Saturday, February 20, 2010

சிங்கள மக்களுக்கு தமிழை பயிற்றுவிக்க கத்தோலிக்க தேவாலயங்கள் முயற்சி



சிங்கள மக்களுக்கு தமிழை பயிற்றுவித்து இன வேற்றுமைகளை களைய கத்தோலிக்க தேவாலயங்கள் முயற்சி


சிறிலங்காவில் உள்ள சிங்கள மக்களுக்கு சிறப்பு வகுப்புக்கள் மூலம் தமிழை பயிற்றுவித்து 26 வருடங்களாக தொடர்ந்து இருந்து வரும் பிளவுகளை சரி செய்து சமரசப்படுத்தும் முயற்சியில் கொழும்பில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் ஈடுபட்டுள்ளன. 

தமிழ் மொழிப் புலமை குறைவே இரு சமுதாயத்திற்கும் இடையே மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தி போர் வரை கொண்டு சென்றுவிட்டதாக கத்தோலிக்க மத குருவான அருட்திரு. ரோகன் சில்வா UCA  செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். 

தமிழை உளப்பூர்வமாக கற்றுக்கொள்ள வைப்பதன் மூலமே வேறுபாடுகளை களைந்து நிர்வாகத்திலும் சமமான தகுதிகளை உண்டாக்கி இணக்கம் காண முடியும் எனத் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். 

ஒரு மொழி பயன்படுத்தப்படும் விதத்தால்தான் பிளவும் இணைவும் தோன்றுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

1956ம் ஆண்டு சிறிலங்காவின் அதிகாரபூர்வ மொழியாக சிங்களம் மட்டும் அறிவிக்கப்பட்டதனால் அது பல இனக்கலவரங்களையும் நம்பிக்கையீனங்களையும் தூண்டியது. 

மீண்டும், 1978ல் சிறிலங்காவின் புதிய அரசியல் அமைப்பு சட்டப்படி, தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளும் அதிகாரபூர்வ மொழிகளாக அறிவிக்கப்பட்டன. ஆங்கிலம் மூன்றாவது பொது மொழியாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இரண்டு மொழிகளுமே அதிகார பூர்வ மொழியாக அறிவிக்கப்பட்ட போதிலும் தற்போது அதிகமாக பயன்படுத்தப்படுகின்ற மொழியை பற்றி அரசு கரும மொழிகள் ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட கலந்தாய்வு மதிப்பீடுகள் தமிழ் மொழிக்கு மேலும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதையே சுட்டிக் காட்டுவதாக உள்ளன. 

50 அரசுசார்பு நிறுவனங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் மிக குறைவான சதவிகித நிர்வாக அதிகாரிகளுக்கே தமிழ்மொழி அறிவு இருப்பது கண்டறியப்பட்டது. 

தமிழ் மொழி பரவலாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படும் பட்சத்தில் தமிழ் சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உண்டாகும் என அரசு கரும மொழிகள் ஆணைக்குழுவின் உறுப்பினரும் கொழும்பு களனியா பல்கலைகழகத்தின் மொழியியல் விரிவுரையாளருமான ஜோசப் யோகராஜா தெரிவித்தார். 

தமிழை கற்று கொள்ள ஆர்வம் காட்டும் மாணவர்கள் அரிதாகவே காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

மொழிகளால் ஏற்படும் தொடர்பு நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கும் என்றும் அது சமுதாயத்தில் சிறிது சிறிதாக மாற்றங்களை ஏற்படுத்த உதவும் என்றும் இடம்பெயர்ந்த தமிழ் அகதிகள் முகாம்களில் சேவையாற்றிய அருட்சகோதரி கமலா டொன்டீனு [Kamala Dondeenu] கூறினார். 

தமிழர்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள அனைத்து சிங்கள மக்களும் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

தமிழ் கற்று கொள்வதற்காக மிகக் குறைந்த செலவில் ஒவ்வொரு புதன் கிழமையும் 2 மணி நேர வகுப்புக்களாக மொத்தம் 48 மணிநேரத்திற்கான பாடத்திட்டத்தை கத்தோலிக்க தேவாலய அமைப்பு உருவாக்கியுள்ளது. 

தமிழ் கற்றுக்கொள்வது தமிழர்களுக்கு மிகவும் அருகாமையில் இருப்பதை உணர வைப்பதாக உள்ளது என தமிழ் கற்றுக் கொள்ளும் மாணவர்களில் ஒருவரான சகோதரி கார்மலின் பெரேரா [Carmalin Perera ] UCA செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

source:puthinappalakai



--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails