Friday, July 18, 2008

டிசம்பர் 25 - மேலும் சில மாமனிதர்கள்!

டிசம்பர் 25 - மேலும் சில மாமனிதர்கள்!
ஜி.எஸ்.எஸ்.
இன்றையச் சூழ்நிலையில் நாமும் பல சுயநலங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவற்றின் வழி வராத இதுபோன்ற 'சுயநலங்கள்' பல்கிப் பெருகட்டும். இதனால் உலக அமைதி பெருகத்தானே செய்யும்.

ஐசக் நியூட்டன், ராபர்ட் ரிப்ளி, ஆனி லெனாக்ஸ், அன்வர் சதாத் போன்ற பிரபலங்களுக்கு ஓர் ஒற்றுமை. அவர்கள் பிறந்தது இயேசுநாதர் பிறந்த டிசம்பர் 25-ல். அவர்களைப் பற்றி சில சங்கதிகள்:

ஐசக் நியூட்டன்

''மரத்தடியில் உட்கார்ந்திருந்தார். ஆப்பிள் கீழே விழுந்தது. 'ஏன்' என யோசித்தார். புவியீர்ப்பைக் கண்டுபிடித்தார்'' என்று எளிய முறையிலாவது பலருக்கும் அறிமுகமான விஞ்ஞானி. இயற்பியலில் மட்டுமல்ல கணிதவியலிலும் பெரும் மேதை. வெண்மையான ஒளிக்கீற்றில் பல்வேறு வர்ண ஜாலங்கள் மறைந்துள்ளன என்பதையும் கூட இவர்தான் கண்டுபிடித்தவர்.

1642-ல் பிரிட்டனில் உள்ள உல்ஸ்தோர்பே என்ற இடத்தில் பிறந்த இவர் படித்தது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில். பிறகு பல வருடங்கள் அங்கேயே விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதி ஒருவர், பாராளுமன்றத்தின் உறுப்பினராகலாம் என்பது நடைமுறை. அப்படியானவர் நியூட்டன். அப்போது நாட்டை ஆண்ட இரண்டாம் ஜேம்ஸ் மன்னன் பல்கலைக்கழகங்களையெல்லாம் கத்தோலிக்க அமைப்புகளாக மாற்ற முயற்சித்தது நியூட்டனுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. எதிர்த்துக் குரல் கொடுத்தார். ''ஐரோப்பாவின் மிகச் சிறந்த மேதை'' என்ற பெயரை அப்போதே பெற்றுவிட்டதால் அவரை யாராலும் அசைக்க முடியவில்லை. 1703-ல் லண்டனின் ''ராயல் சொஸைட்டி'' என்ற மிகப் பெருமைக்குரிய அமைப்பின் தலைவரானார். அதற்குப் பிறகு இறக்கும்வரை அவரேதான் அந்தப் பதவியில். (ஒவ்வொரு வருடமும் தேர்தல் நடைபெற்று அதில் வெற்றி பெற்றுக்கொண்டேயிருந்தார்)

அதேபோல லண்டனில் உள்ள நாணய சாலையின் கௌரவத் தலைவராகவும் பல வருடங்கள் இருந்திருக்கிறார்.

முன்கோபிதான். என்றாலும் சட்டென்று அந்தக் கோபம் தணிந்து விடும்.

கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. மிகவும் எளிமையாகத்தான் வாழ்ந்தார். ஆனால் அவரது இறுதி ஊர்வலத்தை ஒரு மாபெரும் சோகத் திருவிழாவாக நடத்திவிட்டுதான் ஓய்ந்தனர் இங்கிலாந்து மக்கள். புகழ்பெற்றவர்களுக்காக மட்டுமே ரிசர்வ் செய்யப்பட்ட 'வெஸ்ட் மினிஸ்டர் அபே' என்ற கல்லறையில் நியூட்டனுக்கு சிறப்பிடம் கிடைத்தது.

ராபர்ட் ரிப்ளி

''நம்பினால் நம்புங்கள்'' என்ற பெயரில் நூல்களை எழுதி, அதன்மூலம் உலகப் புகழ் பெற்றவர். பல நாடுகளில் உள்ள வியப்பான செய்திகளை இன்டர்நெட் மூலம் இவர் இருந்த இடத்திலிருந்தே சேகரிக்கவில்லை. இதற்கான இவர் உழைப்பு மகத்தானது.

ஒரு ஓவியராகவும், பத்திரிகையாளராகவும் விளங்கிய இவர், 198 நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். (அதில் பாதி நாடுகளின் பெயர்களை நினைவுக்குக் கொண்டு வரவே நாம் திணறிப் போய் விடுவோம்) இவர் மேற்கொண்ட பயணம் உலகம் முழுவதையும் பதினெட்டு முறை சுற்றி வருவதற்கு ஒப்பான தூரம் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

விளையாட்டுப் பிரிவு தொடர்பான கார்ட்டூனிஸ்டாக இருந்த இவர், அது தொடர்பான விந்தை செய்திகளைத்தான் முதலில் திரட்டினார். அந்தத் தொகுப்புக்கு இவர் இட்ட பெயர் சாம்ப்ஸ் அண்ட் சும்ப்ஸ்'' பத்திரிகை ஆசிரியருக்கு இந்தப் பெயர் பிடிக்கவில்லை. பிறகு மிக மிக யோசித்து அந்தத் தொகுப்புக்கு இவர் இட்டப் பெயர் 'நம்பினால் நம்புங்கள்' ('Believe it or not'). இந்த நூலுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது.

அந்த வருடக் கடைசியிலேயே நாளிதழ்களின் சக்கரவர்த்தி என்று கருதப்பட்ட 'கிங் ஃபீச்சர்ஸ்' என்ற அமைப்பில் கார்ட்டூனிஸ்டாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். வருட ஊதியமாக மூச்சடைக்க வைக்கும் ஒரு லட்சம் டாலர் தொகை அவருக்கு அளிக்கப்பட்டது. ரிப்ளியின் புகழ் வட்டம் காட்டுத் தீயை விட வேகமாகப் பரவியது.

ஒரு கட்டத்தில் உலகெங்கிலும் உள்ள 300 நாளிதழ்களில் இவரது ''நம்பினால் நம்புங்கள்'' வெளிவந்தது.

1933-ல் மட்டும் சிகாகோ உலகக் கண்காட்சியில் ரிப்ளி அரங்கத்தை விசிட் செய்தவர்கள் 20 லட்சம் பேர். (அந்த அரங்கின் பெயர் 'Odditorium').

தனது 55-வது வயதில், 1949-ல் இவர் இறந்தபோது, அவர் பிறந்த ஊரான (கலிபோர்னியாவில் உள்ள) சாண்டோ ரோஸா என்ற இடத்தில் உள்ள மாதா கோவில் வளாகத்தில் அவருக்கு ஒரு நினைவகம் எழுப்பப்பட்டது. அந்த மாதா கோவிலில்தான் ரிப்ளியும் அவரது குடும்பத்தாரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிரார்த்தனை செய்வது வழக்கம்.

அந்த மாதா கோவில் முழுவதும் ஒரே ஒரு ராட்சத மரத்தை வெட்டி உண்டாக்கப்பட்டதாம். நம்பினால் நம்புங்கள்.

ஆனி லெனாக்ஸ்

''இனிமையான கனவுகள், இங்கே மீண்டும் வருகிறது மழை! (நான் உன்னிடம் பொய் சொல்வேனா? பீத்தோவனே உன் இசையைக் கேட்க எனக்குக் கொள்ளை ஆசை''

என்ன இதெல்லாம்? நீங்கள் மட்டும் தீவிர பாப் இசைப் பிரியரென்றால் மேலே உள்ளவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகள்-ஆனி லெனாக்ஸ் என்ற பாப் பாடகியின் ஆல்பங்களிலிருந்து எடுத்த பிரபல பாடல்களின் முதல் வரிகள் என்பதை கண்டுபிடித்திருப்பீர்கள்.

தவே ஸ்டூவர்ட் என்பவரோடு இணைந்து இவர் அளித்த 'யுரித்மிக்ஸ்' என்ற ஆல்பம் உலகப் புகழ்பெற்றது. தனது பல பாடல்களை இவரே இயற்றியிருக்கிறார். உணர்ச்சிப் பொங்கப் பாடுவதில் வல்லவர் என்று புகழ்பெற்ற இவரது முதல் தனிப்பட்ட ஆல்பம் 'திவா'. அந்த ஆண்டின் சகல இசை விருதுகளும் (கிராமி உள்பட) 'திவா'வுக்குதான்.

முப்பது வயதுக்கு மேல் பாப் பாடகிகளால் மேடையில் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை உடைத்தெறிந்தார். நடுத்தர வயதுக்குப் பிறகும் இவரது இசை ராஜாங்கம் (ராணியாங்கம்?) தொடர்ந்தது.

பெரும்பாலும் கமர்ஷியல் கோணத்திலேயே வீடியோ இசை ஆல்பங்களைப் பார்த்து வருபவர்களுக்கு ஆனி லெனாக்ஸின் ஆல்பத்தைக் காண நேர்ந்தால், அவரிடம் அது நிச்சயம் ஒரு மரியாதையை ஏற்படுத்தத் தவறாது.

அன்வர் சதாத்

எகிப்து நாட்டின் பிரதமராக விளங்கிய அன்வர் சதாத், 1948-ல் இஸ்ரேல் என்ற புது நாடு உருவானதிலிருந்து பல புனிதப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். அப்படியானால் அவர் என்ன மத போதகரா அல்லது சுவாமியாரா என்று கேட்காதீர்கள்! அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்குமிடையே பகைமை பற்றியெறிந்தபோது, இவர் அந்த நாடுகளுக்கெல்லாம் சென்று அமைதியை நிலைநாட்ட மேற்கொண்ட முயற்சிகளை புனிதப் பயணங்கள் என்று வர்ணிப்பதில் தவறில்லையே!

மத்திய கிழக்குப் பகுதியின் முஸ்லிம் நாடு ஒன்றின் அதிபதி இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் பகுதிக்கு விஜயம் செய்தது-அன்று, எட்டாவது அதிசயத்தை விட மேம்பட்டதாகக் கருதப்பட்டது. ''எங்களுக்கும் இஸ்ரேலுக்குமிடையே கண்ணுக்குத் தெரியாத ஒரு சுவர் எழும்பியிருக்கிறது. அதை உடைப்பதற்காகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்'' என்றார் அன்வர் சதாத். அந்த சுவர் உண்மையிலேயே சுக்குநூறாக உடைந்தது, இஸ்ரேலில் பிரதமர் பெகிங் என்பவரோடு அவர் கைகோர்த்து நடந்தபோது உலகின் சமாதான காவலர்கள் நெகிழ்ந்து போனார்கள். அதற்கு உலகின் அடுத்த ஒரு மாதத்திற்குள் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த நல்லெண்ணத் தூதுவர்களும், பத்திரிகையாளர்களும் எகிப்துக்கு பறக்கத் தொடங்கினர்.

தொடக்கத்தில் சமாதான முயற்சிகளில் அமெரிக்காவை விட தான் ஒரு படி மேல் என்று பம்மாத்து வேலை காட்டத்தான் சதாத் ஒரேயடியாக வேஷம் போடுகிறாரோ என்று எண்ணிய அமெரிக்கா கூட சடசடவென்று பல நாடுகள் அவரது முயற்சியால் சமாதான ஒப்பந்தங்களில் கையெழுதிடப்பட்டதும் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டது.

''எகிப்து ஏழ்மையான நாடு. மக்கள் தொகையும் அதிகம். நாட்டின் தொகையில் 28 சதம் ராணுவத்துக்கே செலவானால் என்னாவது என்ற சுயநலம்தான் இந்த சமாதான முயற்சிகளின் அடிப்படை'' என்று ஒருமுறை அன்வர் சதாத் கூறியிருக்கிறார்.

இன்றையச் சூழ்நிலையில் நாமும் பல சுயநலங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவற்றின் வழி வராத இதுபோன்ற 'சுயநலங்கள்' பல்கிப் பெருகட்டும். இதனால் உலக அமைதி பெருகத்தானே செய்யும்.
 
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails