இலங்கையில் நடந்து முடிந்த ஈழப் போரின் இறுதி நாட்களில் நடந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவற்றில் கோதபயா ராஜபக்சேவுக்கு உள்ள தொடர்புகளுக்கான ஆதாரங்களை வழங்குமாறு இலங்கை கூட்டுப் படைத் தலைவர் சரத் பொன்சேகாவை கேட்டுள்ளது அமெரிக்க அரசு.
தற்போது சரத் பொன்சேகா அமெரிக்கா வந்துள்ளார். தனது கிரீன் கார்டு காலாவதியாகி விடாமல் காப்பாற்றுவதற்காக அவர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கோதபயாவுக்கு எதிரான சாட்சியத்தை வழங்குமாறு பொன்சேகாவிடம் அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போரின் இறுதிக் கட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அட்டூழியங்கள், போர்க் குற்றங்கள், படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், கற்பழிப்புகள் உள்ளிட்ட அனைத்து குற்றச் செயல்களிலும் கோதபயாவுக்கு உள்ள பங்குகள் குறித்த ஆதாரங்களையும், வாக்குமூலங்களையும் அளிக்குமாறு பொன்சேகாவை அது கேட்டுக் கொண்டுள்ளது.
பொன்சேகாவிடம் அமெரிக்க அரசு இவ்வாறு கேட்டுக் கொண்டிருப்பது உண்மைதான் என்று இலங்கை வெளியுறவு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இன்று வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா இலங்கை அரசின் கருத்தை தெரிவிக்கவுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
தனக்கு அமெரிக்க அரசு விடுத்துள்ள கோரிக்கை குறித்து வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் பொன்சேகா.
தற்போது பொன்சேகா ஓக்லகாமா நகரில் தனது மகள் வீட்டில் தங்கியுள்ளார். அவரது மருமகன் தொலைபேசி மூலம் பொன்சேகாவைத் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிகாரிகள், கோதபயாவுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனராம்.
தன்னிடம் அமெரிக்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டதை அப்படியே கடிதம் மூலம் இலங்கை தூதரகத்திற்குத் தெரிவித்துள்ளார் பொன்சேகா.
முன்னதாக அமெரிக்க உள்துறை அமைச்சக அதிகாரிகள் பொன்சேகாவை விசாரிக்கவுள்ளதாகம், இதற்காக அவரை உள்துறை அமைச்சக விசாரணை அலுவலகத்திற்கு அழைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் இலங்கை அரசு அதிர்ச்சியும்இ பீதியும் அடைந்தது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அமெரிக்க அரசு தீவிரப்படுத்துவதாக அது சந்தேகமடைந்துள்ளது.
கடந்த அக்டோபர் 22ம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், நாடாளுமன்றத்தில், இலங்கை போர்க்குற்றம் தொடர்பா அறிக்கையை தாக்கல் செய்தது என்பது நினைவிருக்கலாம். அதில் கோதபயா ராஜபக்சே, சரத் பொன்சேகா உள்ளிட்டோர் போர்க் குற்றம் புரிந்ததற்கான சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதபயா ஏற்கனவே அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ஆவார். பொன்சேகா விரைவில் அமெரிக்க குடியுரிமையைப் பெறப் போகிறார். இந்த நிலையில் கோதபயாவை அமெரிக்கா குறி வைத்திருப்பதும், அதற்கு பொன்சேகாவை சாட்சிக்கு அழைப்பதும், ராஜபக்சே சகோதரர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிகிறது.
அமெரிக்காவிடமிருந்து 'தப்ப' ராஜபக்சே தீவிரம்!
இந் நிலையில் ஈழப் போர் குறித்து என்ன மாதிரியான விளக்கம் தேவைப்பட்டாலும் அதுகுறித்து நேரடியாக என்னிடமே அமெரிக்கா கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என அதிபர் ராஜபக்சே அமெரிக்காவுக்குத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பொன்சேகாவை விரைவில் அமெரிக்காவிலிருந்து கொழும்புக்கு வரவழைக்கவும் முயற்சிகளை இலங்கை அரசு முடுக்கி விட்டுள்ளதாம். ஒரு நாள் கூட அமெரிக்காவின் விசாரணைக்கு பொன்சேகா உட்பட்டு விடக் கூடாது என்றும் இலங்கை அரசு தீவிரமாக உள்ளதாம்.
இதுதொடர்பாக மூத்த அமைச்சர்களை அழைத்து அவசர ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளார் ராஜபக்சே.
மேலும், போர்க் குற்றம் தொடர்பாக யாருக்கேனும், குறிப்பாக அமெரிக்காவுக்கு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் தன்னையே நேரடியாக கேட்கலாம் என்று அப்போது கூறினாராம் ராஜபக்சே.
முப்படைகளின் தலைவர் என்ற முறையில் நானே அனைத்து விவரங்களையும் சொல்ல முடியும் என்றும் ராஜபக்சே தெரிவித்தாராம்.
இதுதொடர்பாக அமெரிக்க அரசுக்கும் உரிய முறையில் தகவல் தெரிவித்துள்ளதாம் இலங்கை அரசு.
மேலும், உடனடியாக பொன்சேகாவை அமெரிக்காவிலிருந்து வரவழைப்பது தொடர்பாகவும் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பு சிறுவர்களைத் தமது படைக்குச் சேர்த்ததாகவும்,இலங்கைப் படைகள், போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்ததாகவும், தம்மிடம் சரண் அடைந்த போராளிகளைக் கொன்றதாகவும்இபடையினர் அல்லது அரசு சார்பு ராணுவக் குழுக்கள் தமிழ்ப் பொது மக்களை குறிப்பாக சிறுவர்களையும் இளைஞர்களையும் கடத்திச் சென்று கொன்றதாவும் அமெரிக்க வெளியுறவுத்துறை சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வெள்ளைக் கொடியுடன் யார் சரணடைய வந்தாலும் ஈவு இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொன்று விடும்படி கோத்தபயா உத்தரவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அமெரிக்க அரசு கூறியிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இலங்கை அரசு தானே ஒரு விசாரணையை நடத்துவதாக அவசரம் அவசரமாக அறிவித்தது.
இந்த நிலையில் அமெரிக்கா நேரடியாக களத்தில் இறங்கியிருப்பது போல தெரிவதால் இலங்கை அரசு பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
நன்றி; நெருடல்
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment