சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டம் திருத்தம்:
தீவிரவாதிகளுக்கு பணம் கிடைப்பதை தடுக்க அதிரடி நடவடிக்கை
மத்திய மந்திரி சபை ஒப்புதல்
புதுடெல்லி, ஜுன்.6-
தீவிரவாதிகளுக்கு தாராளமாக பணம் கிடைப்பதை தடுக்க சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது.
டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
மந்திரி சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-
அதிரடி நடவடிக்கை
சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தை கடுமையாக்க மந்திரி சபை முடிவு செய்தது.
இதன்படி தற்போதுள்ள சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும். அதன்மூலம் சூதாட்ட பொழுதுபோக்கு கிளப்புகள், விசா, மாஸ்டர் கார்டு ஆகிய கிரெடிட் கார்டு கேட்-வேக்கள் மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனைகள், வெஸ்டர்ன் ïனியன் போன்ற பண மாற்ற மற்றும் பண பரிமாற்ற சேவைகளை வழங்குபவர்கள் புதிய சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்படுவார்கள். இதன்மூலம் சர்வதேச அளவில் நடைபெறும் சந்தேகத்துக்குரிய பண பரிமாற்றங்கள் பற்றி இந்த நிதி அமைப்புகள் அரசுக்கு கட்டாயம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தீவிரவாதிகளுக்கு பணம் வந்து கொட்டுவதை தடுக்கவும், ஏற்றுமதி மதிப்பை குறைத்து காட்டி மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம்
கொல்கத்தாவில் அவுரா - சால்ட்லேக் இடையே கங்கை நதியின் அடியில் ரூ.4 ஆயிரத்து 676 கோடி செலவில் புதிய மெட்ரோ ரெயில் திட்டத்தை நிறைவேற்ற மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்துக்கான செலவை மத்திய அரசும், மாநில அரசும் சரி பாதியாக பகிர்ந்து கொள்ளும்.
பெரிய சரக்கு கப்பல்கள் வந்து செல்லும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்தை ஆழப்படுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் துறைமுக நுழைவு வாயிலில் இருந்து 3.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆழப்படுத்தும் பணிகள் நடைபெறும். துறைமுக கால்வாய் மற்றும் படுகை பகுதிகள் 14.7 மீட்டர் ஆழம், 230 மீட்டர் அகலத்துக்கு ஆழப்படுத்தப்படும். இதுதவிர கப்பல் துறையின் வளைவு பகுதி உட்பட படுகை பகுதியும் 14.10 மீட்டர் ஆழப்படுத்தப்படும்.
தூத்துக்குடி துறைமுகத்தை ஆழப்படுத்தும் இந்த திட்டத்துக்கு ரூ.538 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.349.70 கோடியை தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழகம் வழங்கும். மீதி ரூ.188.30 கோடியை மத்திய அரசு மானியமாக வழங்கும். இந்த திட்டம் நிறைவேறுவதன் மூலம் 75 ஆயிரம் டன் எடையுள்ள நான்காம் தலைமுறை சரக்கு கப்பல்களும், 4 ஆயிரம் டி.ஈ.யு. கப்பல்களும் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து செல்ல இயலும்.
டாக்டர்கள் ஓய்வு வயது
அருணாசலப்பிரதேசத்தில் கடந்த 2005-ல் இயற்கை பேரழிவுகளில் சேதமடைந்த உள்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் உருவாக்க, ரூ.399.20 கோடி திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.
மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணிபுரியும் டாக்டர்களின் ஓய்வு பெறும் வயதை 62ல் இருந்து 65 ஆக உயர்த்த மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. இந்த நிறுவனங்களில் நிர்வாக பணிகளில் இருக்கும் அதிகாரிகள் 65 வயது வரை பணிபுரிய விரும்பினால், ஆசிரியர் பணியில் தங்களை நியமிக்க கோரலாம்.
இந்த தகவல்களை மத்திய பாராளுமன்ற விவகார மந்திரி பி.ஆர்.தாஸ் முன்சி நிருபர்களிடம் தெரிவித்தார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=417266&disdate=6/6/2008
No comments:
Post a Comment