Sunday, February 28, 2010

சிலி நாட்டு பூகம்ப பலி 300 ஆக உயர்வு, கோடிகளில் நஷ்டம் : ஜப்பான், ரஷ்ய தீவுகளில் சுனாமி பாதிப்பு

 Top global news updateசான்டியாகோ : சிலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்தது. பூகம்பத்தைத் தொடர்ந்து, பசிபிக் கடல் பகுதியில் உள்ள பல நாடுகளை சுனாமி தாக்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று முன்தினம் 8.8 ரிக்டர் அளவுக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. தலைநகர் சான்டியாகோ மற்றும் கன்செப்ஷன் நகரங்களில் பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாயின. இதுவரை 300 பேர் பலியாகியுள்ளதாக, சிலி அரசு தெரிவித்துள்ளது. பூகம்பத்தை தொடர்ந்து நில அதிர்வுகள் காணப்படுவதால், மக்கள் தெருக்களிலேயே தங்கியுள்ளனர். தண்ணீர் மற்றும் மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது.



சுனாமியால் பாதிப்பு : பூகம்பத்தை தொடர்ந்து சுனாமி ஏற்பட்டதால், துறைமுக நகரமான டால்கா ஹுயானோவில் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் எல்லாம் தூக்கி வீசப்பட்டு, நகரின் பிரதான சாலைகளில் கவிழ்ந்து கிடக்கின்றன. துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த  ஏராளமான கன்டெய்னர்கள், ராட்சத அலைகளால் நகரத்துக்குள் அடித்து வரப்பட்டு சிதறிக் கிடக்கின்றன. சிலி நாட்டில் தாமிர சுரங்கங்கள் அதிகம் உள்ளன. இதனால், செப்பு உலோக உற்பத்திக்கு இந்த நாடு  புகழ் பெற்றது. இந்த பூகம்பத்தால், பல சுரங்கங்கள் சேதமடைந்து விட்டன. இதனால், பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.



கைதிகள் தப்பி ஓட்டம் : சான்டியாகோ நகரில் உள்ள மத்திய சிறை, பூகம்பத்தால் சேதமடைந்ததால் சிறையில் இருந்த 269 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி 28 கைதிகளை மீண்டும் கைது செய்துள்ளனர். "தற்போதைய நிலவரப்படி சிலியில் உள்ள 15 மாநிலங்களில் ஆறு மாநிலங்கள் இந்த பூகம்பத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 20 லட்சம் பேர்  பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்' என, சிலி அதிபர் மிச்சேல் பேச்லெட் தெரிவித்துள்ளார். கன்செப்ஷன் நகரில் உள்ள 15 அடுக்கு கட்டடம், பூகம்பத்தால் தரைமட்டமானது. இதில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. சிலியில் ஏற்பட்ட பூகம்ப பாதிப்புகளை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி நாளை பார்வையிடுகிறார். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அளிப்பதாக அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு, உடனடியாக 25 கோடி ரூபாய் மதிப்புள்ள உதவிகளை அளிப்பதாக தெரிவித்துள்ளது.



ரஷ்யாவை தாக்கிய சுனாமி : பசிபிக் கடலில் ஏற்பட்ட சுனாமியால் சிலி மட்டுமல்லாது ஜப்பான் ரஷ்யா நாடுகளும், அமெரிக்காவின் ஹவாய் தீவும் பாதிக்கப்பட்டன. ஆஸ்திரேலியா , பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு மக்கள் உஷார் படுத்தப்பட்டனர். நியூசிலாந்தின் சதம் என்ற தீவை சுனாமி அலைகள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டன.



ஜப்பானின் ஹொகைடோ பகுதியில் உள்ள ஒகினாவா கடற்கரை பகுதியில்  சுனாமி காரணமாக கடலில் 10 அடி உயரத்துக்கு அலைகள் சீறி எழுந்தன. இதனால், இந்த கடற்கரை அருகே வசித்த மூன்று லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சில பகுதிகளில் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
மினாமிடோரி என்ற சிறிய தீவு தான் சுனாமியால் நேரடி தாக்குதலுக்குள்ளானது. 30 செ.மீ., அளவுக்கு இந்த தீவில் சுனாமி பதிவாகியுள்ளதாக ஜப்பானிய வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
ரஷ்யாவில் குரில் தீவு, சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மக்கள் அப்புறப்படுத்தப் பட்டுள்ளதால் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன


source:dinamalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails