சிறிய மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் தங்கள் நிர்வாக நடவடிக்கை களுக்கான செலவினைக் குறைக்கும் வழிகளை மைக்ரோசாப்ட் தன் ஆன்லைன் சேவை மூலம் வழங்குகிறது. டில்லியில் அண்மையில் இந்த சேவை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதன் தொடக்க கட்டணம் மாதம் ரூ.95 (2 டாலர்). மின்னஞ்சல், இன்டர்நெட் ஒருங்கிணைப்பு, இன்டர்நெட் வழி கான்பரன்சிங் மற்றும் இவை சார்ந்த வழிகளை ஒரு நிறுவனம் தனக்கெனப் பெற்றுப் பயன்படுத்த முடியும். இந்த சேவையினைwww.microsoft.com/india/onlineservices என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவன இணைய தளம் சென்று பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். பயன்படுத்தும் சேவைக்கேற்ப கட்டணம் செலுத்தினால் போதும். இதன் மூலம் வணிக நிறுவனங்கள் தங்களுக்கென இணைய தள சேவையை கூடுதல் செலவின்றி பெற முடியும். மேலும் இந்த சேவையினைத் தங்கள் நிறுவன வளாகம் மட்டுமின்றி, எந்த இடத்திலிருந்தும் பெற முடியும். இதனால் நிறுவனத்தின் நிர்வாகத்திறன் உயரும் வாய்ப்புகள் அதிகமாகிறது. இன்றைய போட்டி மிகுந்த உலகில், வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்களின் ஒவ்வொரு செயல்பாட்டுப் பிரிவிலும் கூடுதல் கவனத்தைச் செலுத்தி, செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. அந்த வகையில் நிர்வாகக் காரணங்களுக்கான செலவை மிச்சப்படுத்த இந்த ஆன்லைன் வசதி கை கொடுக்கும் என இதனை அறிமுகப்படுத்திய விழாவில் மைக்ரோசாப்ட் பிசினஸ் குரூப் தலைவர் ஸ்டீபன் குறிப்பிட்டார். இந்த சேவைகளை நிறுவனங்களுக்கு வழங்குவதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் எச்.சி.எல். இன்போசிஸ்டம்ஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய முன்னணி நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்த சேவை முறை, சோதனை முறையில் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் ஏறத்தாழ 1,800 பேர் இதனைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் நிறைவான வரவேற்பினைத் தெரிவித்ததால், சென்ற நவம்பர் 7 முதல் இது முழுமையாக அறிமுகமாகியுள்ளது. இந்த சேவைப்பிரிவில் மின்னஞ்சல்களுக்கு ஆன்லைன் எக்சேஞ்ச், இணைய தளங்களைப் பயன்படுத்த ஆபீஸ் ஷேர் பாய்ண்ட், வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவன அலுவலர்கள் இடையே கலந்தாய்வு மேற்கொள்ள ஆபீஸ் லைவ் மீட்டிங், இன்ஸ்டண்ட் மெசேஜ் அனுப்பி பதில் பெற மைக்ரோசாப்ட் ஹோஸ்டட் சர்வீசஸ் மற்றும் மைக்ரோசாப்ட் கம்யூனிகேஷன்ஸ் ஆன்லைன் ஆகிய வசதிகள் தரப்படுகின்றன.
No comments:
Post a Comment