறியதாவது: பூமி வெப்பமயமாதலைத் தடுப்பது குறித்து சர்வதேச ஆலோசனைக் கூட்டம், டென்மார்க் தலைநகர் கோபன்ஹெகனில் அடுத்த மாதம் 7 முதல் 18ம் தேதி வரை நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக, பூமி வெப்பமயமாதலால் நேபாளம் மற்றும் அண்டை நாடுகள் சந்திக்கும் பிரச்னை பற்றி உலகுக்கு தெரிவிக்கும் வகையில் நேபாள அமைச்சரவைக் கூட்டத்தை எவரெஸ்ட் மலை மீது நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த மாதக் கடைசியில் நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்துக்காக எவரெஸ்ட் சிகரத்தின் 17,585 அடி உயரத்துக்கு அமைச்சர்கள் செல்லப் போகிறோம். இமயமலையின் பனிச் சிகரங்கள் வேகமாக உருகி வருவது நேபாளத்துக்கு கவலை அளித்துள்ளது. கோபன்ஹெகன் கூட்டத்துக்கு முன்னதாக நேபாளத்தின் அச்சத்தை தெரிவிக்க விரும்பியே அமைச்சரவைக் கூட்டத்தை எவரெஸ்டில் நடத்துகிறோம். இமய மலைச் சிகரங்களில் இருந்து உற்பத்தியாகும் நீரை நம்பி 130 கோடி பேர் வாழ்கின்றனர். பனிச் சிகரங்கள் அச்சப்படும் அளவுக்கு வேகமாக உருகி வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், கடும் வெள்ளம் ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படலாம். அதன் பிறகு, நீர் ஆதாரம் இல்லாமல் இமய மலையை ஒட்டிய பகுதிகள் வறண்டு போகக்கூடும். இமயமலையின் பனிச் சிகரங்கள் உருகும் அபாயம் பற்றி சர்வதேச அளவில் விழிப்புணர்வு குறைவாக உள்ளது. எவரெஸ்ட் மீது நடக்கவுள்ள எங்கள் அமைச்சரவைக் கூட்டம் அதை அதிகரிக்கும் என்றார். பூமி வெப்பமயமாதலால் பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீருக்கு அடியில் மாலத் தீவு அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இப்போது உறைய வைக்கும் குளிரில் 17,585 அடி உயரத்தில் நேபாள அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
source:dinakaran
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment