Monday, July 14, 2008

கறுப்பர் என்பதால் ஒதுக்கப்படுகிறாரா? அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒபாமா செல்வாக்கு திடீர் சரிவு

கறுப்பர் என்பதால் ஒதுக்கப்படுகிறாரா?
அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒபாமா செல்வாக்கு திடீர் சரிவு


  புதுடெல்லி, ஜூலை 14: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஓபாமாவின் செல்வாக்கு திடீரென சரிந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடக்கிறது. இதில், குடியரசு கட்சி வேட்பாளராக மைக்கேனும் ஜனநாயக கட்சி வேட்பாளராக பராக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள். இருவரும் ஆதரவாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த இருவரில் யார் அதிபராக வர அதிக வாய்ப்புள்ளது என்று Ôநியூஸ் வீக்Õ பத்திரிகை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில், மைக்கேனை விட ஒபாமாவுக்கு 15 சதவீதம் அதிக ஆதரவு இருப்பதாக தெரிந்தது.

இப்போது, அதே பத்திரிகை மீண்டும் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் ஒபாமாவுக்கு 3 சதவீதம்தான் அதிக ஆதரவு இருப்பதாக தெரிய வந்துள்ளது. மைக்கேனுக்கு 41 சதவீத ஆதரவும் ஒபாமாவுக்கு 44 சதவீத ஆதரவும் உள்ளது. ஒபாமாவின் ஆதரவில் ஏற்பட்டுள்ள சரிவு வியப்பளிப்பதாக Ôநியூஸ் வீக்Õ கூறுகிறது.

அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஒபாமாதான் என்ற நம்பிக்கையில் உள்ள அவருடைய ஆதரவாளர்களுக்கு இந்த சரிவு அதிர்ச்சி அளித்துள்ளது.

முக்கிய பிரச்னைகளில் அரசியல் ஆதாயத்துக்காக  ஒபாமா தனது நிலையை அடிக்கடி மாற்றுகிறார் என்று ஹிலாரி கிளிண்டனின் ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். இதுவே சரிவுக்கு காரணம் என்று கருதப்படுகிறது.

ஜனநாயக கட்சி வேட்பாளராக தேர்வு பெறுவதற்கு ஒபாமாவுடன் முன் னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் கடுமையாக மோதினார். சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஒபாமா தேர்வு பெற்றார்.

தனது தோல்வியை ஒப்புக் கொள்ள ஹிலாரி கடைசி வரை மறுத்தார். இதனால், அவருடைய ஆதரவாளர்கள் ஒபாமாவை முழுமையாக ஏற்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. ஒபாமாவின் செல்வாக்கு சரிவுக்கு இதுவும் ஒரு காரணம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

மேலும் ஒபாமா ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் என்பதால் வெள்ளையர்கள் மத்தியில் அவருடைய செல்வாக்கு குறைந்திருப்பதாக தெரிகிறது.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails