சோடா பாட்டில் மூடியால் பந்தைச் சுரண்டுவது, எதிரணி வீரரை கெட்டவார்த்தைகளால் திட்டுவது. போதை மருந்து சாப்பிடுவது, மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபடுவது, நடுவரிடம் சண்டைக்குப் போவது... பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்குப் பிடித்தமான காரியங்கள் இவைதான். போனால் போகிறதென்று அவ்வப்போது கிரிக்கெட் ஆடுவார்கள். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என்றாலே ரசிகர்களுக்கு கிலி தொற்றிக்கொள்ளும்.
கெட்ட காரியங்களில் ஈடுபட்டு தன்னுடைய பெயரை டேமேஜ் செய்துகொள்ளும் இவர்கள், தங்கள் அணியின் இமேஜையும் அதலபாதாளத்துக்குக் கொண்டுசெல்வதில் முனைப்புடன் இருப்பார்கள். இந்த பராக்கிரமசாலிகளின் பட்டியலில் தன்னை (மீண்டும்!) இணைத்துக் கொண்டிருக்கிறார் முகமது ஆசிஃப். பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர். ராவல்பிண்டி எக்ஸ்பிரஸான ஷோயிப் அக்தர் (கெட்டகாரியம் செய்து) அவ்வப்போது அணியிலிருந்து வெளியேறும் சமயத்தில் எல்லாம் நிலைமை சிக்கலாகாமல் தடுக்க உதவுபவர் இந்த ஆசிஃப். `தன்னுடைய உடைமைகளோடு போதைப் பொருளை மறைத்து வைத்து விமானத்தில் கடத்தினார்' என்றொரு பௌன்ஸர் இந்த ஆபத்பாந்தவன் மீது தற்போது வீசப்பட்டிருக்கிறது. கையும் களவுமாக துபாயில் பிடிபட்ட ஆசிஃப், தற்போது துபாய் காவல்துறையின் கட்டுப்பாட்டில். கைது செய்யப்படவில்லை என்பது உபரித்தகவல். எப்படி நடந்தது இந்தக் கூத்து? இந்தியாவில் கோலாகலமாக நடந்து முடிந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின்போது ஷேவாக் தலைமையிலான டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் இடம் பெற்று ஆடினார் முகமது ஆசிஃப். பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும்கூட, வங்கதேசத்தில் நடைபெற இருக்கும் மூன்று நாடுகள் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியில் ஆசிஃபுக்கு இடம் கொடுக்கப்பட்டிருந்தது. எல்லாம் கெட்ட நேரம். இந்தியாவில் இருந்து லாகூருக்குப் புறப்பட்ட ஆசிஃப், வழியில் துபாய்க்கும் ஒரு விசிட் அடித்தார், நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காக. வழக்கம்போல துபாய் சர்வதேச விமானநிலையத்தில் நடக்கும் சோதனைகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது ஆசிஃபின் பெட்டியில் புட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதைத் திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி. `அடடா, இது ஓபியம் என்ற போதை வஸ்து ஆயிற்றே' என்றனர் அதிகாரிகள். `இல்லவே இல்லை' என்று மறுத்தார் ஆசிஃப். அதிகாரிகள் ஏற்கவில்லை. கெஞ்சினார். மன்றாடினார். ம்ஹூம். எதுவும் எடுபடவில்லை. `வாருங்கள் விசாரிக்கிறோம்' என்று சொல்லி அருகில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றனர். அவ்வளவுதான். அடுத்த நொடியில் இருந்து முகமது ஆசிஃப் துபாய் விமான நிலையக் காவலர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டார். கேள்விகள். குறுக்குக் கேள்விகள். விசாரணைகள். இடைவெளி இல்லாமல் விசாரிப்புகள். நிலை குலைந்துவிட்டார் ஆசிஃப்.
``ஆறு மாதங்களுக்கு முன்பு ஹக்கீம் என்ற நாட்டு மருத்துவர் கொடுத்த மருந்து அது. உடலை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவும் என்று சொல்லிக் கொடுத்தார். அதை வாங்கிய உடனேயே பெட்டிக்குள் வைத்துவிட்டேன். அவ்வளவுதான். அதன்பிறகு மருந்தின் நினைவே எனக்கு வரவில்லை. அதன்பிறகு நீங்கள் காட்டியபிறகுதான் பார்க்கிறேன்!'' - இது முகமது ஆசிஃபின் விளக்கம். ஆனால் எதையுமே துபாய் அதிகாரிகள் துளியும் நம்பவில்லை. `துபாயில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளைக் கடத்த முயன்றிருக்கிறீர்கள். ஆகவே, விசாரணை. எல்லாம் முடிந்ததும் தண்டனை. இதில் மாற்றமில்லை' சொல்லி விட்டார்கள் அதிகாரிகள். பதைத்துப் போயிருக்கிறார் ஆசிஃப். விஷயம் கேள்விப்பட்டதும் அணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் ஆசிஃப். `துபாயில் இருந்து பங்களாதேஷ் வருவதற்கு விசா இல்லை. ஆகவே, அவருக்குப் பதிலாக சோஹைல் கான் என்ற இளைஞரை சேர்த்துக்கொண்டுவிட்டோம்' என்று கூறியுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம். அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது ஷெக்கபுரா நகருக்கு அருகிலுள்ள மஹிகி கிராமம். முகமது ஆசிஃபின் சொந்த ஊர் இது. `எங்கள் பையன் அப்படிப்பட்ட காரியத்தில் ஈடுபட்டிருக்கவே மாட்டான். அவன் நிரபராதி என்பது விரைவில் நிரூபணம் ஆகும்' என்று கூறுகிறார்கள் கிராம மக்கள். ஒருவேளை கடத்தும் நோக்கம் அவருக்கு இல்லை என்றால், குறைந்தபட்சம் தன்னுடைய சொந்த உபயோகத்துக்காகக் கொண்டு வந்திருக்கலாம். அதுவும்கூட துபாய் சட்டத்தின்படி தவறு. ஆகவே, முகமது ஆசிஃபின் சிறுநீர், பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவை வைத்தே ஆசிஃப் குற்றவாளியா? இல்லையா என்பது முடிவாகும். ஒருவேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால்? தண்டனை நிச்சயம். ஆறு மாதத்தில் இருந்து பதினைந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க துபாய் சட்டங்கள் வழிவகை செய்கின்றன. உண்மையில் பாகிஸ்தான் கிரிக்கெட், ஆசிஃப் இருவருக்குமே போதை, சர்ச்சை போன்ற சங்கதிகள் எல்லாம் புதியவை அல்ல. 2006_ம் ஆண்டிலேயே ஸ்டீராயிட் என்ற போதைப் பொருளை உட்கொண்டு ஆட்டத்தில் கலந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. விசாரணையின் முடிவில் ஆசிஃப் ஓராண்டு கிரிக்கெட் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. சிலபல லாபிகளுக்குப் பிறகு தடை நீக்கப்பட்டது. அதேபோல, வேகப்பந்துப் புயல் வாசிம் அக்ரம் மரிஜுவானா என்ற போதைப் பொருளைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஷோயிப் அக்தரும் போதைப் பொருள் உட்கொண்டதாலேயே அதிவேகமாகப் பந்துவீச முடிகிறது என்று குற்றம் சாட்டப்பட்டார். தடை விழுந்தது. பிறகு நீங்கியது. வீரர்கள் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். குற்றம் நிரூபிக்கப்படும் வரை அல்லது குற்றச்சாட்டு நிராகரிக்கப்படும் வரை முகமது ஆசிஃப் துபாயை விட்டு வெளியேற இயலாத சூழல் உருவாகியிருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் என்ற காயம்பட்ட காலுக்கு விழுந்த இன்னொரு அடி, முகமது ஆசிஃப். `குற்றம் நிரூபிக்கப்படாதவரை ஆசிஃப் எங்கள் செல்லப் பிள்ளைதான்' என்கிறார்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள். இந்த ரசனைதான் கிரிக்கெட் வீரர்களின் வாழ்வு, வதம் இரண்டுக்குமே அடிப்படை! ஸீ ஸீ ஆர். முத்துக்குமார் |
No comments:
Post a Comment