``அவன் பெயர் அருண்குமார் சார். கரூர் அண்ணாநகரைச் சேர்ந்தவன். பார்வைக்கு பக்கா நல்லவன் போலத்தான் தெரிவான். ஆனால் பயங்கர அழுத்தக்காரன். `கோழி' என்பது அவனது செல்லப்பெயர். பள்ளிப் பருவத்திலேயே அருண்குமாருக்கு அவனது தங்கையின் தோழியான சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் மீது மையல் ஏற்பட்டிருக்கிறது. காதல் என்றால் அப்படியொரு காதல். ஆனால் ஒருதலைக் காதல். இவனது காதல் முயற்சிகளை ஆரம்ப முதலே சந்தியா கண்ணெடுத்தும் பார்க்கவில்லை.அவனது காதல்வலையில் விழுந்து விடாமல் அவனை முழுக்கவே உதாசீனம் செய்து விட்டு, படிப்பில் கவனம் செலுத்தி வந்திருக்கிறாள். ஆனால் அருண்குமாரோ விடுவதாக இல்லை.தொடர்ந்து தொய்வில்லாமல் தனது காதல் முயற்சிகளை நீட்டித்து சந்தியாவைத் துரத்தி இருக்கிறான். சந்தியா நன்றாகப் படிக்கக் கூடிய பெண். அருண்குமார் அடிக்கடி தரும் லவ் டார்ச்சர்களை ஒருபுறம் தாங்கிக்கொண்டே படித்து, பிளஸ் டூவில் நல்ல மார்க் வாங்கியிருக்கிறாள். பிறகு கோவையில் உள்ள ஒரு பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் சந்தியா சேர்ந்திருக்கிறாள். இனியாவது அருணின் தொல்லை இருக்காது என நினைத்திருந்த சந்தியாவுக்கு அதிர்ச்சி. ஒருமுறை, உறவினர் ஒருவர் பார்க்க வந்திருப்பதாகக் கல்லூரி ஊழியர் வந்து தகவல் சொல்ல, சந்தியா போய்ப் பார்த்தபோது, அங்கே கல்லூரி கேட் அருகே காத்திருந்த நபர் அருண்குமார்!ஆறேழு மணிநேரமாக அவன் காத்திருந்திருக்கிறான் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இனியும் இதை நீடிக்கவிட்டால் சரிப்படாது என்பது தெரிந்து, பெற்றோர் காதில் இந்த விஷயத்தைப் போட்டிருக்கிறாள் சந்தியா. அவர்கள் இதே காவல்நிலையத்தில் எங்களிடம் வந்து புகார் கொடுத்தார்கள். நாங்கள் அருணைக் கூப்பிட்டு எச்சரித்து அனுப்பினோம். `என் மீதே கேஸ் கொடுக்கிறியா? உன்னை என்ன செய்கிறேன் பார்!' என்று அதுமுதல் ஒரு சைக்கோ போலவே ஆகிவிட்டான் அருண்குமார். ஆரம்பத்தில் அச்சகம் ஒன்றை நடத்தி வந்த அவன், சந்தியா மீதுகொண்ட காதல் பித்து காரணமாக அச்சகத் தொழிலை விட்டுவிட்டான். வேறு எந்த வேலைக்கும் அவன் போகவில்லை. சதா சந்தியா என்ற மந்திரம்தான். இதற்குள் சந்தியா கல்லூரிப் படிப்பை முடித்து சென்னையில் கம்ப்யூட்டர் பயிற்சியில் சேர்ந்த போது அங்கும் வந்துவிட்டான் அருண்குமார். சந்தியாவுக்கு பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தபோது,பெங்களூருவையும் அவன் விட்டுவைக்கவில்லை. அவனது காதல் துரத்தல் சந்தியாவுக்கு கசப்பைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. கம்பெனி வேலையை கவனிப்பதைவிட இவனது தொல்லைகளைச் சமாளிக்கும் வேலையே சந்தியாவுக்கு சரியாக இருந்திருக்கிறது. பெற்றோர்களுக்கு இந்தத் தகவல் தெரிந்தால் அவர்கள் பதறிவிடுவார்கள் எனப் பயந்து இந்த இம்சைகளை மனதில் போட்டு பூட்டி வந்திருக்கிறாள் சந்தியா. இதற்கிடையே சந்தியாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தொடங்கிவிட்டது.நல்ல மாப்பிள்ளை கிடைத்து கல்யாணத் தேதி குறிக்கப்பட்டு திருமண அழைப்பிதழ் எல்லாம் அச்சடிக்கப்பட, அருண்குமாருக்கு விஷயம் தெரிந்து விட்டது. ஒரு நிமிடம் ஆடிப்போன அவன், அதன்பின் சுதாரித்துக் கொண்டான். ``ஒன்பது வருஷம் உன் பின்னால் நாயாகச் சுற்றியிருக்கிறேன். எனக்குக் கிடைக்காத நீ வேறு எவனுக்கும் கிடைக்கக் கூடாது' என்று கறுவியிருக்கிறான். அடுத்து அவன் செய்ததுதான் அந்த அதிர்ச்சிகரமான காரியம். மே மாதம் 15-ம்தேதி உள்ளூர் நாளிதழ் ஒன்றில் ஏழாவது ஆண்டு திருமண வாழ்த்து ஒன்றைத் தந்தான் அருண்குமார்.அதில் இடம்பெற்றிருந்த தம்பதிகளின் புகைப்படத்தில் அவனும், சந்தியாவும் அருகருகே சிரித்துக் கொண்டிருந்தார்கள். அந்த விளம்பரத்தில் `மனைவி' பெயரில் ஒரு கட்டுமான நிறுவனம் இருப்பதாக வேறு `கதை' விட்டிருந்தான் அவன். இந்த திருமண விளம்பரம் கரூரை ஒரு கலக்கு கலக்கிவிட்டது. இதையடுத்து சந்தியாவின் வீடும்,வருங்கால மாப்பிள்ளை வீடும் அதிர்ச்சியில் அல்லாடியிருக்கிறது. திருமணத்துக்கு எந்த சங்கடமும் வந்துவிடக் கூடாது என்ற பயத்தில் அருண்குமாரின் கதையை ஆதியோடந்தமாக மாப்பிள்ளை வீட்டாருக்கு விளக்கி இருக்கிறார்கள் சந்தியாவின் பெற்றோர். அப்போது கூட சந்தியாவுக்கு இந்த விளம்பர விஷயம் தெரியாது. அவளுக்குத் தகவல் போனதும், ஆடிப்போய் அந்தப் பெண் கரூருக்கு ஓடி வந்திருக்கிறாள். அதன்பிறகு பெற்றோர்களுடன் இங்கே வந்து எங்களிடம் புகார் செய்தாள். அந்த விளம்பரத்தை நாங்கள் ஆராய்ந்து,அது கிராபிக்ஸ் வேலை என்பதைத் தெரிந்து கொண்டோம். சந்தியா கழுத்தில் தாலிக்குப் பதில் நெக்லஸ் இருப்பதைப் பார்த்ததுமே இது மோசடி விளம்பரம் என்பது புரிந்து விட்டது. அதேசமயம் இருவருக்கும் உண்மையில் திருமணம் எதுவும் நடக்கவில்லை என்பதையும் உறுதி செய்து கொண்டு அருண்குமாரைக் கைது செய்தோம்'' என்றனர். சந்தியாவின் உறவினர் ஒருவரிடம் பேசினோம்.``அந்த சைக்கோ அருண்குமாரைப் பற்றி சந்தியாவின் பெற்றோர் ஆரம்பத்திலேயே புகார் கொடுத்திருக்கிறார்கள். போலீஸார் அப்போதே அவன்மீது நடவடிக்கை எடுத்திருந்தால் பிரச்னை இந்த அளவுக்கு முற்றியிருக்காது. விளம்பரம் வெளியிட்ட நாளிதழ்க்காரர்கள் அதில் சந்தியாவின் கழுத்தில் நெக்லஸ் இருப்பதைப் பார்த்து சந்தேகப்பட்டு ஒழுங்காக விசாரித்திருந்தால் அந்த விளம்பரம் வெளி வந்திருக்காது. தங்கையோடு பிறந்தவனுக்கு தங்கை வயதில் உள்ள மற்றொரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாட எப்படித்தான் மனசு வந்ததோ தெரியவில்லை?'' என்றார் வருத்தமாக. காவல்துறை அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது.``திருச்சியில் சந்தியாவுடன் திருமணம் நடந்து, அதைப் பதிவு செய்தது போன்ற ஒரு போலி ஆதாரத்தையும் அந்த எமகாதகன் வைத்திருக்கிறான். செய்த தவறுகளுக்காக இப்போது அவன் கம்பி எண்ணுகிறான்'' என்றார் அவர். ஸீ ஸீ உன்னிகிருஷ்ணன் |
No comments:
Post a Comment