இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இங்கிலாந்து நாட்டில் பிறந்து கிறிஸ்தவ சமயத் தொண்டு புரிவதற்காக 1838-ம் ஆண்டில் சென்னைக்கு வந்த ராபர்ட் கால்டுவெல், நெல்லை மாவட்டம் இடையன்குடி என்னுமிடத்தில் தங்கி சமயப் பணிகளாற்றி மறைந்தார்.
கால்டுவெல் தமிழகத்திற்கு வந்தபின் தமிழ்மொழி கற்று, அதன் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தமிழ் மொழி மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற திராவிட மொழிகளையும் கற்று, இம்மொழிகளுக்கிடையில் உள்ள ஒற்றுமைகளை ஆய்வு செய்தவர்.
அதன் பயனாக, "திராவிட மொழிகள்" என்னும் சொல்லாக்கத்தை முதன் முதல் உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தவர் அவர்.
அத்துடன் "திராவிட மொழிகள் அனைத்திலும், உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருத சொற்களை அறவே ஒழித்து விட்டு உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண்டாமல் வளம்பெற்று வளர்வதும் இயலும் என்னும் வரலாறு போற்றும் மகத்தான உண்மையை நிலைநாட்டி உலகறியச் செய்தவர் கால்டுவெல்.
அவர் படைத்த "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்னும் நூல் தமிழ்மொழியின் தனித்தன்மையையும், சிறப்பையும் உலகுக்கு வெளிப்படுத்தியதுடன், தமிழ்மொழி பற்றிய தொன்மைச் சிறப்பினையும் பறைசாற்றுகிறது.
இவ்வாறு தமிழ் மொழிக்கு மாபெரும் பெருமைகளை சேர்த்த ராபர்ட் கால்டு வெல்லை போற்றும் வகையில், அண்ணா முதல்- அமைச்சரான பின், 1968-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின்போது, சென்னை கடற்கரையில் காமராஜர் சாலையில் சிலை அமைத்து சிறப்பிக்கப்பட்டது.
செம்மொழியாம் தமிழ் மொழிக்கு சிறந்த மணிமகுடம் சூட்டிய மாமேதை கால்டு வெல்லுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், நெல்லை மாவட்டம், இடையன் குடியில் அவர் வாழ்ந்து மறைந்த இல்லத்தை, அவரது நினைவைப்போற்றும் வகையில், அரசு நினைவு இல்லமாக மேம்படுத்திப் பராமரித்திட முதல்- அமைச்சர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
source:thatstamil
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment