Monday, November 9, 2009

கொம்புசீவிய சர்வதேசமும் கூர்பார்க்கும் இலங்கையும்!


 

மிகவும் கீழ்த்தரமான, மோசமான, வறிய தடுப்பு முகாம்களில் 264000 தமிழ் மக்கள் இலங்கையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசு கேவலமான போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு 10,000 மக்களை மீளக் குடியமர்த்தியதாகத் தெரிவித்து விட்டு மேலும் மோசமான உள்ளக முகாம்களுக்கு அவர்களை இடம் மாற்றியுள்ளது. சர்வதேசத்திற்குக் கூறக்கூடிய பொய்கள் தீர்ந்துவிட்ட நிலையில் இலங்கை இத்தகைய போலிப் பிரச் சாரங்களில் ஈடுபட்டுள்ளது என்று சர்வதேச பிணக்குகள் குழுவின் (ICG) தொடர்பக இயக்குனர் திரு. அன்ட்ரூ ஸ்ரொய்ல்கைன் (Andrew Stroehlein) ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவிற்கு இலங்கையின் நிலைபற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

மேலும் போர் முடிந்து விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்றதன் பின்னர் போரினால் இடம்பெயர்ந்த கால் மில்லியனுக்கும் மேலான தமிழ் மக்களை எந்தவிதக் குற்றச்சாட்டுமின்றி இலங்கை சிறை வைத்துள்ளது. இந்த முகாம்கள் முட்கம்பி வேலிகளால் சூழப்பட்டுள்ளது. தப்ப முயலும் எவரும் சிங்கள இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்பதற்கு அண்மைய வவுனியா சம்பவம் எடுத்துக்காட்டு. இத்தகைய தடைகள், தேசிய மற்றும் சர்வதேசச் சட்டங்களுக்கு முரணானவை. அரசாங்கம் பல உறுதி மொழிகள் வழங்கி அவற்றை நடை முறைப்படுத்தாது தம் பொய்கள் மூலம் சர்வதேசத்தை மேலும் பிழையாக வழிநடத்த முயல்கிறது. எம்மிடமுள்ள கணக்கெடுப்புகளின்படி போரின் இறுதியில் கிட்டத்தட்ட 2,89,000 மக்கள் தடுப்பு முகாம்களுக்குள் கொண்டுவரப்பட்டனர். இவற்றில் 10,000க்கும் மேலானவர்கள் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்று பிரிக்கப்பட்டு வேறு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 5000 பேர் ஏதோ வகையில் பணம் செலுத்தி முகாமை விட்டு வெளியேறியுள்ளனர். இது வரையில் 6000 பேர் மட்டுமே முகாமை விட்டு வெளியே மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

சூலை மாதத்தின் பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் முகாம்களுக்குள் சென்று பார்வையிட முடியவில்லை. புலிகளுக்காக அல்லது புலிகளோடு வேலை செய்தவர்கள் என்ற பெயரில் அடைக்கப்பட்டுள்ளவர்களை இவர்களால் ஒரு முறையேனும் சந்திக்க முடியவில்லை. அரசாங்கம் முன்னுக்குப் பின் முரணான பல நொண்டிச் சட்டுக்களைக் கூறிக் கொண்டுள்ளது. முதலில் மக்கள் மீளக்குடி போகும் பகுதிகளிலுள்ள கண்ணி வெடிகள் அகற்றப்பட வேண்டுமென்று பொய்க் கரிசனம் காட்டியது. ஆனால் ஏற்கனவே கண்ணி வெடியில்லாத பகுதிகளில், ஏற்கனவே வாழும் உறவுகளுடன் சேர்ந்து வாழக் கூடிய வசதியுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. இரண்டாவதாக இந்த கால் மில்லியன் மக்களுக்குள் கலந்திருக்கும் விடுதலைப் புலிகளை வடிகட்டப் போவதாகக் கூறுகின்றனர். இந்த நடைமுறை எப்படி நிகழ்கிறதென்பதற்கு எந்த சாட்சியும் இல்லை. இதுவரை இதன் மூலம் எத்தனை புலிகளைப் பிடித்தோம் என்று அரசாங்கம் எந்தத் தகவலும் வழங்கவில்லை. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடமும் எந்தப் பதிவும் இல்லை. முகாமிலிருந்து தப்பி வந்தவர்கள் அல்லது முகாமிலுள்ளவர்கள் எவரும் இப்படியான வடிகட்டல் நடவடிக்கையக் கண்டதில்லை. சரி அப்படியாயிலும் 4 மாதங்களாக இவர்கள் நடத்தும் இந்த சோதனை முடியவில்லை என்றாலும் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டிருக்கலாமே? இது ஏன் நடைபெறவில்லை.

ஐ.நா. பொதுச் செயலரின், உள்ளக இடம்பெயர்ந்தோரின் மனித உரிமைகளுக்கான செயலாளர் வால்டர்

கலைன் (Walter Kalein) தனது அறிக்கையில், 'இலங்கை கொடுக்கும் கால அவ காசங்கள் எல்லாம் அர்த்தமற்ற பொய்கள், உடனடியாக மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்குப் பாதுகாப்புடனும் கெளரவத்துடனும் அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவர்களது நடமாட்டம் சுதந்திரமானதாக இருக்கவேண்டும். அவரவர்கள் உற வினர்களோடு வசிக்க விரும்புபவர்கள் உடனடியாகச் செல்ல அனுமதிக்கப்படல் வேண்டும்' என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பான் கி மூன் தனது சொந்த அறிக்கையில், 'அரசாங்கம் மக்களை அடைத்துவைப்பதன் மூலம் அவர்களின் கசப்புத்தன்மையையே சம்பாதிக்கின்றனர். இதுவே நாளை ஒற்றுமையான வாழ்வுக்குப் பங்கமாகி மீண்டும் வன்முறைகள் பிறக்கக் காரணமாகும்' எனவும் எச்சரித்துள்ளார்.

சர்வதேசத்தின் கழுகுப் பார்வைகளுக்கு அப்பால் தென் ஆசியா என்றுமே சந்தித்திராத ஒரு அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட மாபெரும் போர்க் குற்றக் கொடூரத்தை தமிழினம் சந்தித் திருப்பதை யாரும் மறுக்க முடியாது. உலகத்தில் எங்குமே இப்படியான மனித வதை முகாம்கள் உலகத்தினதும் ஐ.நா. வினதும் உதவியோடும் உருவாக்கப்பட வில்லை. இன்று அதை உருவாக்க உதவியவர்களே எதுவும் செய்ய முடியாது. அறிக்கைகளோடு மட்டுமே நிற்க வேண்டிய நிலையிலுள்ளனர்.

இந்த முகாம்களில் வலிகளின் சாட்சியாக, அதே வலிகளோடு வாழ்ந்து, ஏதோ ஒருவகையில் அந்த நரகத்திலிருந்து தப்பித்து வந்த ஒரு தமிழ்ப்பெண், இந்த வெட்கப்பட்டுத் தலைகுனிய வேண்டிய சர்வதேச சமூகத்திற்குத் தன் சாட்சியங்களைச் சாட்டையடிகளாக வழங்கியுள்ளார். இவர் மெனிக் பாம் முகாமின் 3வது வலயத்தில் 4 மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

'மெனிக் பாம் 5 வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிற்கும் இராணுவத்தினருடன் இயங்கும் சிங்கள நிர்வாகியிடமிருந்து ஆணை பெற்று இயங்கும் ஒரு தமிழர் பொறுப்பாக இருப்பார். இவரும் இவரது ஊழியர்களும் நேரடி இராணுவக் கட்டளைகளின் கீழ் செயற்படுவார்கள். இம் முகாம்களுக்கு யாராவது முக்கியஸ்தர்கள் வரும்போது வீடியோக் கேமராக்கள் பூட்டிய வாகனங்களில் வந்து சனங்களின் மத்தியில் பாண்கள் எறிவார்கள். மக்கள் நெரிந்தும் முண்டியடித்தும் பாணுக்காக அல்லற்படுவதைக் குரூரமாக ரசித்துப் பதிவு செய்வார்கள். இது அடிக் கடி நடப்பதாக ஏனைய கைதிகள் சொன்னார்கள். நாங்கள் அனைவரும் துப்பாக் கிகளாலும் உருட்டுக் கட்டைகளாலுமே அச்சுறுத்தி வைக்கப்பட்டோம்.

சூன், சூலை மாதங்களில் இங்கு கடும் கடும்காற்று வீசியது. இது ஒரு நிரந்தர மண்புயலை எம் மீது வீசியபடியே இருந்தது. எல்லோருமே மணலால் குளிப்பாட்டப்படுவோம். ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒருமுறை இந்த மணற்புயல் வீசிக்கொண்டேயிருக்கும். நாங்கள் முகாம்களுக்குக் கொண்டு வரப்பட்டு சில தினங்களில் கடும் மழை பெய்தது. தாழ்வான நிலப்பகுதியில் இருந்த முகாம்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன.

எனது கூடாரத்தில் இருந்து சில மீட்டர் தொலைவிலே கழிவறை உள்ளது. இதன் துற்நாற்றம் எப்பொழுதும் வீசிக் கொண்டேயிருக்கும். நிரம்பிய மலசலக் கூடங்கள் அகற்றப்படுவதில்லை. அது தேங்கியபடியே நிற்கும். அங்கு நிலவிவரும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஒருவர் ஒருநாளில் கழிவறை சென்று வருவதென்பதைக் கேள்விக் குறிக்குள்ளாக்கியுள்ளது. உணவுப் பிரச்சினையையும் சுகாதாரப் பிரச்சினையையும் விட இது மோசமானதொரு பிரச்சினையாக இருந்தது.

எனது வாழ்வில் நான் இவ்வளவு தொகையில் ஈக்களையும் நுளம்புகளைளயும் கண்டதில்லை. உணவருந்தும்போது ஒரு கை ஈக்களை விரட்டியபடியே இருக்க வேண்டும். ஆனால் இந்த நடை முறைகளுக்குப் பழக்கமில்லாத குழந்தைகள் அருகிலிருக்கும் நிரம்பிய கழிவறைகளிலிருந்து நேரடியாக வருகின்ற ஈக்கள் மொய்க்கும் உணவையுண்டு நோய்க்குள்ளாகின்றனர். முகாமைச் சுற்றி வடிவக் கால்வாய்கள் கழிவு நீர் போக வெட்டி விடப்பட்டுள்ளன. இதுவே நுளம்புகளின் வாழ்விடத்திற்கும் பெருக்கத்திற்கும் பொருத்தமான இடமாக அமைந்துவிட்டது. பகல் வேளைகளில் திண்மையான அடுக்குகளாக கழிவு நீரின்மேல் நுளம்புகள் படிந்திருந்து சூரியன் மறைந்தபின் தன் வேலையைத் தொடங்கிவிடும்.

அங்குள்ள குழந்தைகளின் நிலையைப் பார்த்த U.N.H.C.R. அதிகாரி, அங்கு மரக்கறிகள் ஏன் வழங்கப்பட வில்லையென்று உணவுப்பிரிவு அதிகாரிகளிடம் விசாரித்தார். அவர்கள் தமக்கு வவுனியா மாவட்டச் செயலாளர் எந்த விதமான மரக்கறிகளையும் முகாமிற்கு வழங்கவேண்டாமெனக் கட்டளை யிட்டிருப்பதாகக் கூறினார். இது இன்றும் நீடிக்கின்றது.

குழந்தைகளுக்குப் பால்மா கிடைப்பதில்லை. ஒருமுறை ஏழுமாதக் குழந்தையின் தந்தை தன் குழந்தைக்குத் தயாரித்த கறுப்புச் சாயத் தேநீருக்கு ஒரு கரண்டி சீனிக்காகக் கெஞ்சிக் கொண்டி ருந்தார். போசாக்கில்லாத அரைகுறை உணவை உண்ணும் தாய்மாருக்குத் தாய்ப்பால் என்பது கேள்விக் குறிக்குள்ளாகிய நிலையில் கறுப்புச் சாயத் தேநீரே குழந்தைக்கு உணவாகிறது.

ஒவ்வொரு வலயத்திற்கும் இரு நோயாளிப் பிரிவுகள் உள்ளன. இங்கு வரும் மருத்துவர்கள் பெரும்பாலும் தமிழ் தெரியாதவர்கள். இங்கு நீண்ட வரிசைகள் இருக்கும். எப்பொழுதும் வைத்தியர்கள் அதிவேகமாக வேலைசெய்வார்கள். நான் பார்த்தபோது ஒரு 12 வயதுச் சிறுவனுக்கு என்ன நோய் என்பதை விசாரிக்காமலேயே மருந்துச் சீட்டு எழுதிக் கொடுத்தனர். இன்னுமொரு பெண் மணிக்கு அவரது குழந்தைக்கான மருந்தையும் அவருக்கான மருந்தையும் மாற்றிமாற்றிக் கொடுத்திருந்தனர். இங்கு குழந்தைகளும் முதியவர்களும் சாதாரண காய்ச்சல் வந்தும்கூட ஓரிரு நாட்களில் திடீரென இறந்து விடுகின்றனர்.

இந்த முகாமின் வலயங்கள் முட் கம்பிகளால் பிரிக்கப்பட்டுள்ளன. அதைத் தாண்டி உறவுகளைச் சந்திக்க முயன்றால் அது அங்கு கடுமையாகத் தண்டிக்கப்படும். உறவுகளை, துணைகளைப் பிரிந்து வந்தவர்கள் - தம் உறவுகளைத் தேடும் ஆவலில் வேலிகளைத் தாண்டவோ அல்லது விசாரிக்கவோ முற்படுபவர்கள் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்பட்டனர். ஒருமுறை ஒரு வயதான பெரியவர் முட்கம்பிவேலியின் பக்கத்தில் நின்று அடுத்த வலயத்தில் என்ன நடக்கின்றது என்று பார்த்தபடி நின்றிருந்தார். அந்தப் பகுதியில் சென்றுகொண்டிருந்த இராணுவச் சிப்பாய் அவரை நடு வீதிக்குக் கொண்டுவந்து அடிக்கத் தொடங்கினான். அவரை அடித்து அவர் படும் துன்பத்தை மற்றைய இராணுவத்தினரோடு சேர்ந்து குரூரமாக ரசிக்கத் தொடங் கினான்.

ஓமந்தையில் முன்பதிவு செய்த போது குடும்பங்களிலிருந்து புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரித்தெடுத்துச் செல்லப்பட்டவர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் எவர்க்கும் பின்பு அறிவிக்கப்படவில்லை.

மெனிக்பாம் ஒரு சிறைச்சாலை என்பதில் எவர்க்காவது சந்தேகம் இருப்பின், வெளியாட்களைச் சந்திக்கும் பிரிவின் இன்றைய அமைப்பைப் பார்வையிட்டால் தெரிந்துவிடும். இந்தப் பகுதி இப்போது மார்பளவிற்கு மேலாக இரும்புச் சட்டங்களாலான தடுப்புக்களையும் அதன் மேற்பகுதி மரத்தாலான தடுப்புக்களையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக மட்டுமே பேசுவதாயினும் பொருட் களைப் பரிமாறிக் கொள்வதாயினும் செய்யலாம். இதற்கு 20 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும். அதனுள்ளும் அடையாள அட்டைப் பரிசோதனை, விசாரணை என்று பாதி நேரம் முடிந்துவிடும். வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு ஒரு கைதி இறந்துவிட்டால் ஒரு சிறு சடங்கு சம்பிரதாயத்திற்குச் சந்தர்ப்பம் உண்டு.

உள்ளே இறந்தால் எதுவுமில்லை. உள்ளே இறப்பவரின் உடலும் இராணுவத்தால் அகற்றப்படும். அதன்பின் என்ன நடக்கின்றது என்பது யாருக்கும் தெரியாது. எனது கூடாரத்திற்கு அருகில் மூன்றரை வயதுக்குழந்தை இறந்தது. அந்தக் குழந்தையினைக் கொண்டுவந்த சித்தியைக்கூட அந்த உடலத்தைப் பார்வையிடவிடாது கொண்டு சென்று விட்டனர்.'

- இப்படியாக ஒருவரின் பார்வைக்குக் கிடைத்த இந்த அனுபவம் நிச்சயமாகச் சர்வதேசத்திற்கும் கிடைத் திருக்கும், இவர்களின் மனச்சாட்சிகளும் இப்போது உறுத்தத் தொடங்கிவிட்டன.

வன்னித் தடுப்பு முகாம்களில் தமிழ் மக்களை நீண்ட காலத்திற்குத் தடுத்து வைத்திருப்பது ஐ.நா.சபையின் அனைத்துல விதிகளுக்குப் புறம்பானது என ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தெற்காசிய விவகாரங்களின் பிரதிநிதிகளின் குழுவின் தலைவர் ஜோன் லம்பேட் தெரிவித்துள்ளார். இடம் பெயர்ந்த மக்கள் மீதான தடுத்து வைப்பு நடவடிக்கைகள் அளவுக்கு மீறியதாக உள்ளதாகவும் பொது மற்றும் அரசியல் உரிமைகளை மீறுவதாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தீட்டிய மரத்திலேயே கூர்பார்ப்பது போல் இந்தப் போரை இந்தநிலைக்குக் கொண்டுவர உதவிய சர்வதேசத்திடமே இலங்கை தனது திமிரைக் காட்டத் தொடங்கியுள்ளது. அவர்களின் எந்த சட்ட வரம்புக்குள்ளும் நிற்காமல் முரண்டுபிடிக்கிறது.

இலங்கை அரசு தமிழ் நிலங்களைப் பறித்தெடுத்துத் தமிழர்களைக் கைதிகளாக்கிவிட்டு அவர்கள் பூர்வீக நிலங்களைச் சிங்களமயமாக்கலிலேயே முனைப்புக் காட்டுகின்றது.

முல்லைத் தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் புத்தவிகாரைகளையும் புத்தர் சிலைகளையும் நிறுவுவதிலேயே தன் வளங்களையும் நேரத்தையும் செலவிடுகின்றது. சர்வதேசம் என்ன காட்டுக்கத்துக் கத்தினாலும் இலங்கை தனது இனவழிப்புக் கடமையைச் சரிவரச் செய்துவருகிறது.

இவற்றிற்கெல்லாம் ஒரு தண்டனையாக இலங்கை அரசுக்கான நிதியுதவிகளை நிறுத்த அனைத்துலக நாடுகள் தீர்மானித்துள்ளன. தடுப்பு முகாம்களின் வழமையான பணிகளுக்காக வழங்கிவந்த நிதி உதவியைப் பிரித்தானியா நிறுத்துவதாக அறிவித் துள்ளது. இதனையே மற்றைய நாடுகளும் பின்பற்றும் எனவும் பிரித்தானிய அபிவிருத்தி அமைச்சர் மைக் போஸ்டர் (Mike Foster) தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களின் பராமரிப்புச் செலவினங்களுக்காகச் சர்வ தேசம் இதுவரை 195 மில்லியன் டாலர் நிதி அளித்துள்ளது. மொத்தமாக 225 மில்லியன் டாலர் உதவி வழங்கப்படவுள்ளது. மேலும் 225 மில்லியன் டாலர் உதவி வேண்டுமென்று இலங்கை கோரியிருக்கும் வேளையிலேயே, இலங்கையின் நிதி நெருக்கடியைப் பயன்படுத்தி தமது அழுத்தங்களைப் பிரயோகிக்கச் சர்வதேசம் எத்தனிக்கின்றது. இது வெகுதாமதமாகவே சர்வதேசத்தால் எடுக்கப்பட்ட முடிவாகும்.

இவர்கள் கொடுத்த நிதியுதவியினாலேயே கால் மில்லியன் தமிழர்களது சிறைச்சாலை பேணப்பட்டுள்ளது. இந்த உதவி ஏற்கனவே மறுக்கப்பட்டிருப்பின் இந்த முகாம்கள் என்றோ கலைக்கப்பட்டிருக்கக் கூடிய சந்தர்ப்பம் இருந்துள்ளது. ஆகவே தமிழர் சிறைகளுக்கு வாயிற்காப்பாளர்களாக இருந்த சர்வதேச சமூகம் இனியாவது தம் சக்தியை இலங்கையின் மீது பிரயோகிக்குமா அல்லது மண்டியிடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- நன்றி : 'ஈழமுரசு' 10-16 அக்டோபர்-2009

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails