Sunday, July 27, 2008

தீவிரவாதிகளின் அடுத்த குறி மும்பையா?-மிரட்டல் இ-மெயிலில் இருந்த திடுக்கிடும் தகவல்கள்

தீவிரவாதிகளின் அடுத்த குறி மும்பையா?-மிரட்டல் இ-மெயிலில் இருந்த திடுக்கிடும் தகவல்கள் 

மும்பை, ஜுலை. 28-

தீவிரவாதிகளின் அடுத்த குறி மும்பையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். இதுதொடர்பாக வந்த மிரட்டல் இ-மெயிலில் திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

கடந்த 25-ந் தேதி பெங்களூரில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் ஒரு பெண் பலியானார். பலர் காயம் அடைந்தனர்.

பெங்களூர் குண்டு வெடிப்பை தொடர்ந்து நேற்று முன்தினம் குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் சங்கிலி தொடர் குண்டுகள் வெடித்தன. இதில் 45 பேர் பலியானார்கள். 140-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

ஆமதாபாத் குண்டு வெடிப்புக்கு `இந்தியன் முஜாகிதீன்' என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. இது, சிமி மற்றும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கங்கள் இணைந்த அமைப்பு ஆகும். இந்த தீவிரவாத இயக்கம், 14 பக்க இ-மெயில் ஒன்றை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மராட்டிய மாநிலத்தில் சிறுபான்மை மக்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். இது நிறுத்தப்படாவிட்டால், மராட்டிய முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கும், துணை முதல்-மந்திரி ஆர்.ஆர்.பட்டீலும் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். கடந்த 2006-ம் ஆண்டு ஜுலை 11-ந் தேதி நடந்த குண்டு வெடிப்புகளை அவர்கள் அதற்குள் மறந்து விட்டார்களா?

சிறுபான்மை மக்கள், ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்த மக்கள் தொகை கொண்ட குஜ்ஜார்களே, பலத்தை காட்டி, தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளும்போது, நாம் அதை விட அதிகமாக பலத்தை காட்டி அரசாங்கத்தை பணிய வைக்க வேண்டாமா?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, மும்பையில் மாளிகை கட்ட திட்டமிட்டுள்ள இடம், வக்பு வாரியத்துக்கு சொந்தமானது. எனவே, மாளிகை கட்டுவதற்கு முன்பு, முகேஷ் அம்பானி, ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் மறக்க முடியாத பயங்கர அனுபவமாக அது மாறிவிடும்.

உத்தரபிரதேச பார் கவுன்சில் வக்கீல்கள் முஸ்லிம்களின் வழக்குகளில் ஆஜராக மறுக்கிறார்கள். எனவே, உத்தரபிரதேச பார் கவுன்சிலையும் எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல் இ-மெயிலின் அடிப்படையில் பார்க்கும்போது, சதிகார தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு மும்பையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.

மும்பையில் உள்ள பங்கு சந்தை கட்டிடம், சித்திவிநாயகர் கோவில், மந்திராலயம், மும்பை மாநகராட்சி கட்டிடம் மற்றும் பெரிய கட்டிடங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதைத் தொடர்ந்து இந்த இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இ-மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ள மராட்டிய முதல்-மந்திரி,
துணை முதல்-மந்திரி, முகேஷ் அம்பானி ஆகியோருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் விசேஷ பாதுகாப்பில் உள்ள மிக மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை அதிகரிக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails