இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையார் எப்போதும் சந்தேகத்துக்குப் பெயர் பெற்றவர். இயேசு சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்து தன்முன் வந்தபிறகும், ``அவரது விலாக் காயத்தில் விரலை விட்டுப் பார்த்தால்தான் அவர் இயேசு என்றுநம்புவேன்'' என்றவர் தோமையார். `சந்தேகப் பேர்வழி தாமஸ்' (Doubted Thomas)என்பது அவரது செல்லப்பெயர். எப்போதும் சந்தேக சதிராட்டங்களில் இருக்கும் புனித தோமையார் மீதே, இப்போது புதிதாக ஒரு சந்தேகம் சதிராடத் தொடங்கியிருக்கிறது. சென்னை மயிலையிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ உயர்மறை மாவட்டம் ரூ.100 கோடி செலவில் புனித தோமையார் பற்றி படமெடுக்கப்போகும் நிலையில், அதில் திருவள்ளுவராக சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க வாய்ப்புள்ள நிலையில் ``புனித தோமையார் இந்தியாவுக்கு வந்தார் என்பதே பொய்!'' என்று ஒரு புயல் கிளம்பியுள்ளது. ``இயேவின் சீடரான புனித தோமையார், இந்தியாவுக்கு வரவே இல்லை. அவர் சென்னைக்கு வந்தார்; திருவள்ளுவரைச் சந்தித்தார்; பரங்கிமலையில் நரபலி ஆசாமிகளால் கொல்லப்பட்டார் என்பதெல்லாம் கட்டுக்கதை'' என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன். `புனித தோமையார்' படத்தில் ரஜினி திருவள்ளுவராக நடிக்கப்போகிறார்' என்று ஏற்கெனவே குமுதம் ரிப்போர்ட்டரில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்த நாம், `இது என்ன புதுக்கதை?' என்று ஆவலுடன் ராம கோபாலனைச் சந்தித்துப் பேசினோம். ``உண்மை கசப்புதான் என்றாலும், அதை வெளியிட்டு விவாதித்தே தீர வேண்டும்'' என்று ஆரம்பித்து சரவெடியாக வெடித்துத் தீர்த்தார் அவர். ``புனித தோமையார் பற்றி திரைப்படம் எடுக்கப் போகிறார்கள் என்ற தகவல் கசியத் தொடங்கியதுமே பல சரித்திர ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார்கள். `இந்தியா பக்கமே எட்டிப் பார்க்காத செயின்ட் தாமஸ் இந்தியா வந்ததாகவும், சென்னையில் அவர் உயிர் விட்டதாகவும் தவறான சரித்திரம் சித்திரிக்கப்படுகிறது' என்று அவர்கள் வேதனைப்பட்டனர். அதோடு புனித தோமையார் இந்தியாவுக்கு வரவே இல்லை என்பதற்கான வரலாற்று ஆதாரங்களையும் திரட்டி என்னிடம் காண்பித்தார்கள். `ஆப்கனிஸ்தான் பகுதியில், கொண்டோபர்னஸ் (கொந்தபோரஸ்) மன்னன் கடைசி பாக்டீரிய மன்னன் ஹெர்மேயுஸ் என்பவனைத் தோற்கடித்து, காபூல் பள்ளத்தாக்கைக் கைப்பற்றிய காலத்தில்,தாமஸ் (கி.பி.21-46) அங்கு வந்து அந்த மன்னனை மதம் மாற்றினார். நாட்டிலும் மதப்பிரசாரம் செய்தார். அதனால், வெகுண்டெழுந்த மக்கள், தாமஸைக் கொன்று விட்டனர்' என அங்குள்ள `தக-டி-பாஹி' கல்வெட்டு கூறுவதாகவும் அதை கிறிஸ்துவ ஐதீகம் நம்புவதாகவும் வரலாறு உள்ளது.ஆக, ஆப்கனிஸ்தான் வரை வந்த தாமஸ், இந்தியாவுக்குள் நுழையவே இல்லைஎன்பதுதான் உண்மை. தாமஸ் கேரளத்துக்கு வந்தார் என்ற நம்பிக்கையின் பின்னணி என்ன என்பது பற்றி டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் எழுதிய `ஸ்ரீ வேங்கடேச தேவஸ்தான வரலாறு'என்ற புத்தகத்தின் 230-வது பக்கத்தைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம். `கோவாவிலிருந்து கி.பி.1543 செப்டம்பர் மாதம் போர்த்துக்கீசிய கவர்னர் மார்டில் அல் பான்சோ டி சவுசாலின் உத்தரவின் பேரில் ஒரு பெரிய கடற்படை கேரளத்தை நோக்கி வந்தது. புனித தாமஸின் நினைவுச் சின்னங்கள் உள்ள பேழை ஒன்றை, கன்னியாகுமரிக்கு அப்பால் கீழைக்கடற் பகுதியில் வாழும் பரதவர்களுக்குக் காட்டுவதற்காக அந்தக் கடற்படை வந்தது என்று சொல்லப்பட்டது. ஆனால், அந்தக் கடற்படையின் உண்மையான நோக்கம் திருப்பதி வரையிலான படையெடுப்புதான். அந்தப் படையெடுப்பை சதாசிவராயரின் அரசு முறியடித்தது'என்று எஸ்.கிருஷ்ணன் ஆதாரத்துடன் காட்டுகிறார். ஆகவே, தாமஸின், திருப்பண்டத்தைத்தான் (உடல் பாகம், பயன்படுத்திய பொருட்களைத்தான்) அந்தக் கடற்படை, புனிதப்பொருளாக எடுத்து வந்திருக்கிறது. அதை வைத்துத்தான் சென்னையில் நினைவுச் சின்னம் எழுப்பி, பின்னர் சமாதி என்று ஆக்கிவிட்டார்கள். ஆக, தாமஸ் சென்னை வந்தார் என்பதே ஓர் அபத்தம். பிருங்கி மகரிஷி சிவபெருமானை நோக்கி தவம் இருந்த இடம்தான் சென்னை பரங்கிமலை. அங்கு சிவபெருமான் நந்தி வடிவத்தில் காட்சி அளித்தார் எனக் கூறும் நந்தீஸ்வரர் கோயில் கல்வெட்டுகள் இன்றும் உள்ளன. அப்படியிருக்க, பரங்கிமலையை புனித தாமஸ் மலை என்று பெயர் மாற்றியது அநீதியானது மட்டுமல்ல, அது ஒரு கட்டுக்கதையும் கூட. அதுபோல திருக்குறளில் கிறிஸ்துவ கருத்துகள் உள்ளது என்பதும் அபத்தமான ஒன்று. அது தொடர்பான போலி ஆராய்ச்சிகளை அருணை வடிவேல் முதலியார் என்பவர், அவரது புத்தகத்தில் கண்டித்துள்ளார். இந்த ஆதாரங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அண்மையில் போப் பெனடிக் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், `செயின்ட் தாமஸ் இந்தியாவுக்குச் செல்லவே இல்லை' என்று கூறியிருக்கிறார். இந்தத் தகவல் இங்குள்ள கிறிஸ்துவ கபட வேடதாரிகளின் தலையில் இடியாக இறங்கி, அவர்களின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்திருக்கிறது. இங்குள்ள கிறிஸ்துவ பாதிரியார்கள் மீது செக்ஸ் புகார்கள் அதிகரித்து, அவர்களது பெயர் கெட்டுப் போயுள்ள நிலையில், அதை திசைதிருப்பும் நோக்கத்தில்தான் கடந்த ஜூன், இரண்டாவது வாரம், கொச்சியில் பாதிரியார்கள் கூடி தாமஸின் கட்டுக்கதையை வரலாற்று ஆதாரமாகக் காட்டத் திட்டமிட்டனர்.அதன்படியே இந்தத் திரைப்பட அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இந்த வரலாற்று மோசடி படத்தில், திருவள்ளுவராக நடிக்க ரஜினி திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ரஜினியும் இதுவரை இதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவரை, கிறிஸ்து இறந்த பின்பு கி.பி.ஐம்பதுகளில் தாமஸ் சந்தித்தார் என்பதே முரண்பாடான ஒன்று. `ராகவேந்திரா', `அருணாச்சலம்', `பாபா' (பாபா முத்திரையைக் காண்பிக்கிறார்) போன்ற பக்திப்படங்களில் நடித்த ரஜினி, வரலாற்றைத் திரித்துக் கூறும் `புனித தோமையார்' படத்தில் நடிக்கக் கூடாது. இந்தப் படம் மூலம் மக்களை மதமாற்றம் செய்ய பாதிரியார்கள் திட்டமிட்டுள்ளனர். `புனித தோமையார்' படத்தில் ரஜினி நடித்தால் மதமாற்றத்துக்கு அவர் துணை போய் விடுவார். இதன்மூலம், ரஜினியைச் சாக்கடையில் தள்ளிவிட பாதிரியார்கள் முயற்சிக்கிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து எடுக்கப்படும் இந்தப் படத்தை யாரும் பார்க்க மாட்டார்கள் என்று தெரிந்துதான் வியாபாரத்துக்காக ரஜினி, அஜித், விஜய், விக்ரம் போன்ற நடிகர்களை நடிக்க வைக்கத் திட்டமிடுகிறார்கள். கேரளத்தைச் சேர்ந்த கிறிஸ்துவப் பெண்ணான ஷாலினி, அவரது கணவர் அஜித்தை இந்தப் படத்தில் நடிக்க வைக்க முயல்கிறார். அஜித் உள்பட யாரும் இந்தப் படத்தில் நடிக்கக் கூடாது. நாடு முழுவதும் உள்ள கிறிஸ்துவப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி `புனித தோமையார்' படத்தைப் பார்க்க வைக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. வரலாற்று உண்மை என்ற பெயரில் இந்தப் படம் திரைக்கு வந்தால் ஜனநாயக முறையில் அந்தப் படத்தைக் கடுமையாக எதிர்ப்போம். தேவைப்பட்டால் சட்டத்தின் உதவியையும் நாடுவோம்'' என்று பொரிந்து தள்ளினார் ராம கோபாலன். இவரது குற்றச்சாட்டுகளுடன் `புனித தோமையார்' படத்தின் வசன கர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமியைச் சந்தித்தோம். ``கிறிஸ்துவ விசுவாசத்தின் பிரதான அம்சமான இயேசுவின் உயிர்த்தெழுதலையே விமர்சிப்பவர்கள், புனித தோமையாரையா விட்டு வைப்பார்கள்? பரங்கிமலையில் புனித தோமையார் கொல்லப்பட்ட பாறை இன்றும் இருக்கிறது. `தோமையார்' கொல்லப்பட்ட நாளில், 18-ம் நூற்றாண்டு வரை கிறிஸ்துவர்கள் அந்தப் பாறைக்குச் சென்று பிரார்த்தனை நடத்தி வந்தனர். தோமையாரைக் கொல்லப் பயன்படுத்திய ஈட்டியின் முனை, அவரது ரத்தம் தோய்ந்த மண் ஆகியன மயிலைக்குக் கொண்டுவரப்பட்டு அவரது உடலுடன் அடக்கம் செய்யப்பட்டன. கேரளத்தில் புனித தோமையார் கட்டிய ஏழு தேவாலயங்கள் இன்றும் உள்ளன. அப்படியிருக்கையில் அவர் இந்தியாவுக்கு வரவில்லை, என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்? தோமையார் இந்தியாவுக்கு வரவில்லை என்று போப் பெனடிக் கூறியதாக சிலர் கூறுகிறார்கள். அவர் எப்போது, எங்கு அப்படிக் கூறினார் என்று தெளிவுபடுத்தியிருக்கலாமே? போப் அப்படி எதுவும் கூறவில்லை என்பதே உண்மை. கி.மு.2-ல் இருந்து கி.பி.42வரையிலான காலகட்டத்தில்தான் மயிலாப்பூரில் திருவள்ளுவர் வாழ்ந்திருக்க வேண்டும்.அதே காலகட்டத்தில்தான் தோமையாரும் சென்னைக்கு வந்திருக்கிறார் என்கிற போது இருவரும் சந்தித்திருக்கக் கூடாதா? `விவிலியம்-திருக்குறள் சைவ சித்தாந்தம்' என்ற புத்தகத்தை எழுதிய மு.தெய்வநாயகத்துக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அந்தப் புத்தகத்தில்தான் திருக்குறளில் உள்ள கிறிஸ்துவ கருத்துகள் பற்றி ஆதாரங்களுடன் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் யாரும் முன்னிறுத்தப்படுவதில்லை. இந்தப் படத்தில் நடிப்பதால் நடிகர்களுக்குத்தான் பெருமை. இது ரஜினிக்கும் பொருந்தும்'' என்று முடித்துக் கொண்டார் பால்ராஜ் லூர்துசாமி. தோமையார் பெயரில் தொடங்கியிருக்கும் இந்த வார்த்தை யுத்தம் இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது. திருவள்ளுவராக ரஜினி... கன்னட வெறியர்களுக்குக் கரி! கர்நாடகத் தலைநகரம் பெங்களூருவிலுள்ள அல்சூர் ஏரிப் பகுதியில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க விடாமல் கன்னட வெறியர்கள் இன்றுவரை அழும்பு செய்து வருகிறார்கள். வள்ளுவர் சிலை கோணிப்பைக்குள் முடங்கிக் கிடக்கிறது. அந்தச் சிலையைத் திறந்து வைக்க கர்நாடகாவாழ் தமிழர்கள் இடைவிடாமல் போராடி வரும் நிலையில், கர்நாடகத்தில் பிறந்த ரஜினி, திருவள்ளுவராக நடிக்கும் செய்தி அங்குள்ள கன்னட வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறது என்று பலரும் கருதுகிறார்கள். ``ஏற்கெனவே ஒகேனக்கல் பிரச்னையில் தன்னுடைய எதிர்ப்பை பலமாகப் பதிவு செய்த ரஜினி, இப்போது திருவள்ளுவராக நடித்தால் அவரது செல்வாக்கு மேலும் அதிகரிக்கும்'' என்கிறார்கள் அவரது ரசிகர்கள். ஸீ வே. வெற்றிவேல் படங்கள் : ஞானமணி |
No comments:
Post a Comment