''எதிரி ஆகிறார் தளபதி' என்ற தலைப்பில், மகிந்தா ராஜபக்ஷேவுக்கும் சரத் ஃபொன்சேகாவுக்கும் இலங்கைக் களத்தில் அரங்கேறி வரும் உள்குத்து பகை பற்றி 28.10.2008 தேதியிட்ட ஜூ.வி-யில் விரிவான கவர் ஸ்டோரி வெளியாகியிருந்தது. அதில் நாம் குறிப்பிட்டிருந்தபடியே அடுத்தடுத்து ஃபொன்சேகா சில மூவ்களை நகர்த்த... சூடாகிக் கிடக்கிறது ராஜபக்ஷே தரப்பு! விடுதலைப் புலிகளுடனான போரில் சகல போர் மரபுகளையும் மீறி லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றழித்த இவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் நடத்தி வரும் முயற்சியும் இதன் மூலம் ஏக விறுவிறுப்பு அடைந்திருக்கிறது. பொது வேட்பாளர் ஃபொன்சேகா! ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷேயை எதிர்த்து இலங்கையின் பிரதானஎதிர்க்கட்சி யான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளராக ஃபொன்சேகாவை களமிறக்கும் முடிவில் இருக்கின்றன. இந்நிலையில், இலங்கையில் இருப்பது உயிருக்கு உத்தரவாதமில்லை என்பதை உணர்ந்த ஃபொன்சேகா, அதிபர் தேர்தல் வரை அமெரிக்காவில் இருக்க முடிவு செய்து, மனைவி அனோமாவுடன் அங்கே போய்விட்டார். அங்கிருந்து அவர் கிளப்பிவிடும் ஏவுகணைகள்தான் ராஜபக்ஷே சகோதரர்களை அதிரச் செய்திருக்கிறது! ஃபொன்சேகாவுக்கு நெருக்கமான சில சிங்கள எம்.பி-க்களிடம் இது குறித்துப் பேசினோம். ''அதிபரின் தம்பி கோத்தபய, பகிரங்கமாக ஃபொன்சேகாவுக்கு எச்சரிக்கை விடுக்கிற அளவுக்கு இரு தரப்புக்கும் இடையே நடக்கும் மோதல் வெளிப்படையாகிவிட்டது. இதனால்தான், ஃபொன்சேகா அமெரிக்கா கிளம்பிப் போனார். அவர் முதலில் போனது சிங்கப்பூருக்குதான். அங்கு எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் சிங்கள எம்.பி-யான ஜெயலத் ஜெயவர்த்தனே ஆகியோரை 'கிரவுன் பிளாஸா ஹோட்ட'லில் சந்தித்து பேசிய ஃபொன்சேகா, அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கலந்தாலோசித்தார். மிக ரகசியமாக நடந்த இந்த சந்திப்பு உளவு அமைப்புகளால் மோப்பம் பிடிக்கப்பட்டு, ராஜபக்ஷேவின் கவனத்துக்குப் போயிருக் கிறது. இதற்கிடையில், அமெரிக்கா சென்றுவிட்ட ஃபொன்சேகா, வாஷிங்டனில் உள்ள புத்த விகாரையில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். அங்கு உரையாற்றிய அவர், 'சீருடை அணிந்த ஜெனரல்கள் தொடர்ந்து ராணுவ சேவையிலேயே இருந்துவிட முடியாது. நான் ஏற்கெனவே ஓய்வு பெறும் வயதைத் தாண்டி நான்கு வருடங்கள் பணியாற்றி விட்டேன். இருந்தும் நாட்டுக்காகத் தொடர்ந்து சேவை செய்யும் எண்ணம் எனக்கிருக்கிறது. எனது சீருடையைக் கழற்றிவிட்ட பிறகும்கூட சமூக சேவைகளின் மூலமாக நாட்டுக்கு சேவை செய்யும் எண்ணத்தில்தான் இருக்கிறேன். பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதால் மட்டுமே... நாட்டின் பாதுகாப்பு 100 சதவிகிதம் உறுதியாகி விடவில்லை. யுத்தத்தின்போது இடம்பெயர்ந்தமக்களுக் கிடையே ஊடுருவியுள்ள புலிகளை அடையாளம் காண வேண்டும். ஏனைய மக்களை மீண்டும் அவர்களது வாழ்விடங்களுக்கே அனுப்பவேண்டும். இந்த மக்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால், இன்னும் பல பிரபாகரன்கள் இலங்கையில் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக, சாதித்த வெற்றி பற்றியே தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதால் எந்த ஒரு பயனும் ஏற்படாது' என ராஜபக்ஷேவின் நடவடிக்கை களையும் துணிச்சலாக விமர்சித்துப் பேசியிருக்கிறார் ஃபொன்சேகா. அதனால் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி களின் பொது வேட்பாளராக அவர் போட்டியிடப் போவது உறுதியாகிவிட்டதாகவே தோன்றுகிறது!'' என்கிறார்கள் அந்த சிங்கள எம்.பி-க்கள். தெம்பு கொடுக்கும் தேரர்கள்! ''இலங்கையின் அரசியலமைப்பைப் பொறுத்த வரைக்கும் புத்த விகாரையில் இருக்கும் புத்த பிட்சுகளான தேரர்களின் பங்கு மிகவும் முக்கியம். அவர்கள் நினைத்தால் யாரையும் அரசியல் செல்வாக்கில் கொண்டு வருவார்கள். அதோடு, எத்தகைய சக்தி படைத்தவர்களையும் அரசியலில் இருந்து ஓரங்கட்டி விடுவார்கள். தற்போது, அந்த தேரர்களின் ஆதரவு மெள்ள மெள்ள ஃபொன்சேகாவுக்கு கைகூடி வருகிறது. வாஷிங்டன் விகாரையில் பாராட்டுக் கூட்டம் முடிந்ததும், அங்குள்ள பிரதம தேரர் தர்மசிறீயை தனியே சந்தித்தார் ஃபொன்சேகா. அப்போது தனது சாதனைகளையும் வேதனைகளையும் எடுத்துரைத்த ஃபொன்சேகா, வாஷிங்டன் நிகழ்ச்சியின் போதுகூட கூட்டுப்படைகளின் தளபதி என்ற முறையில் தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில், அமெரிக்காவுக்கான இலங்கை தூதர் ஜாலிய விக்ரமசூரியாவோ, தூதரக அதிகாரிகளோ கலந்து கொள்ளாததையும் சொல்லி வருந்தியிருக்கிறார். இதையெல்லாம் கேட்ட தேரர் தர்மசிறீ, 'நடப்பது நல்லதாகவே நடக்கும்; நீங்கள் தேர்தலுக்குத் தயாராகுங்கள்' என ஃபொன்சேகாவுக்கு ஆசி கூறி அனுப்பியிருக்கிறார்!'' என்கிறார்கள் கொழும் பில் உள்ள சில பத்திரிகையாளர்கள். பதிலடி பாய்ச்சல்! ஃபொன்சேகாவின் அமெரிக்கப் பேச்சுக்கு பதிலடி யாக, அவருக்கு பதிலாக ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெஃப்டினென்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, இலங்கை ராணுவத் தலைமையகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறார். ''ராணுவத்தில் உள்ளோர் அரசாங்கத்துக்கு ஆதரவாக மட்டுமே செயல்பட முடியும். ராணுவச் சீருடை அணியும் எந்தவொரு அதிகாரிக்கோ, படைச் சிப்பாய்க்கோ அரசியலில் ஈடுபடும் உரிமை கிடையாது. அதை மீறி செயல்படுபவர்களின் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!'' என பேசியிருக்கிறார். இன்னொரு பக்கம் ஊடகத் துறை அமைச்சரான யாப்பாவோ, ''ஃபொன்சேகாவின் கருத்து தனிப்பட்ட ஒன்று; அதைப் பற்றி அரசாங்கம் கவலைப்படாது!'' என கருத்துத் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில், நேபாள நாட்டுக்குப் பயணமாகி... வழியில் திருப்பதிக்கு வந்த அதிபர் ராஜபக்ஷே, ஃபொன்சேகாவின் அடுத்தடுத்த மூவ் குறித்துக் கேட்டறிந்தபடியே இருந்திருக்கிறார். 'ஃபொன்சேகாவின் அரசியல் ஆசைக்கு எதிராக யாரும் சீண்டும் வகையாகப் பேச வேண்டாம்' என அவர் தடை போட்டாராம். அதன் பிறகுதான், இலங்கையின் பாதுகாப்புத் துறை செயலாளரான கோத்தபய ராஜபக்ஷே, 'அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனாலும், ராணுவ யூனிஃபார்மை கழற்றி வைத்துவிட்டு வருவது நல்லது!' என சற்றே மென்மை காட்டிப் பேசினாராம். அதிரடி அமெரிக்கா! ராஜபக்ஷேவுக்கும், ஃபொன்சேகாவுக்கும்இடையே நடக்கும் மோதல்களைக் கண்காணித்துக்கொண்டி ருக்கும் அமெரிக்கத் தரப்பு, ராஜபக்ஷே சகோதரர் களுக்கு எதிரான போர் குற்ற விசாரணைகளில் ஃபொன்சேகாவை சாட்சியமளிக்க வைக்க முயற்சித்து வருகிறது. இதனால், ராஜபக்ஷே தரப்பு ஏகத்துக்கும் வாடிக் கிடக்கிறது. இது பற்றி நம்மிடம் சில இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள் பேசினார்கள். ''இலங்கையின் மீது போர் குற்ற விசாரணைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர். 68 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் 2008 மே 2-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெற்ற 170 போர் குற்றங்கள் இடம்பெற்றிருக்கிறதாம். இதில், ராஜபக்ஷேவின் சகோதரர் கோத்தபயவைத்தான் பிரதானமாகக் குற்றம் சாட்டுகிறார்களாம். அமெரிக்காவுக்கு ஃபொன்சேகா வந்ததுமே, அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் ராபர்ட் ஓ பிளேக்கை சந்திப்பதோடு, ஹவாய் தீவில் ஹிலாரியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், இரண்டையுமே திடீரென கேன்சல் செய்த அமெரிக்கா, ஃபொன்சேகாவுக்கு மறைமுகமாக ஓர் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. போர்க்குற்றங்களில் ராஜபக்ஷே மற்றும் கோத்தபய ஆகியோரின் தொடர்புகளை பற்றிய சாட்சியங்களை அளித்து, அவரை அப்ரூவராக மாற அமெரிக்கா நிர்ப்பந்தித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே, ஃபொன்சேகாவின் க்ரீன் கார்டு குடியுரிமையைப் புதுப்பிக்காமல் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. அதோடு, அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்காக வருகிற 4-ம் தேதி தங்கள் முன் ஆஜராகும்படி ஃபொன்சேகாவுக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது. அவர் தங்களுக்கு எதிராக சாட்சியமளித்தால், பெரிய சிக்கலாகிவிடும் என்பதால் ராஜபக்ஷே தரப்பு அவரைத் தொடர்புகொண்டு சமாதானப்படுத்த முயன்றது. இது எதையும் கண்டுகொள்ளாத ஃபொன்சேகா, வெள்ளை மாளிகையின் முன்னாள் வழக்கறிரான பிரெட் பீல்டிங்கிடம் ஆலோசனை கேட்டிருக் கிறார். அவரும் 'நடந்த போர்க் குற்றங்களைக் ஒப்புக்கொண்டு அப்ரூ வராக சாட்சியமளிப்பதுதான் நல்லது' என ஃபொன்சேகாவுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறாராம். இன்னொரு பக்கம், ஃபொன்சேகா தங்கள் கைமீறிப் போய்விடாத வண்ணம்... அவருக்கு 'உதவியாக' ஒரு சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர் களை இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்திருக்கிறது. ஆனால், ராஜபக் ஷேவைக் கவிழ்க்க சரியான சந்தர்ப்பமாக ஃபொன்சேகா இதைக் கருதுவதால் ரகசியமாக போர்க் குற்றங்கள் தொடர்பாக சில ஆவணங்களை அமெரிக்காவிடம் வழங்குவார் எனவும் இலங்கையில் ஒரு பேச்சிருக்கிறது. ஒருவேளை, ஃபொன்சேகா தங்களைக் காட்டிக் கொடுத்தால் அதை வைத்தே சிங்கள மக்களிடம் அனுதாபம் தேடும் திட்டத்தையும் தீட்டி வைத்திருக்கிறதாம் ராஜபக்ஷே தரப்பு!'' என்றார்கள் அந்த தமிழ் எம்.பி-க்கள். பொம்மை அதிபர் ஃபொன்சேகா! ''ராஜபக்ஷே மற்றும் கோத்தபய மீது போர்க் குற்ற நடவடிக்கைகளைப் பாய்ச்சப் போகும் அமெரிக்க அரசு, ஃபொன்சேகாவை இலங்கைக்கு அதிபராக்கும் முடிவிலும் இருக்கிறது. அதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கையில் ஆதிக்கத்தை செலுத்த முயற்சிக்கும் நிலையில் 'அதிபரே எங்க ஆள்' எனச் சொல்லும் விதமாக ஃபொன்சேகாவை பொம்மையாக்கி, இலங்கையில் பலமாக தன் காலை ஊன்ற முயற்சிக்கிறது அமெரிக்கா. உண்மையில்... கொஞ்சமும் மனசாட்சியின்றி போர்க் குற்றங்களை அரங்கேற்றியதில் ஃபொன்சேகாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. அப்படியிருக்க அவர் திடீர் அப்ரூவர் அவதாரம் எடுக்கிற பின்னணியில் அமெரிக்காவின் உளவு அமைப்புகளின் கைங்கர்யங்கள் பலமாக இருக்கின்றன. புலிகளுடனான போரில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டபோது, வேடிக்கை பார்த்த அமெரிக்கா, இப்போது போர்க் குற்றங்களை விசாரிக்கத் துணிவது இலங்கையின் ஆட்சி நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரத்தான். இலங்கையில் கால் வைக்கும் எண்ணத்தில் சில வருடங்களுக்கு முன்பு புலிகளுடன்கூட பேச்சு வார்த்தை நடத்தியது அமெரிக்கா. ஆனால், புலிகளோ... 'தனிஈழம்' என்கிற கொள்கையிலேயேஉறுதியாக இருந்தனர். அதனால்கடுப்பாகிப் போன அமெரிக்கா, சிங்கள அரசுக்கு ஆதரவு காட்டியது. இப்போது ராஜபக்ஷேவுக்கும் ஃபொன்சேகா வுக்கும் மோதலை உண்டாக்கி அதில் குளிர்காயத் துடிக்கிறது. புலிகளை அழிப்பதற்காக இலங்கைக்கு ஆயுத உதவிகள் செய்த இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இப்போது தான் அமெரிக்காவின் சதி புரியத் தொடங்கி இருக்கிறது!'' என்கிறார்கள் இலங்கை விவகாரத்தைத் தொடர்ந்து கவனிக்கும் உலக உற்றுநோக் காளர்கள். எப்படியோ... இலங்கையின் வரலாற்றில் அடுத்த சில நாட்களும் மிக முக்கியமானவையாக இருக்கு மென்றே தோன்றுகிறது! | ||||
|
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment