Monday, February 8, 2010

பூலான்தேவி கொள்ளைக்காரியாக மாறிய வரலாறு பாகம்-2

முதல்_மந்திரி முன்னிலையில் பூலான்தேவி சரண்: துப்பாக்கிகளை ஒப்படைத்தாள்
முதல்_மந்திரி முன்னிலையில் பூலான்தேவி சரண்: துப்பாக்கிகளை ஒப்படைத்தாள்பூலான்தேவியின் இனத்தைச் சேர்ந்த கிராம மக்கள் அவளுக்கு மறைமுக ஆதரவு கொடுத்து வந்தனர். உயர் சமூகத்தினர் தொந்தரவில் இருந்து தங்களை காப்பாற்றும் கேடயம் பூலான்தேவி என்று கருதினார்கள்.
 
இதற்கிடையில் போலீஸ் வேட்டை தீவிரம் அடைந்ததால், பூலான்தேவி சரண் அடைய முடிவு செய்தாள். சில நிபந்தனைகளை விதித்து இருந்தாள். அவளது தங்கை மற்றும் குடும்பத்தினரை போலீசார் பிடித்து காவலில் வைத்தனர்.
 
இதனால் பூலான்தேவி சரண் அடைவதில் ஆர்வமாக இருந்தாள். சில மாத காலம் சமரச தூது நடைபெற்றது. இறுதியில் மத்திய பிரதேசத்தில் சரண் அடைய விரும்புவதாகவும், அங்கு தனது பெற்றோரை அழைத்து வந்து பாதுகாப்பு தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தாள். அதனை போலீசார் ஏற்றுக்கொண்டு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர்.
 
இதனை அடுத்து பூலான்தேவி தனது கொள்ளை கோஷ்டியுடன் மத்தியபிரதேசம் சென்றாள். 11_2_1983 அன்று மத்தியபிரதேச மாநிலம் ஜக்மோரி கிராமத்தின் அருகே உள்ள காட்டில் இருந்து அவள் வெளியே வந்தாள்.
 
நேராக நயாகாவோன் போலீஸ் நிலையத்துக்குச் சென்று ஆஜரானாள். அவளுடன் கொள்ளைக்கூட்டத்தைச் சேர்ந்த மேலும் 4 பேர் சென்றார்கள். அவர்கள், பிந்து நகரத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டார்கள். அங்கு காவலில் வைக்கப்பட்டார்கள்.
 
பிந்து நகரம் குவாலியரில் இருந்து 50 மைல் தூரத்தில் உள்ளது. இந்த தகவல்களை, சம்பல் பள்ளத்தாக்கு போலீஸ் டி.ஐ.ஜி. என்.டி.சர்மா அறிவித்தார். மகுவா கிராமத்தில் நடக்கும் யாகத்தைப் பார்க்க வேண்டும் என்று பூலான்தேவி விருப்பம் தெரிவித்தாள்.அதை நிறைவேற்றுவதற்காக அவளை யாகம் நடக்கும் இடத்துக்கு கொண்டு சென்றார்கள்.
 
என்றபோதிலும் பூலான்தேவி சரண் அடைவது சம்பிரதாயமாக பொதுமக்கள் முன்னிலையில் பிந்து நகரத்தில் 12_2_1983 அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் என்றும், மத்தியபிரதேச முதல்_மந்திரி அர்ஜூன்சிங் முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைவாள் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
மத்தியபிரதேசத்தில், இதற்கு முன்பு ஏராளமான கொள்ளைக்காரர்கள் ஜெயப்பிரகாசர் வேண்டுகோளை ஏற்று சரண் அடைந்து இருக்கிறார்கள். பெண் கொள்ளைக்காரிகள் யாரும் சரண் அடையவில்லை. பெண் கொள்ளைக்காரியான அசீனா, புட்லிபாய் இருவரும் முன்பு போலீசாருடன் நடத்திய துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டார்கள்.
 
1982_ம் ஆண்டு ஜுன் மாதம் 17_ந்தேதி, பிரபல கொள்ளைக்காரன் மல்கான்சிங், பிந்து நகரில்தான் முதல் மந்திரி அர்ஜூன்சிங் முன்னிலையில் புதுவாழ்வு தொடங்கினான். அதே இடத்தில்தான் பூலான்தேவியும் சரண் அடைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
அறிவிக்கப்பட்டபடியே பிந்து நகரில் உள்ள சிவாஜிராவ் சிந்தியா கல்லூரி மைதானத்தில் விசேஷ மேடை அமைத்து இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்_மந்திரி அர்ஜூன்சிங் தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு பிந்து நகரத்துக்கு வந்தார். சரியாக 9 மணிக்கு பூலான்தேவி மேடைக்கு வந்தாள்.
 
அவள் காக்கி நிற யூனிபாரம் அணிந்து இருந்தாள். நெற்றியை சுற்றி வழக்கம்போல சிவப்பு நிற ரிப்பன் கட்டி இருந்தாள். தோளில் துப்பாக்கியும், மார்பை சுற்றி துப்பாக்கி குண்டு `பெல்ட்'டும் காட்சி தந்தன. 3 மலர் மாலைகள் தயாராக இருந்தன. அதில் ஒன்றை மேடையில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி படத்துக்கும், மற்றொன்றை துர்க்காதேவி படத்துக்கும் அணிவித்தாள். 3_வது மாலை முதல்_ மந்திரி அர்ஜூன்சிங்குக்கு அணிவிக்கப்பட்டது.
 
பிறகு சரியாக 9_45 மணிக்கு பூலான் தேவி முதல்_மந்திரி அர்ஜூன்சிங் முன்பு சென்று மண்டியிட்டு காலை தொட்டு கும்பிட்டாள். தான் எடுத்து வந்த துப்பாக்கி மற்றும் துப்பாக்கி குண்டுகளை முறைப்படி ஒப்படைத்து சரண் அடைந்தாள்.
 
இந்த நிகழ்ச்சியை பார்க்க மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து இருந்தார்கள். அவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள். அவர்களைப் பார்த்து பூலான்தேவி கைகளை அசைத்தாள். பிறகு இரு கைகளையும் கூப்பி கும்பிட்டாள். அப்போது கூடியிருந்த மக்களும் அவளை நோக்கி உற்சாகமாக கைகளை அசைத்தார்கள்.
 
பின்னர் பூலான்தேவியின் கொள்ளை கூட்டத்தைச் சேர்ந்த 7 பேர் தங்கள் துப்பாக்கிகளையும், வெடிமருந்துகளையும் ஒப்படைத்துவிட்டு முதல்_மந்திரியிடம் சரண் அடைந்தார்கள். சரண் அடைந்தவர்களில் பூலான்தேவியின் காதலன் மான்சிங்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே நிகழ்ச்சியில் வேறு சில கொள்ளை கோஷ்டிகளைச் சேர்ந்த 24 கொள்ளைக்காரர்களும் சரண் அடைந்தார்கள்.
 
கொள்ளைக்காரர்கள் சரண் அடைந்த பிறகு முதல்_மந்திரி அர்ஜூன்சிங் பேசினார். அவர் கூறுகையில், "எந்தவித நிபந்தனையும் இன்றி பூலான்தேவி சரண் அடைந்து இருக்கிறார். இது போலீசாரின் அயராத முயற்சிக்கு கிடைத்த வெற்றி" என்று குறிப்பிட்டார். பூலான்தேவி சரண் அடைந்த நிகழ்ச்சி சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.
 
பூலான்தேவியை ஒலிபெருக்கியில் பேசும்படி போலீஸ் அதிகாரி கேட்டுக்கொண்டார். அவள் பேச மறுத்து ஒரு காகிதத்தை நீட்டினாள். அதில் 27 கோரிக்கைகள் எழுதப்பட்டு இருந்தன. அதில் முக்கியமானவை வருமாறு:-

எங்களை தூக்கில் போடக்கூடாது.
கை விலங்கு மாட்டக்கூடாது.
போலீஸ் காவலில் வைக்கக்கூடாது.
தனி கோர்ட்டில் விசாரிக்க வேண்டும்.
 
ஜலான் மாவட்டத்தில் படித்து வரும் என் 14 வயது தம்பிக்கு வேலை கொடுக்கவேண்டும். உத்தரபிரதேசத்துக்கு திருப்பி அனுப்பக்கூடாது. சிறையில் விசேஷ வகுப்பில் வைக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் பூலான்தேவி எழுதி இருந்தாள்.
 
"கொள்ளைக்காரியாக வாழ்ந்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி" என்று ஒரு கேள்விக்கு பதில் அளித்தாள். சரண் அடைவதற்கு முன் பூலான்தேவிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவள் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டாள். முன்தினநாள் முழுவதும் அவள் எதுவும் சாப்பிடவில்லை. சரண் அடைந்த பிறகு, பூலான்தேவி குவாலியர் நகர சிறையில் அடைக்கப்பட்டாள்.
 
சரண் அடைந்தபோது பூலான்தேவிக்கு 26 வயதுதான்

source:மாலைமலர்

தொடரும்................

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails