Saturday, February 20, 2010

மொராக்கோ நாட்டில் பள்ளிவாசல் ஸ்தூபி இடிந்து 36 பேர் பலி

 


ரபாத், பிப்.21-

ஆப்பிரிக்காவில் உள்ளது மொராக்கோ. இந்த நாட்டில் உள்ள மேக்னஸ் நகரில் 18-ம் நூற்றாண்டு கட்டப்பட்ட பழமையான பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இந்த பள்ளிவாசலில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது.

அதற்கு முந்தைய நாட்களில் பலத்த மழை பெய்து இருந்த நிலையில் பள்ளிவாசலின் ஸ்தூபி ஒன்று, கூரையின் ஒரு பகுதியுடன் இடிந்து தொழுகை நடத்தியவர்கள் மீது விழுந்தது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் இடிபாடுகளில் சிக்கினார்கள்.

இந்த சம்பவத்தில் அந்த இடத்திலேயே 11 பேர் பலியானார்கள். நேரம் செல்ல செல்ல பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வந்தது. இறுதி நிலவரப்படி 36 பேர் பலியானார்கள். 71பேர் காயம் அடைந்தனர். பள்ளிவாசல் மக்கள் நெருக்கடி மிகுந்த நகரின் மையப்பகுதியில் அமைந்து இருந்ததால் மீட்புக்குழுவினர் மிகுந்த சிரமப்பட்டனர்.

காயம் அடைந்தவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த விபத்து பற்றி கேள்விப்பட்டதும் உள்துறை மந்திரியும், மற்ற மந்திரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மீட்பு பணியை தீவிரப்படுத்தினார்கள்.

இடிந்த பள்ளிவாசலை அதன் பழமை மாறாமல் புதிதாக கட்டப்படும் என்று அந்த நாட்டு மன்னர் 6ம் முகமது அறிவித்தார்.


source:dailythanthi

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails