பாகிஸ்தானில் தொடங்கி, அப்படியே மியான்மர், இந்தப் பக்கம் இலங்கை, அந்தப் பக்கம் வட கொரியா, அப்புறம் நேபாளம் என செம்படைகளின் தளங்களை விரிவடையச் செய்வதுதான் சீனாவின் நோக்கம் என சுட்டிக்காட்டுகின்றது தமிழ்நாட்டு நாளேடான தினகரன். 'சீனாவின் ஆசை' என்னும் தலைப்பில் தினகரன் எழுதியுள்ள தலையங்கமாவது:
அமெரிக்கா முதலாளித்துவ நாடு. சீனா கம்யூனிச நாடு. கொள்கை அடிப்படையில் இரண்டுமே இரு துருவங்கள். ஆனால் சர்வதேச அரசியலில் அதிகாரம், ராணுவ பலம், வலுவான பொருளாதாரம் போன்ற விஷயங்களில் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று போட்டிதான்.
இந்தப் போட்டி, அடுத்த நாடுகளில் ராணுவ தளங்களை அமைப்பதிலும் வந்துவிட்டது.
உலகிலேயே அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மட்டும்தான் தங்கள் நாடுகளில் மட்டுமல்லாது மற்ற நேச நாடுகளிலும் ராணுவ தளங்களை வைத்துள்ளன.
கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் வந்துவிட்ட பிறகு, அந்த ஏவுகணைகளை ஆரம்பத்திலேயே அழிப்பதற்கும் ராணுவ தளங்கள் இருக்கும் நாடுகளின் பாதுகாப்புக்கும் இது அவசியமாகிவிட்டது.
இந்த ஆசை இப்போது சீனாவுக்கும் வந்துவிட்டது. பாகிஸ்தானில் ராணுவ தளம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது சீனா.
சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள உக்கூர் பிராந்தியத்தில் தீவிரவாதப் பிரச்னை இருக்கிறது. தனி நாடு கேட்டுப் போராடி வரும் இந்தப் பகுதி தீவிரவாதிகளின் நடமாட்டத்தை அறிய, பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் உள்ள வடமேற்கு மாகாணத்துடன் சீனா ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது.
இப்போது அந்தப் பகுதியில் ஒரு ராணுவ தளத்தை அமைப்பதன் மூலம் தீவிரவாதிகளை அடக்குவது சீனாவுக்கு எளிதாகிவிடும். இது இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாகி விடும் என்பதுதான் பிரச்னை.
பாகிஸ்தான் தனக்குத் தேவையான ராணுவ தளவாடங்களில் 70 சதவீதத்தை சீனாவிடம்தான் வாங்கி வருகிறது. சப்ளையை நிறுத்திவிடுவேன் என மிரட்டியே காரியத்தை சாதிக்கலாம். இந்தியாவை மிரட்ட இதையும் ஒரு வாய்ப்பாக பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தனக்கும் பாதுகாப்பு, சீனாவுக்கும் உதவி செய்தது போல் ஆகும் என்பதால் பாகிஸ்தானும் ராணுவ தளம் அமைத்துக் கொள்ள அனுமதிக்கும். பாகிஸ்தானில் தொடங்கி, அப்படியே மியான்மர், இந்தப் பக்கம் இலங்கை, அந்தப் பக்கம் வட கொரியா, அப்புறம் நேபாளம் என செம்படைகளின் தளங்களை விரிவடையச் செய்வதுதான் சீனாவின் நோக்கம்.
உலகம் முழுக்க ராணுவ தளங்கள் வைத்திருக்கும் அமெரிக்காவை விமர்சனம் செய்துவந்த சீனா, இப்போது இதுபோன்ற ராணுவ தளங்கள் மூலம் பிராந்திய ஒற்றுமை அதிகரிக்கும் என புதிய விளக்கம் கூறி வருகிறது. |
No comments:
Post a Comment