சிரித்த முகத்துடன் பார்த்துப் பழகிய அனிதா குப்புசாமியை அழுகையுடன் பார்ப்பதற்குக் கஷ்டமாக இருக்கிறது. ஆர்.ஏ.புரத்திலிருக்கும் அனிதா குப்புசாமி-புஷ்பவனம் குப்புசாமியின் வீடு வெளியிலிருந்து பார்க்கும்போது அமைதியாக இருக்கிறது. உள்ளே புயல். ``நான் செய்த தப்பு என்ன சார், காதலிச்சு என் மனசுக்குப் பிடிச்சவரை கல்யாணம் பண்ணினதுதானே... கல்யாணமாகி பதினாறு வருஷமாயிடுச்சு. பதினாறு வருஷமும் மாமனார்&மாமியார் கொடுமைதான். இதுநாள் வரைக்கும் நான் அதை வெளியில சொன்னதில்லை. ஆனா இன்னைக்கு அவங்க என்னைப் பத்தி எவ்வளவு அபாண்டமா சொல்றாங்க'' என்று கண்ணீருடன், நம் குமுதத்தில் வந்த குப்புசாமி பெற்றோரின் பேட்டியைக் குறிப்பிடுகிறார். ``முதல் தடவை அவங்க வீட்டுக்குப் போனபோது என்னை செருப்பால அடிச்சாங்க. அப்போ எங்களுக்கு கல்யாணம் ஆகல. ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய மேடைக்கச்சேரி செஞ்சுக்கிட்டு இருந்தோம். குப்புசாமி என்கிட்ட ரொம்ப அன்பா இருப்பார். இப்படி இருக்கும்போது, அவர் ஒரு தடவை ஊருக்குப் போய்ட்டார். பத்து நாள் ஆச்சு. அவர்கிட்டருந்து எந்தத் தகவலும் இல்ல. சரி, அவர் வீட்டுக்குப் போய் பார்க்கலாம்னு வேதாரண்யத்துல அவர் வீட்டுக்குப் போனேன். அங்கே அவங்க அப்பா, அம்மா இருந்தாங்க. என்னைப் பார்த்ததும் அவங்க அப்பா செருப்பைக் கழட்டி அடிக்க ஆரம்பிச்சிட்டார். `என் பையனை பெரிய இடத்துல கட்டிக் கொடுக்கலாம்னு நினைச்சிருக்கோம். நீ வந்து மயக்குறியா'ன்னு கேவலமா திட்டி கழுத்தைப் பிடிச்சு தள்ளிவிட்டார். நான் போனப்ப குப்புசாமி வீட்டுல இல்ல. இவ்வளவு சண்டைக்கு அப்புறம்தான் எங்க கல்யாணம் நடந்துச்சு. 92-ம் வருஷம் எங்க கல்யாணம் நடந்தது. அப்பல்லாம் நாங்க அவ்வளவு பிரபலம் இல்ல. இத்தனை வசதியும் கிடையாது. அந்தச் சமயத்துலலாம் அவங்க பெற்றோர் எங்களைக் கண்டுக்கவே இல்லை. இன்னைக்குப் பணம், காசு, புகழ் எல்லாம் வந்ததும் மருமகளைத் தள்ளி வச்சுட்டு மகனை தங்கள் பக்கம் பிரிச்சுட்டுப் போய்டணும்னு பார்க்கிறாங்க. இதுக்காகவா சார் நான் கல்யாணம் பண்ணினேன்!'' - குரல் உடைந்து தேம்பித் தேம்பி அழுகிறார் அனிதா. ``அவங்களுக்கு ஒண்ணுமே செய்யலைனு சொல்றாங்க. அவரோட தங்கச்சி கல்யாணத்துக்கு லட்சக்கணக்குல கடன் வாங்கிட்டு, அதை நாங்கதான் அடைச்சிட்டிருக்கோம். ஒருத்தருக்குச் செஞ்ச உதவியை வெளியில சொல்லக்கூடாது. ஆனா இவங்க சொல்ல வச்சிட்டாங்க. இப்பகூட ஒன்றரை மாசம் எங்க வீட்டுலதான் தங்கியிருந்தாங்க. ஆப்பிள் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ்னு வேளாவேளைக்கு அவங்களை நல்லா கவனிச்சிக்கிட்டோம். எந்தக் குறையும் வந்துடக் கூடாதுனு ஒரு வேலைக்கார அம்மாவையே அவங்க கேட்கிறதைக் கொடுக்கிறதுக்குனு வச்சிருந்தோம். அவங்களை இப்படி நான் வச்சிருந்தேன். என் மாமனார் இப்ப உத்தமர் மாதிரி பேசுகிறார். அவர் செய்த காரியத்தையெல்லாம் வெளில சொன்னா வெட்கக்கேடு. கல்யாணம் ஆன புதுசுல நாங்கல்லாம் குடும்பமா வேளாங்கண்ணி போயிருந்தோம். அங்க ஒரு வீட்டுல தங்கியிருந்தபோது எல்லோரும் வெளில போயிருந்தாங்க. நானும் என் மாமனார் மட்டும்தான் வீட்டுல இருந்தோம். அப்போ அவர் என்கிட்ட தவறா நடக்க முயற்சி பண்ணினார். நான் தப்பிச்சு வெளில வந்து நின்னுக்கிட்டேன். இதை என் கணவரிடம் சொன்னபோது, அவர் நம்பத் தயாராய் இல்லை.'' - இதைச் சொல்லும்போது அனிதாவின் அழுகை அதிகமாகிறது. ``என்கிட்ட மட்டுமல்ல, என் கணவரோட தம்பி மனைவிகிட்டேயும் தப்பா நடக்க முயற்சி பண்ணி, அது பிரச்னையாகி அப்பாவை அடிச்சிருக்காரு தம்பி. இந்தச் சம்பவம் கேள்விப்பட்டதும் அப்பாகூட இவர் ஒன்றரை மாசம் பேசாம இருந்தார். நான் சொன்னபோது நம்பலை. அப்பவே அவரைக் கண்டிச்சிருந்தா, இந்த மாதிரி நடந்திருக்காதுலனு சொன்னேன். எனக்கு ரெண்டு பொண்ணுங்க. ஒருத்திக்கு பதிமூணு வயசாகுது. அடுத்தவளுக்கு மூணு வயசு. இப்ப குடும்பத்துல சந்தோஷமே போயிடுச்சு.வெளில போக முடியல. அவ ஸ்கூல் போக மாட்டேங்கிறா'' என்று அழுகையுடன் பேசிக் கொண்டிருந்த அனிதாவின் குரல் திடீரென்று இறுக்கமாகிறது. ``ஆனால், எந்தக் காரணத்துக்காகவும் என் கணவரைப் பிரிந்து வரமாட்டேன். அவர்தான் என் வாழ்க்கை. அவர் பல வெற்றிகளை பெற வேண்டும்.என் கணவர் மகள்களின் வாழ்க்கை நலமாக அமையவேண்டும். இதுதான் என் பிரார்த்தனை. என் பாசமான குடும்பம் இந்தப் பிரச்னைகளால் உடைந்து விடாது. நானும் என் கணவரும் மீண்டும் வெற்றிகரமாக வருவோம் '' என்கிறார் தீர்க்கமாக. பாடலில் வெற்றி கண்டிருக்கிறார். காதலில் வெற்றி கண்டிருக்கிறார். வாழ்க்கையிலும் வெற்றி பெறுவார், நிச்சயமாக..
- திருவேங்கிமலை சரவணன் படங்கள் : சித்ராமணி |
No comments:
Post a Comment