Tuesday, February 2, 2010

நியூட்டனின் நிஜமான 'ஆப்பிள் கதை'

நியூட்டனின் நிஜமான 'ஆப்பிள் கதை'- இணையத்தில் காணலாம்

லண்டன்: சர் ஐசக் நியூட்டன் 'ஆப்பிள் கதை' குறித்து உரையாடலை பதிவு செய்த 300 ஆண்டு பழமைவாய்ந்த மூல கையெழுத்துப் பிரதி முதல்முறையாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 

லண்டனில் உள்ள 'தி ராயல் சொசைட்டி'யின் இணைய தளம் மூலம் இதை பொதுமக்கள் பார்வையிடவும், படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் பழம் பூமியை நோக்கி விழுவதைக் கண்டபோது, பளபளவென மூளையில் ஆயிரம் வாட்ஸ் பல்புகள் எரிந்தது போல ஈர்ப்பு விசைக் கொள்கை சர் ஐசக் நியூட்டனுக்கு படிபட்டது என்று வரலாறு கூறுகிறது.

இது உண்மையில் நடந்த நிகழ்ச்சி என்பதில் சந்தேகமில்லை என ஒருதரப்பில் கூறுகின்றனர். மற்றொரு தரப்பினர், நியூட்டன் ஈர்ப்பு விசை பற்றி இளம் வயதிலேயே சிந்திக்கத் தொடங்கிவிட்டார். 

அதை பிறர் புரிந்துகொள்ளும் வகையில் விவரித்து சொல்வதற்காக இப்படி ஒரு 'ஸ்கிரிப்ட்'ஐ உருவாக்கினார் என்றும் கூறிவருகின்றனர்.

எப்படியானாலும், மேஜையில் இருந்து காப்பி டம்ளர் கீழே விழுவது முதல் கோள்கள் சூரியனை சுற்றிவருவது வரை ஒரு புரிதலை ஏற்படுத்தி அறிவியல் புரட்சியை ஏற்படுத்தியது நியூட்டனின் விதிகள். 

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நியூட்டன் பிளேக் நோய் காரணமாக கல்லூரி மூடப்பட்டதால் சொந்த ஊருக்கு சென்று நாட்களை கடத்திய போது 1660களின் மத்தியில் இந்த ஆப்பிள் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

நியூட்டனுடன் சஞ்சரித்து, பல்வேறு விவகாரங்களை பரிமாறிக் கொண்ட நண்பரும், விஞ்ஞானியுமாக அறியப்படுபவர் வில்லியம் ஸ்டூக்லி.

இவர் நியூட்டனின் அனுபவத்தை அவரிடமே நேரடியாகக் கேட்டு குறிப்புகளை எழுதி வைத்திருந்தார். சுமார் 1720ம் ஆண்டுவாக்கில் இந்த பதிவுகள் செய்யப்பட்டுள்ளது.

நியூட்டன் விதிகள் பிரபலமடைந்த பின்னர் இந்த கையெழுத்துப் பிரதி சிலரால் மறைக்கப்பட்டும், திருடப்பட்டும், எங்கிருக்கிறது என்று தெரியாமலே போனது. 

சமீபத்தில் இந்த மூல கையெழுத்துப் பிரதிகளை பிரட்டனின் தி ராயல் சொசைட்டி கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் பத்திரப்படுத்தியது.

தற்போது ராயல் சொசைட்டி 350வது ஆண்டு விழாவை கொண்டாடும் நிலையில் மிகப் பெருமையும், அறிவியல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுமான இந்த பிரதிகளை முதல்முறையாக பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளது.

திங்கள்கிழமை முதல் இம்மூலப் பிரதிகளை இணையம் வழியாக யார்வேண்டுமானாலும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தி ராயல் சொசைட்டி தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் இப்ப்பிரதிகளை பதிவிறக்கம் செய்துவைத்துள்ளது.

ராயல் சொசைட்டியின் ஆவணக் காப்பாளர் இதை நேற்று அறிவித்தார். 

நியூட்டன் பேசிய வார்த்தைகள் எவ்வித வரலாற்றுத் திரிபுகள், சிதைவுகள், ஏற்ற-இறக்கங்கள், இகழ்ச்சி-புகழ்ச்சி போன்றவை இல்லாமல் உள்ளபடியே இதில் இடம்பெற்றிருப்பது இதன் சிறப்பு என வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails