ஓட்டல்களில் இன்று முதல் இட்லி, தோசை விலை குறைப்பு
20 ரூபாய்க்கு அளவு சாப்பாடு
சென்னை, ஜூன் 3: தமிழகத்தில் ஓட்டல்களில் இட்லி, தோசை உட்பட 6 உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன. ரூ.20க்கு அளவு சாப்பாடு விற்கவும் ஓட்டல் உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். முதல்வர் பிறந்த நாளையட்டி இன்று முதல் விலை குறைப்பு அமலுக்கு வருகிறது.
ஓட்டல்களில் இட்லி, தோசை, சாப்பாடு போன்ற உணவுப் பண்டங்களின் விலையை குறைப்பதற்காக ஓட்டல் அதிபர்களிடம் அரசு சார்பில் கடந்த 31ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தலைமைச் செயலகத்தில் உணவு அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நேற்றும் பேச்சுவார்த்தை நடந்தது.
தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வசந்தபவன் எம்.ரவி, செயலாளர் ஆர்.சீனிவாசன், அன்னபூர்ணா டி.சீனிவாசன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உணவுப் பொருள் வழங்கல் துறை செயலாளர் சண்முகம், ஆணையர் க.ராஜாராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
பேச்சுவார்த்தை முடிவில், இட்லி, சாதா தோசை, வடை, பொங்கல், கிச்சடி, டீ ஆகிய 6 உணவுப் பொருட்களின் விலையை குறைக்கவும், 20 ரூபாய்க்கு அளவு சாப்பாடு வழங்கவும் ஓட்டல் உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டனர். முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று முதல் விலைகுறைப்பு அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இப்போது 2 இட்லி ரூ.8, சாதா தோசை ரூ.15, வடை ரூ.8, பொங்கல் ரூ.15, கிச்சடி ரூ.15, ஒரு கப் டீ ரூ.8 என்ற விலைக்கு அதிகமாக விற்கும் நடுத்தர உணவகங்களில் இப்போதுள்ள விலையில் 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் வரை குறைக்கப்படும்.
சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொறியல், ஊறுகாயுடன் 250 கிராம் சாதம் கொண்ட அளவு சாப்பாடு 20 ரூபாய்க்கு வழங்கப்படும். முதல்வர் பிறந்த நாளான ஜூன் 3 முதல் இது அமலுக்கு வருகிறது.
இந்த விலைக்கு குறைவாக ஏற்கனவே விற்பனை செய்துவரும் உணவகங்களில் தொடர்ந்து அதே விலையில் உணவு பண்டங்கள் வழங்கவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
விலை குறைக்கப்படுவதால் உணவுப் பண்டங்களின் தரம், எடை, சுவை போன்ற எதுவுமே குறைக்கப்படமாட்டாது என்றும், விலை குறைப்பு பட்டியல் வாடிக்கையாளர்கள் பார்வைக்கு தெரியும்படி வைக்கவும் ஓட்டல் உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலைகுறைப்பு குறித்து, தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வசந்தபவன் எம்.ரவி கூறியதாவது:
அரசின் ஆலோசனைப்படி, விலைகுறைப்பு, ஜூன் 3ம் தேதி அமலுக்கு வருகிறது. விலை குறைக்கப்பட்ட அயிட்டங்கள் தட்டுபாடு இல்லாமல் கொடுக்கப்படும். வசந்தபவன், சரவணபவன், சங்கீதா, ஆனந்த பவன், ஆர்யபவன், ஹாட் சிப்ஸ் போன்ற நடுத்தர ஓட்டல்களில் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வருகிறது.
மின்கட்டணம் குறைப்பு, வாட் வரி 2 சதவீதத்தை முழுவதுமாக ரத்து செய்வது, மானிய விலையில் காஸ், தண்ணீர் வரி குறைப்பு, பால் விலை குறைப்பு என்று பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைத்துள்ளோம்.
ஒரு மாதத்தில் இவ்விஷயங்களில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு உறுதி அளித்துள்ளார். அரசின் ஒத்துழைப்புடன் விலைகுறைப்பு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்.
No comments:
Post a Comment