குழந்தை பிறந்ததும் தவழ, தத்தித் தத்தி நடக்க, ஓட என ஒவ்வொரு வளர்ச்சிக்கும் ஒரு காலகட்டம் உண்டு. ஆனால், பத்து வயது நிரம்புவதற்குள் பல்வேறு துறைகளில் சிகரத்தை எட்டிப் பிடிக்கத் துடிக்கும் சுட்டிகளின் போட்டிகள் நிறைந்த உலகமாகிவிட்ட காலமாதலால்.... பிறந்த உடனேயே குழந்தை பேசலாம், நடக்கலாம்... ஏன் விமானம் கூட ஓட்டலாம்... ஆச்சர்யப்படுவதற்கில்லை. மழலைகளின் தனித்திறமை, ஈடுபாடு, உழைப்பு, அர்ப்பணிப்புடன் பெற்றோர்களின் அக்கறை கலந்த ஆர்வமுமே அவர்கள் மேதைகளாக ஜொலிக்க முழுக் காரணம். இப்படி மெகா சாதனைகளை புரிந்த நான்கு மழலை மேதைகளின் பேட்டி இங்கே... பழம்பெரும் நடிகர் ஆர்.எஸ். மனோகரின் பேத்தியான ஸ்ருதி, நுங்கம்பாக்கம் பத்மா சேஷாத்திரி பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். பாட்டு, டான்ஸ், டிராமா, சொற்பொழிவு, ஸ்லோகம், ஃபேன்ஸி டிரெஸ் என பல கலையிலும் பிரகாசித்து வெற்றி கோப்பைகளைத் தட்டி வரும் சகலகலாவல்லி. "திங்கள், புதன், வியாழன் பாட்டு கிளாஸ்... செவ்வாய், வெள்ளி டான்ஸ் கிளாஸ்... சனி, ஞாயிறு ஸ்லோகம்னு டைம்டேபிள் போட்டிருக்கேன். நாடகங்கள்ல பக்த பிரகலாதன், ஆஞ்சநேயர், சூரிய பகவான், ராஜராஜசோழன், குமரகுருபரர்னு அத்தனை வேஷங்களும் போட்டு நடிச்சிருக்கேன்"என்று தாத்தாவைப் போலவே வார்த்தைகளை ஸ்பஷ்டமாக உச்சரிக்கும் ஸ்ருதி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இன்றைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், உயர் நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் மற்றும் பல்வேறு வி.ஐ.பிக்களின் முன்பு தனது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டைப் பெற்றிருக்கிறாள்.
"ஸ்லோகம்லாம் பெரும்பாலும் சமஸ்கிருதத்துலதான் இருக்கும். அம்மா தான் தமிழ்ல எழுதி தருவா. அப்பா நாடகம் தொடர்பான அத்தனை விஷயங் களையும் அட்சரசுத்தமா சொல்லி தருவா"எனும் ஸ்ருதி மேடை நிகழ்ச்சி களில் பெரும்பாலும் 'குழந்தை திருமண எதிர்ப்பு', 'வன்கொடுமை தடுப்பு' போன்ற சமூக விழிப்பு உணர்வை ஏற்படுத்தக் கூடிய விஷயங்களை மையமாக எடுத்துக் கொள்வதுதான் ஹைலைட். இரண்டு கைகளையும் அநாயாசமாக சுழற்றி டிரம்ஸ் வாசிப்பில் அபார சாதனை படைத்திருக்கும் சுமன், சென்னை, வேலம்மாள் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன். புவி வெப்பமயமாதலை தடுக்கும் இயக்கத்துடன் இணைந்து கடந்த மாதம் சென்னை, ஸ்பென்சர் பிளாசாவில் ஒன்பது மணி நேரம் தொடர்ந்து டிரம்ஸ் வாசித்து, 'லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' சாதனை படைத்திருக்கிறான். "மூணு வயசுலேர்ந்து டிரம்ஸ் கத்துக்கறேன். என்னோட அண்ணா கீபோர்டு, தங்கச்சி பாட்டு, அப்பா கிடார்னு எங்க குடும்பமே கலைக் குடும்பம்தான். எங்களுக்குள்ள அப் பப்போ இசைப்போட்டி நடக்கும். இதுதான் என் சாதனைக்கு வழிகாட்டியா இருந்தது..."எனும் சுமன், 'இசைத்துளிர்கள்' எனும் சில்ட்ரன்ஸ் ஆர்கெஸ்ட்ராவின் மெயின் டிரம்மர். இதுவரை 500க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை கடந்துள்ள சுமன், "வாரத்துல சனி, ஞாயிறு ரெண்டு நாளும் டிரம்ஸ் கிளாஸுக்கும், மீதி நாள்ல கீபோர்டு, கிடார், மிருதங்க கிளாஸுக்கும் போறேன். அடுத்து கின்னஸ் சாதனைக்கு ரெடியாயிட்டிருக்கேன்..." முகத்தில் சந்தோஷ புன்னகையுடன் கூறினான். சென்னை, கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் திலீப்குமார், சதுரங்கத்தில் சாகசத்தை நிகழ்த்திய சுட்டிப் புயல். "எங்கப்பா ரொம்ப நல்லா செஸ் விளையாடுவாரு. அதைப் பார்த்ததும் எனக்கும் ஆசை வந்திடுச்சு. அப்புறம் அவர் கூடவே கிளாஸுக்குப் போக ஆரம்பிச்சேன்"என்றதும் திலீப்பின் அப்பா ரவிகுமார், "நான் போஸ்டல் டிபார்ட்மென்ட்ல வேலை பார்க்கறேன்... அப்படியே தி.நகர் செஸ் அசோஸியேஷன்ல கோச்சராவும் இருக்கேன். இவனுக்கு நாலு வயசா இருக்கறப்ப, செஸ் கத்துக் கொடுத்தேன். உடனே, புரிஞ்சுட்டு, தினமும் விளையாட கூப்பிட ஆரம்பிச்சிட்டான். அவனோட ஆர்வத்தைப் பார்த்து செஸ் வகுப்புல சேர்த்துவிட்டேன்"என்றார். "செஸ் ஃபெடரேஷன் ஆஃப் காரைக்குடி, ஸ்டேட் லெவல்ல 7 வயசுக்குள்ள இருக்கறவங்களுக்கு செஸ் போட்டி நடத்தினாங்க. இதுவரைக்கும் ஆறேழு முறை அதுல கலந்துட்டு முதல் பரிசு வாங்கியிருக்கேன். செஸ் ஆனந்த் மாதிரி உலக சாம்பியனாகணும்"என்றான் திலீப்குமார். 1330 திருக்குறளையும் அட்சரசுத்தமாக சொல்லும் ஆற்றல் படைத்த ஒன்பதே வயதேயான லவினாஸ்ரீ, சென்ற வருடம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தார் நடத்திய சர்டிஃபைடு புரொஃபஷனல் பரீட்சை எழுதி தேர்வானவர்களில், உலகின் இளம் வயது சுட்டி. மதுரை வி.எம்.ஜே. மேல்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் லவினாஸ்ரீ, "எனக்கு ஒரு வயசா இருக்குறப்ப, மாநிலங்கள், மாவட்டங்கள், தலைவர்கள், தேசிய கொடிகள், திருக்குறள்னு அத்தனையும் சொல்லி தந்தது என் அம்மா இந்து லேகாதான். என்னோட ரெண்டு வயசுல, அப்ப பிரதமரா இருந்த வாஜ்பாய்கிட்ட ஐம்பது திருக் குறளை ஒப்பிச்சு காட்டினதும், 'குழந்தை மேதாவி'னு எனக்குப் பட்டம் தந்தார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் 'திருக்குறள் குழந்தையே வா'னுதான் கூப்பிடுவாரு. இப்படி பல தலைவர்கள் என்னைப் பாராட்டினதுதான் திருக்குறள் முழுசையும் கத்துக்கணும்ங்கிற ஆர்வத்தை எனக்குத் தந்துச்சு. அப்படித்தான் திருக்குறள்ல சாதனை படைச்சேன்"என்றவள் 2006ல் குழந்தைக்கான தேசிய விருதும், லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் சாதனையும் புரிந்துள்ளாள். "ஒரு பிரைவேட் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத் துல சேர்ந்து அனிமேஷன் படிச்சு சர்டிஃபிகேட் வாங்கினேன். அமெரிக்கால எம்.எஸ். படிக்கிற என் பெரியப்பா பையன், மைக்ரோசாஃப்ட் தேர்வைப் பத்தி சொல்லி, 'பாகிஸ்தானை சேர்ந்த 9 வயசு பையன் இந்த தேர்வை எழுதி சாதனை பண்ணிருக்கான். நீ அதை முறியடிக்கணும்'னார். ஆன்லைன் மூலமா பரீட்சையும் எழுதினேன். மூணு மணி நேரம் எக்ஸாம். ஆனா, நான் அரை மணி நேரத்துல முடிச்சி, 1000த்துக்கு, 842 மார்க் வாங்கினேன்!"என்கிற லவினாஸ்ரீக்கு சயின்ட்டிஸ்டாக வேண்டும் என்பது லட்சியம். லட்சியம் நிச்சயம் நிறைவேற வாழ்த்துக்கள்! |
No comments:
Post a Comment