தமிழில், இயற்கையில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள் குறித்து அதிகமான புத்தகங்கள் இல்லையே என்கிற ஏக்கம் எனக்கு எப்போதும் உண்டு. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் படித்து, இயற்கையின் மீது அதிகப் பிடிப்புக் கொள்கிற மாதிரி சுவாரசியமான நூல்கள் இல்லாத வருத்தம் உண்டு. அந்த ஏக்கம் விஜயா பதிப்பகத்தின் கொ.ம்£.கோதண்டம் எழுதிய 'காட்டுக்குள்ளே திருவிழா' என்ற அரிய நூலால் தீர்ந்தது. கதை சொல்வது போல் நேர்த்தியுடன் பல அரிய தகவல்கள் அதில் சொல்லப் பட்டிருக்கின்றன. 'ஜோதிப்புல்' என்கிற புல் வளர்ந்துள்ள இடத்தில் பளபளவென வெளிச்சம் பரவும் என்பது... நினைத்துப் பார்க்கவே இன்புறுத்துகிற செய்தி. மலையில் வாழ்கிற மக்கள் இயற்கை யோடு எப்படி இயைந்து வாழ்கிறார்கள் என்பது நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். 'அத்தாலொட்டி' என்கிற அதிசய மூலிகை, கிழித்தால் ஒட்டிக் கொள்ளும் தன்மையைக் கொண்ட இலைகளைக் கொண்டது என்பது, இயற்கையை எண்ணி வியக்க வைக்கிறது. பண்டித நேரு வருகிறபோது... ஆற்றங்கரையில் உப்பைக் குவித்து அவற்றைச் சுவைக்க, காட்டு யானைகளைக் கவர்ந்திழுத்த செய்தியும் காட்சிப்படுத்த வைக்கிறது. ராஜபாளையம் மேற்கு மலையடிவாரத்தில் 'மகாவில்வம்' என்கிற அதிசய மூலிகை மரம் இருப்பதாக எழுதியிருக்கிறார். அதன் சில இலைகளை அரைத்துச் சாறு எடுத்து, சரியாகத் தண்ணீர் விட்டு ஒரு குவளை அருந்தினால், உடல் முழுவதும் புதுத்தெம்பு ஏற்படுமென்றும், அது மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நல்ல பயனைத் தரும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேற்கத்திய மருத்துவ முறைக்கு மாறிய நாம், எவ்வாறு நம் அரிய மூலிகைப் பொக்கிஷங்களை மறந்து விட்டோம் என்பது மனத்தை உறுத்துகிறது. 'தா வரம்' என்பதுதான் தாவரமானது என்கிற நயமன் விளக்கமும் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. குங்கிலிய மரத்தைப் பற்றியும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். கழுதைப் புலியைப் பற்றியும் எழுதியிருக்கிறார். கழுதைப் புலிகள் பத்துப் பதினைந்து சேர்ந்தால் புலியைக் கூட விரட்டி விடுமாம். புலிகளை ஏமாற்றுவதற்கு பழங்குடியினர் முகமூடியைப் பயன்படுத்துவதைப் பல இடங்களில் கேள்விப்பட்டிருக் கிறேன். காரணம், புலி எப்போதும் பின்புறமாகப் பாய்ந்து கழுத்தைப் பிடித்துக் கொல்லும். எனவே, மனித முகத்தைப் போல முகமூடி செய்து தலைக்குப் பின்னால் கட்டிவைத்து விட்டால், புலி திக்குமுக்காடிப் போகும். 'மலைமொங்கான்' என்கிற பறவை, மரத்தின் பொந்தில் முட்டையிட்டு சீல் வைத்துவிடும் விஷயமும் சுவாரசியமானது. ஜோதிமரம் என்கிற மரத்தின் கட்டையில் படிந்திருக்கும் பூஞ்சானில் இருந்து ஒளி வருகிற செய்தியும், வரையாடு பற்றிய குறிப்பும், வயதான புலிகள் யானைக் குட்டியைத் தாக்கிக் கொன்று தின்கின்ற தகவலும் நூலில் உள்ளன. 'சுற்றுச்சூழல் சுற்றுலா' என்கிற புதிய அனுபவத்தை சுற்றுலாத்துறை வழங்கி வருகிறது. இந்நூலை வாசிப்பவர்கள், நெரிசலான நகரப் பகுதிகளிலிருந்து இளைப்பாறும் பொருட்டு இயற்கையை இன்னும் அதிக ஆர்வத்தோடு அணுகுவார்கள். |
No comments:
Post a Comment