"சிறிலங்காவின் தலைநகரம் என்ன?" – என்று கேட்டால் கூட "சரத் பொன்சேகா" என்று கூறுமளவுக்கு எல்லாமே மறந்துபோய் பொன்சேகா காய்ச்சல் பிடித்த அரசியல் நோயாளிகளாக பிதற்றும் நிலைக்கு சிறிலங்கா அரசியல்வாதிகள் தள்ளப்பட்டுள்ளனர். இன்றைய கொழும்பு நிலைவரம் இதுதான். போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதுகூட அப்போதைய இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் பெயர் இவ்வளவு அடிப்பட்டதில்லை.
சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் முடிவை – தாம் செய்த உதவிகளின் அடிப்படையில் – முன்னமே ஊகித்துக்கொண்ட சர்வதேச சமூகத்தினால், தற்போது கொழும்பில் வீசும் அரசியல் சுனாமியை சில மாதங்களுக்கு முன்னர்வரை ஊகித்திருக்கமுடியாது. அவ்வளவுக்கு கொழும்பு அரசியல் மாற்றங்கள் சடுதியாக மாற்றம் கொண்டது மட்டுமல்லாமல் அதில் சர்வதேச சமூகத்தையும் வலுக்கட்டாயமாக உள்ளே பிடித்து இழுத்திருக்கிறது.
இந்த மாற்றங்களின் மகுடம்தான் சரத் பொன்சேகா விவகாரம்.
போர் முடிவடைந்தகையோடு சிறிலங்கா அரசு மீதான போர்க்குற்ற விசாரணைகளுக்கான அழுத்தம் பெருகிக்கொண்டிருக்க, மறுபறுத்தில், போரினை முன்னின்று நடத்திய சிறிலங்காவின் மூவர் அமெரிக்க பிரஜைகளாக உள்ளனர் இவர்களுக்கு எதிராக அமெரிக்க அரசு தனது நாட்டு சட்டங்களுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும். பாரிய மனிதப்பேரவலத்தை தமிழ்மக்களுக்கு மேல் கட்டவிழ்த்துவிட்ட இந்த மூவரும் போர்க்குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை செய்யப்படுவதற்கு போதிய தகுதியுடையவர்கள் என்று சாதாரண மனித உரிமைகள் அமைப்பு முதல் சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் குரல் எழுப்ப ஆரம்பித்தன. ஆனாலும், இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ தளபதி சரத் பொன்சேகா, பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய, அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் எறும்புக்கும் தீங்கிழைக்காத புனிதர்கள் போல உலகவலம் வந்துகொண்டிருந்தார்கள்.
இந்நிலையில், போருக்கு பின்னரான அரசியல்நிகழ்ச்சிநிரலை மகிந்த அரசு தான் நினைத்தது போல வரைய ஆரம்பித்தது. தனது இந்த திட்டத்திற்கு முன்னால் இடறுப்படும் எந்த நாட்டையும் விட்டுவைக்காமல் எல்லாவற்றுடன் முரண்பட ஆரம்பித்தது. சீனாவின் கைப்பிள்ளையாக இருந்துகொண்டு மேற்குலகம், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. என்று பெரும் சக்திகளையெல்லாம் சர்வசாதாரணமாக தூக்கியெறிந்து நடந்துகொண்டது மட்டுமல்லாமல், அவற்றுக்கு முகத்தில் அறைந்தாற்போல் அரசின் முக்கிய அமைச்சர்கள் அறிக்கைகளையும் விடுத்தனர். போரில் வெற்றிபெற்ற ஆணவத்தில் நடந்துகொள்கிறார்களா என்று பொறுத்திருந்து பார்த்த சர்வதேச சமூகத்துக்கு சிறிலங்காவின் தொடர்ச்சியான போக்கு அதிர்ச்சியளித்தது. இலங்கை விவகாரத்தில் நீ முந்தி நான் முந்தி என்று அங்கு போய்நின்று தமக்கிடையிலான பலப்பரீட்சைக்கு அந்நாட்டை களமாக்கிகொண்ட இந்தியாவும் அமெரிக்காவும்கூட சிறிலங்காவின் இந்தப்போக்கினால் ஒரேயடியாக குழம்பிபோயின.
ஒருகட்டத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கைவிவகாரத்தில் தாங்கள் இணைந்து நடந்தால் சீனாவின் பிடியிலிருந்து சிறிலங்காவை விடுவிக்கலாம் என்ற முடிவோடு காய்களை நகர்த்தின. ஆரம்பத்தில் இலங்கையும் அனுசரித்துப்போய் அதன் எதேட்சதிகாரப்போக்கை தருணம் பார்த்து நெத்தியடியாக அடித்து மடக்கி தமது வழிக்கு கொண்டுவருவதாகவே இருநாடுகளும் இராஜதந்திர வியூகங்களை வகுத்தன. ஆனால், சிறிலங்காவுக்கு இந்த அமெரிக்க – இந்திய கூட்டுத்திட்டம் சாதுவாக புரிய ஆரம்பித்து இருநாடுகளையுமே கறிக்கு கறிவேய்ப்பிலை போன்று பயன்டுத்துவதற்கு ஆரம்பித்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெறவும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் தனக்கு ஆதரவான வாக்குகளை பெறவும் என தந்திரமாக காய்களை நகர்த்தி, பக்குவமாக படைநகர்த்தலாம் என்ற திட்டத்துடன் நகர்ந்த அமெரிக்காவையும் இந்தியாவையும் சிறிலங்கா பகடைக்காயாக்கி தனது காரியங்களை நிறைவேற்றிக்கொண்டது.
சிறிலங்காவின் இந்த திருக்கூத்துக்களுக்கு முடிவு கட்டுவதற்கு தீர்மானித்த அமெரிக்கா கடந்த மாதம் தனது முதலாவது அடியினை தூக்கிவைத்தது. அதாவது, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்து மிகமுக்கியமான அறிக்கையில், சிறிலங்கா படைகள் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை விடுத்து, சிறிலங்காவுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினையும் பரபரப்புக்கு உள்ளாக்கியது. இதற்கு அடுத்ததாக சிறிலங்காவின் உள்நாட்டு அரசியலையே லாவகமாக பயன்படுத்தி திமிறிக்கொண்டிருக்கும் மகிந்த அரசின் தலையில் குட்டு வைப்பதற்கு முடிவுசெய்தது.
அதாவது, சிறிலங்காவில் போர் முடிவடைந்தகையோடு அப்போதைய இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு அந்நாட்டு அரச அதிபர் மகிந்த எவருமே எதிர்பாராத முடிவை அறிவித்தார். அதாவது, அவரை இராணுவ தளபதி பதவியிலிருந்து கீழிறக்கி எந்த அதிகாரமும் அற்ற வெற்றுப்பதவி ஒன்று அவருக்கு வழங்கப்பட்டது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை களத்தில் நின்று வழிநடத்தி அதில் வெற்றியை படைத்த மாவீரன் என்று சிறிலங்கா படையினர் மத்தியில் மட்டுமல்லாமல் சிங்கள மக்கள் மத்தியிலும் அவரது பிரபலம் பரவிவிட்டதாக மகிந்த சகோதரர்களுக்கு தொற்றிய தீராத பயமே, பொன்சேகாவை இராணுவ தளபதி பதவியிலிருந்து கீழிறக்குவதற்கு ஆதார காரணமாக அமைந்தது. இதனை அடுத்து, கொழும்பில் சரத் பொன்சேகா தரப்புக்கும் மகிந்த அரசுக்கும் இடையில் உள்ளுர பலத்த முறுகல் நிலவிவந்தபோதும் அது வெளியில் தெரிய இருதரப்புமே விடவில்லை.
ஆனால், தமது உத்தரவுக்கு கட்டுப்படாதது மட்டுமல்லாமல் தம்மையே ஏக எதிரியாக பார்க்கும் மகிந்தவுக்கு பாடம் கற்பிப்பதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் சரத் பொன்சேகா – மகிந்த முறுகல் விவகாரம் அருமருந்தாக அமைந்தது. இதனை பயன்படுத்தியே நாடகத்தை ஆரம்பித்து அரங்கேற்றிவிட முடிவெடுத்த அமெரிக்கா, தனது சார்பு ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுக்களை நடத்திய பின்னர் காய்களை நகர்த்த ஆரம்பித்தது.
அதன் ஒவ்வொரு கட்டமாக,
- அமெரிக்க விசாவை நீடிப்பதற்காக அங்கு சென்ற சரத் பொன்சேகாவை விசாரணை செய்யப்போவதாக ஒரு கதையை உலாவ விட்டு, தாம் சரத் பொன்சேகாவை மனித உரிமைகளை மீறிய நபராக பார்ப்பதாக ஒரு விம்பத்தை உருவாக்கி, அவரை மகிந்த அரசின் ஆளாகவே தாம் பார்ப்பதாகவும் ஒரு பிரமையை தோற்றுவித்துவிட்டு -
- சிறிலங்காவின் அடுத்த அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுமாறும் அதற்கு சகல ஆதரவும் ஆசீர்வாதமும் தம்பக்கமிருந்து கிடைக்கும் என்று உறுதியுமளித்து -
பொன்சேகாவுக்கு கை காட்டி அனுப்பிவைத்திருக்கிறுது அமெரிக்கா. ஜே.ஆர். முதல் ரணில் வரை அமெரிக்காவுக்கு ஆராத்தி எடுக்கும் ஐக்கிய தேசிய கட்சியும் – இழுத்து மூட வேண்டிய நிலையில் உள்ள – தமது கட்சியின் தற்போதைய நிலையை தூக்கிநிறுத்துவதற்கு இதுவே சரியான சந்தர்ப்பம் என்ற முடிவுடன் பொன்சேகாவை அடுத்த அரச தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதற்கு அடித்துப்பிடித்துக்கொண்டு நிற்கிறது. ஓய்வுபெற்ற – சிங்கள மக்கள் மத்தியில் பிரபலாமன – இராணுவ அதிகாரியை அரசியலுக்கு கொண்டுவரவேண்டும் என்று ஜானக பெரேரா விடயத்தில் ஐ.தே.க. மேற்கொண்ட நகர்வு அவரது மறைவுடன் மறைந்துபோயிருந்து. தற்போது, பொன்சேகாவை கண்டவுடன் ஐ.தே.க. பூரித்துப்போயுள்ளது.
மறுபுறத்தில்
மகிந்த அரசை வழிக்கு கொண்டுவரவேண்டும் என்று இந்தியா விரும்பியிருந்தபோதும், ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிக்கு கொண்டுவரவேண்டும் என்ற ஆர்வம் அதற்கு இருந்ததில்லை. ஆனாலும், அணில் ஏற விட்ட நிலையிலுள்ள இந்தியாவுக்கு தற்போது இதைவிட்டால் வேறு வழியுமில்லை.
வேகமாக அரங்கேறும் அமெரிக்காவின் இந்த அதிரடி திட்டங்களால் திகைத்துப்போயுள்ள இந்தியா, எதிர்க்கட்சி தலைவர் ரணிலை அவசர அவசரமாக இந்தியாவுக்கு அழைத்து, பொன்சேகா விவகாரம் தொடர்பாக பேச்சு நடத்திவருகிறது.
இந்த அரசியல் ஆடு – புலி ஆட்டத்தில் தமிழர் நிலைப்பாடு என்ன என்பதை அடுத்த பத்தியில் பார்ப்போம்.
நன்றி: ஈழநேஷன்
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment