Monday, July 14, 2008

கல்வியில் கம்யுனிசமா?

 
 06.07.08  ஹாட் டாபிக்

த்தியில் கடந்த பா.ஜ.க ஆட்சியின்போது, `கல்வியை காவிமயமாக்கு கிறார்கள்' என்றொரு கோஷம் எழுந்து அடங்கியது எல்லோருக்கும் தெரியும். கிட்டத்தட்ட அதேபோல இப்போது செங்கொடிக்காரர்களின் ஆளுகையில் உள்ள கேரளாவில், `கல்வியில் கம்யூனிஸத்தைப் புகுத்துகிறார்கள்' என்கிற கூக்குரல் கிளம்பியிருக்கிறது. இதற்காக நடக்கும் போராட்டங்களில் சிந்தப்படும் ரத்தத்தால் கேரளாவே சிவப்பாகிவிடும் போல் நிலைமை போய்க்கொண்டிருப்பதுதான் கொடுமை!

கேரளாவை ஆளும் இடது முன்னணி அரசு, பள்ளிக்கூடங்களில் அமல்படுத்தியிருக்கும் சில பாடத்திட்டங்களுக்கு எதிராக முதலில் போராட்டங்களை ஆரம்பித்தது காங்கிரஸ் கட்சிதான். கடந்த மாதம் தொடக்கத்தில் மாநிலம் முழுக்க அந்தக் கட்சியின் மாணவர் அமைப்பு நடத்திய போராட்டங்களில் எல்லாம் வன்முறை தாண்டவமாடியது. போலீஸ் தடியடியில் காயமடைந்த கதர்ச்சட்டைக்காரர்களால் மருத்துவமனைகள் பல நிரம்பி வழிந்தன. இதைத் தொடர்ந்து முஸ்லிம் லீக் மாணவர் அமைப்பு நடத்திய போராட்டங்களின்போது சர்ச்சைக்குரிய பாடத்திட்டங்கள் அடங்கிய புத்தகங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இவர்களது போராட்டங்களின் போதும் போலீஸ் தடியடி, பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்... என வன்முறைக்குப் பஞ்சமில்லை.

இதன் உச்சகட்டமாக கடந்த மாதம் 26-ம் தேதி திருவனந்தபுரத்தில் கேரள அரசின் தலைமைச்செயலகம் முன்பு பா.ஜ.க இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சா சார்பில் தொடர் தர்ணா போராட்டத்தை ஆரம்பித்தனர். அதே வேளையில், மார்க்சிஸ்ட் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் அந்த வழியாக ஊர்வலம் வர... இரு தரப்புக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது. இதில் போலீஸ் முன்னிலையிலேயே பா.ஜ.க.வினர் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இந்தத் தாக்குதலில் பா.ஜ.க..வின் திருவனந்தபுரம் மாவட்டத் தலைவர் சிவன்குட்டியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. நிலைமை படு மோசமானதால் போலீஸார் தடியடி நடத்திப்பார்த்து, அதற்கும் பலனில்லாமல் போக... கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினார்கள். இந்தக் கலவரத்தால் தலைமைச்செயலகம் ஏரியாவே போர்க்களம் போல் ஆகிவிட்டது.

இப்படி, எதிர்க்கட்சிகள் பலவும் ரத்தம் சிந்தி போராடக்கூடிய அளவுக்கு கேரளப் பாடத்திட்டத்தில் அப்படி என்னதான் பிரச்னை? என்கிற கேள்வியுடன் திருவனந்தபுரத்தில் போய் இறங்கினோம் நாம். தலைமைச்செயலகம் முன்பு நடைபெற்று வரும் தொடர் தர்ணாவுக்குத் தலைமை வகித்துக்கொண்டிருந்த பா.ஜ.க இளைஞர் பிரிவு மாநிலத் தலைவரான சுரேந்திரன் நம்மிடம், "இந்தக் கல்வி ஆண்டில் அறிமுகமாகியிருக்கும் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் தான் ஏகமாய் கம்யூனிஸத்தைப் புகுத்தியிருக்கிறார்கள். அதாவது கேரளாவில் சுதந்திரப் போராட்டத்தை நடத்தியதே கம்யூனிஸ்டுகள்தான் என்பதாகவும், ஏ.கே.கோபாலன், இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களை சுதந்திரப் போராட்ட வீரர்களாகவும் சித்திரித்திருப்பதை ஏற்க முடியாது. காரணம், அந்தக் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் சுதந்திரப் போராட்டத்திற்கு எதிரான நிலையில்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இதே பாடப் புத்தகத்தில் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு ஆகியோருக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. காந்தியின் படத்தையும் அடையாளமே தெரியாத அளவுக்கு அலங்கோலமாகப் பிரசுரித்திருக்கிறார்கள். இன்னொரு புத்தகத்தில் காந்தியின் படத்திற்குப் பதில் தவளையின் படத்தைப் பிரசுரித்த கொடுமையும் நடந்திருக்கிறது.

ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகம் ஒன்றில்,  `எனக்கு கணக்குப் போட ஒத்துவராத சிலேட்டை உடைத்துவிடுவேன்' என ஒரு மாணவன் கூறுவதாக வரும் கவிதை, மொத்த மாணவ சமுதாயத்தின் மனதிலும் கம்யூனிஸ்டுகளின் வன்முறைப் பாதையைக் காட்டுவதாக உள்ளது. இதேபோல `அரிவாள் என்ற புதிய முகம்' என்கிற கவிதையும், அதற்கான படமும், கம்யூனிஸ்டுகளின் தேர்தல் சின்னத்தை தம்பட்டம் அடிப்பதாக உள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஏழாம் வகுப்பு சமூக அறிவியலில் `மதமில்லாத ஜீவன்' என்கிற தலைப்பிலுள்ள ஒரு பாடம்தான் எல்லா மத மக்களையும் புண்படுத்துவதாக உள்ளது.

அந்தப் பாடத்தில், கலப்புமணம் செய்துகொண்ட அன்வர் ரஷீது - லட்சுமிதேவி என்ற தம்பதியர் தங்களது மகன் ஜீவனை ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்காக பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார்கள். பள்ளியின் சேர்க்கைப் படிவத்தில் `மாணவனை எந்த மதத்தைச் சேர்ந்தவனாகக் குறிப்பிடுவது?' என தலைமை ஆசிரியர் கேட்கிறார். அதற்கு மாணவனின் தந்தையான அன்வர் ரஷீது, `எந்த மதத்தையும் குறிப்பிட வேண்டாம்' என்கிறார். தாய் லட்சுமிதேவியும் தனது கணவரின் கருத்தை ஆமோதித்துவிட்டு, `எங்கள் மகன் பெரியவனாக ஆனபிறகு எந்த மதத்தை விரும்புகிறானோ, அந்த மதத்தை வைத்துக்கொள்ளட்டும்' எனச் சொல்வதாக அந்தப் பாடம் முடிகிறது.

கேரளாவைப் பொறுத்தவரை எல்லா மக்களுமே தங்களின் மத நம்பிக்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள். அப்படியிருக்க, அவர்களது குழந்தைகளுக்கு, `மதமெல்லாம் அவசியமில்லை' என்கிற ரீதியில் சிறுவயதிலேயே பாடம் சொல்லிக் கொடுக்கப்படுவதை யார்தான் ஏற்பார்கள்? இப்படிச் சொல்லிக் கொடுத்தால் அந்தக் குழந்தை எப்படி கடவுள் பக்தியோடு வளர முடியும்? குழந்தைகளின் மனதில் கடவுள் நம்பிக்கையை அழித்துவிட்டு கம்யூனிஸத்தைப் புகுத்துகிற காரியம்தானே இது?

 இதையெல்லாம் கண்டித்து தர்ணா நடத்துவதற்காக நாங்கள் தலைமைச் செயலகம் நோக்கி மிக அமைதியாக ஊர்வலம் வந்துகொண்டிருந்தோம். அப்போதுதான் மார்க்சிஸ்ட்காரர்கள் கற்களை வீசி எங்களைத் தாக்கினர். இதைப் பார்த்துக்கொண்டிருந்த போலீஸாரும் கலவரக்காரர்களை விரட்டுவதற்குப் பதிலாக எங்கள் மீதே தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசினர். மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்துபவர்கள் மீது இப்படித்தான் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. மொத்தத்தில் கேரள நிர்வாகமே சீர்குலைந்து கிடக்கிறது'' எனச் சீறலாகச் சொன்னார் சுரேந்திரன்.

இதே பிரச்னைக்காக தலைமைச்செயலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த கேரள காங்கிரஸ் (ஜேக்கப் பிரிவு) தலைவர்களான டோனி செபஸ்டின், உம்மன் மாத்யூ ஆகியோர் நம்மிடம் பேசுகையில், "சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்கு மதம், ஜாதி அடிப்படையில்தானே சலுகைகள் வழங்கப்பட்டுக் கொண்டி ருக்கின்றன?. அப்படியிருக்க, `மதமே வேண்டாம்' என இவர்கள் எப்படி பாடப்புத்தகத்தில் பிரசாரம் செய்யலாம்?. சர்ச்சைக்குரிய பாடங்களை யெல்லாம் நீக்கும்வரை எங்கள் போராட்டம் தொடரும்'' என்றார்கள் அவர்கள்.

இந்தப் புகார்களுக்கெல்லாம் மார்க்சிஸ்ட் தரப்பில் என்ன பதில் சொல்கிறார்கள்? என்பதை அறிய, அந்தக் கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவனந்தபுரம் மாவட்டச் செயலாளர் சுனில்குமாரை நாம் சந்தித்தோம். விபத்து ஒன்றால் கையில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த அவர் நம்மிடம் " `ஆடு நனைகிறதே என ஓநாய் அழுததாக' உங்கள் ஊர் பழமொழி ஒன்றை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கே காந்திக்காகவும், நேருக்காகவும் பா.ஜ.க.வினர் குரல் கொடுப்பதைப் பார்க்கும்போது எனக்கு அந்தப் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. காந்தி, நேருக்கு முக்கியத்துவம் கொடுத்து முதல் வகுப்பிலிருந்தே பல பாடங்கள் இருக்கின்றன. அதேபோல கம்யூனிஸ்ட் தலைவரான ஏ.கே.கோபாலன் போன்றவர்கள் இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள். இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும்கூட அவர்களைப் பற்றிய பாடங்கள் இருந்தன. `மதமில்லாத ஜீவன்' பாடத்தில் மதமே வேண்டாம் என பிரசாரம் செய்யவில்லை. கலப்புமணம் செய்துகொண்ட தம்பதியர், தங்களது மகன் பெரியவனாக வந்தபிறகு அவனே மதத்தைத் தேர்ந்தெடுக்க சுதந்திரம் கொடுக்கிறார்கள். அவ்வளவுதான்!.

 அதாவது, சில மாநிலங்களில் விலைவாசி உயர்வும், வேறு சில மாநிலங்களில் ரேஷன் வினியோகமும் ஆட்சியை தீர்மானிப்பதைப் போல, கேரளாவில் கல்விக்கொள்கைதான் அரசைப் பற்றிய முக்கிய மதிப்பீடாக இருக்கும். இந்த அரசைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் எஸ்.எஸ்.எஸ்.சி படித்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளியிலேயே டியூஷனுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதனால் என்றுமில்லாத அதிசயமாக எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி விகிதம் 92 சதவிகிதமாக எகிறியது. அடுத்து, இன்ஜினீயரிங் கல்லூரிகளுக்குரிய கவுன்சலிங் சிஸ்டத்தை ப்ளஸ் டூ அட்மிஷனுக்கே கேரள அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதனால் பத்து ரூபாயில் விண்ணப் பித்துவிட்டு, அந்த மாவட்டத்திலுள்ள சுமார் நூறு பள்ளிகளில் தங்களுக்கு விருப்பமான பள்ளியை மதிப்பெண்களுக்குத் தக்கவாறு மாணவர்கள் தேர்வு செய்ய முடிகிறது. இது போன்ற திட்டங்களால் மக்கள் மத்தியில் இடதுசாரி அரசுக்கு ஆதரவு பெருகி வருகிறது. அந்த வயிற்றெரிச் சலில்தான் எதிர்க்கட்சியினர் இப்படி கல்வியை பிரச்னையாக்கி போராடிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் மத்தியில் அவர்களுக்கு அனு தாபம் கிடைப்பதற்காகவும், ஆட்சிக்குக் கெட்ட பெயரை உருவாக்கு வதற்காகவும் அவர்களே வன்முறையையும் உருவாக்குகின்றனர்'' என்றார் சுனில்குமார்.

 கேரளாவில் உள்ள கிறிஸ்தவ, முஸ்லிம் அமைப்புகள், என்.எஸ்.எஸ் என அழைக்கப்படும் நாயர் சர்வீஸ் சொசைட்டி ஆகிய அமைப்புகளும் இந்தப் பாடத்திட்டங்களுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பியிருப்பது, இடதுசாரி அரசைக் கொஞ்சம் கலங்கவே செய்திருக்கிறது. மற்றொரு வலுவான அமைப்பான ஷ்ரீ நாராயணகுரு தர்ம பரிபாலன சங்கம் மட்டுமே இதில் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. `சர்ச்சைக்குரிய பாடத்திட்டங்கள் பற்றி எதிர்க்கட்சியினருடன் பேச்சு நடத்தத் தயார். தேவையானால் இதுபற்றி ஆலோசிக்க கல்வியாளர்கள் அடங்கிய கமிட்டி போடலாம்' என கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி தெரிவித்த யோசனையையும் எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. இந்த பிரச்னையே இப்படி ஆறாத நிலையில், கடந்த 28_ம் தேதி மருத்துவ கல்விக் கட்டணங்களை இரு மடங்காக (ஏழாயிரம் என இருந்ததை சுமார் பதினைந்தாயிரமாக) உயர்த்தி அறிவித்திருக்கிறது கேரள அரசு. அதற்காகவும் எதிர்க்கட்சிகள் முண்டா தட்டத் தொடங்கியிருப்பதால், இனி `கல்வி சிவப்பு மயமாகிறது' என்கிற கோஷத்தைக் கைவிடுவார்களோ, என்னவோ?    ஸீ

ஸீ
ச. செல்வராஜ்

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails