யுத்தத்தின் போது சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட 11,000 க்கும் அதிகமான முன்னாள் புலிகளை புனர்வாழ்வு நிலையங்களில் பல மாதங்களாக தடுத்து வைத்திருப்பது அடிப்படை உரிமை மீறல் எனச் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் அவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. நியூயோர்க்கில் நேற்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே அரசை இவ்வாறு கேட்டுள்ளது. "சட்ட ஸ்தம்பிதம் - இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலிச் சந்தேக நபர்களின் நிச்சயமற்ற நிலை" என்று 30 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கைக்கு தலையங்கம் இடப்பட்டிருக்கிறது. தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் உறவினர்கள், மனிதாபிமானப் பணியாளர்கள், மனித உரிமைகள் சட்டத்தரணிகள் மற்றும் ஏனையவர்களின் பேட்டிகளை அடிப்படையாகக்கொண்ட தகவல்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பல மாதங்களாக 11,000 பேரை இலங்கை அரசு தடுத்து வைத்திருப்பது சட்டரீதியான தாமதிப்பு என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான பணிப்பாளர் பிராட் அடம்ஸ் கூறியுள்ளார். உண்மையில் பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளவர்களை இனங்கண்டுவிட்டு, பிறரை விடுவிக்க இது சிறந்த தருணம் என்றும் அவர் கூறியுள்ளார். தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பாக தகவல்களைத் தெரிவிக்க மறுத்துள்ள அரசு, அவர்கள் ஏன் கைது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என காரணத்தைக் கூறவும் மறுக்கிறது. மேற்படி 11,000 பேரையும் சட்டத்தரணிகள், குடும்ப உறுப்பினர்கள் பார்வையிடுவதற்கும் மறுக்கப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்கான பொறுப்பையும் உரிமையையும் அரசாங்கம் கொண்டிருக்ககின்ற வேளையில், அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிப்பது அவசியம் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. புனர்வாழ்வு நிலையங்களிற்கு நிதியுதவி வழங்குமாறு இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவி வழங்குபவரிடம் கேட்டுள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் உரிமைகளுக்கு முழு அளவில் மதிப்பளிக்கப்படாத நிலையில் உதவி வழங்குவோர் நிதி ஆதரவை வழங்கக்கூடாதென்றும் அடம்ஸ் கேட்டுள்ளார்.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment