Saturday, February 6, 2010

'ஆர்குட்'டில் நுழைந்து விட்டது ஆர்.எஸ்.எஸ்.,

 

நாக்பூர் : எப்போதும் தனது தொண்டர்களை நேரடியாகவே தொடர்பில் வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்., இன்றைய நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த தவறுவதில்லை. சமூக வலைத்தளங்களில் பிரபலமான  "ஆர்குட்' போன்றவற்றையும் அது பயன்படுத்திக் கொள்கிறது. ஆர்.எஸ்.எஸ்.,சைப் பொறுத்தவரை, தொண்டர்களை நேரடியாகத் தொடர்பில் வைத்திருப்பதுதான் அதன் பலம் என்று  குறிப்பிடுவர். தகவல் தொழில்நுட்பம் அபரிமிதமாக வளர்ந்து விட்ட இன்றைய சூழலிலும் ஆர்.எஸ்.எஸ்., தனது நேரடித் தொடர்பைத்தான் பலமாகத் தக்க வைத்துள்ளது.
இருப்பினும், அவ்வப்போது தேவையான அளவுக்கு நவீன தொழில்நுட்பத்தையும் அது பயன்படுத்திக் கொள்கிறது.  ஐ.டி., துறையிலுள்ள ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் தங்களுக்கிடையில் "ஆர்குட்' போன்ற சமூக வலைத்தளங்களில் தொடர்பு வைத்துக் கொள்கின்றனர். ஆண்டுதோறும் ஜன., 26ல் "பாரத மாதா பூஜை' தினம் ஆர்.எஸ். எஸ்.,சால் நடத்தப்படும். இந்த ஆண்டும், அவ்வாறு நடத்தப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம்,  இந்த ஆண்டு "ஆர்குட்' மூலம் தகவல் பரிமாறிக் கொண்டு "பாரத மாதா பூஜை' நடத்தப்பட்டது தான்.
ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு முழுநேர ஊழியர்களாக வருபவர்கள், நவீனதொழில்நுட்பத்தைக் கையாள்வதில் தேர்ந்தவர்களாகத்தான் இருக்கின்றனர்.  பழைய முழுநேர ஊழியர்களில் கூட சிலர் மொபைல் போன், இ-மெயில் தொடர்பு போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். இவற்றைப் பயன்படுத்துவதில் ஆர்.எஸ்.எஸ்.,சில் தடை எதுவும் இல்லையென்றாலும், நவீன தொழில்நுட்பத்தையே முழுக்க முழுக்க சார்ந்து இருப்பதை ஆர்.எஸ்.எஸ்., விரும்புவதில்லை.
இதுகுறித்து, அதன் செய்தித் தொடர்பாளர் இந்திரேஷ் குமார் கூறுகையில், "நமது கலாசார விழுமியங்களைக் கைவிட்டு விட்டு, வெறும் நவீன தொழில்நுட்பத்தை மட்டுமே சார்ந்திருந்தால் அந்தத் தொழில்நுட்பமே நம்மை அழித்து விடும்.  சுற்றுச்சூழல் மாசு, பொருளாதாரத்தில் சமநிலையின்மை, உலகவெப்பமயமாதல், ஊழல், விலைவாசியேற்றம், பயங்கரவாதம் போன்றவை நம் கலாசார விழுமியங்களை நாம் கைவிட்டதால் ஏற்பட்டவை தான்' என்று தெரிவித்தார். 


source:dinamalar


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails