Thursday, July 31, 2008

எங்களைத் தீவிரவாதியாக மாற்றியது இஸ்லாமிய அமைப்புகள்தான்!-முஸ்லீம் தீவிரவாதியின் அதிரடி பேட்டி

 
03.08.08      ஹாட் டாபிக் 
 

வெடிகுண்டுகள் வெடித்து அதனால் சிதறிய ரத்தம் காயும் முன் நெல்லையில்  சேக் அப்துல் கபூர் என்பவரை அமுக்கியிருக்கிறார்கள் போலீஸார். அதேபோல சென்னை மண்ணடியில் `இறைவன் ஒருவனே' என்ற இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த அப்துல்காதர், ஹீரா ஆகியோரை போலீஸாரை  விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகளான தவ்ஃபீக், அபுதாகீர் ஆகியோர் தலைமறைவாக இருப்பதால் அவர்களை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், `பெங்களூரு, குஜராத் குண்டு வெடிப்புகளில்கூட தப்பியோடிய இந்த இருவருக்கும் தொடர்பிருக்கலாம்' என்ற சந்தேகத்தின்அடிப்படையில் போலீஸார்  வலைவீசித் தேடி வந்தனர்.  போலீஸாரின் பிடியில் சிக்கிய அப்துல்காதரின் தாயார் பசீராவை நாம் மண்ணடியில்சந்தித்துப் பேசினோம்.

"காதர்தான் எனக்கு மூத்த பையன். துணிக்கடை வைத்து நல்லபடியாகத் தொழில் நடத்தி வந்தான். அந்தக் கடைக்கு போலீஸ் தேடும் தீவிரவாதிகளில் ஒருவரான தவ்ஃபீக் அடிக்கடி வருவார். என் மகனும் அவரோடு அடிக்கடி பேசுவானே தவிர, மற்றபடி அவனுக்கு  எந்தவித சம்பந்தமுமில்லை. முன்பு ஒருமுறை தவ்ஃபீக்கை தேடி போலீஸார் என் வீட்டுக்கு வந்து அப்துல்காதரைக் கைது செய்தனர். மறுநாள் பேப்பர் பார்க்கும்போது, `என் மகனைத் தீவிரவாதி' என்றும், லாட்ஜில் சதி வேலை செய்யும்போது அவனைப் பிடித்ததாகவும் தகவல் வெளியானது. நான் அதிர்ந்துபோனேன்.

அவனுக்கு ஒசாமா பின்லேடனுடன் தொடர்பு, விடுதலைப்புலிகளுடன் தொடர்பு என்றெல்லாம் கோர்ட்டில் சொன்னார்கள். பிறகு ஜாமீன் கிடைத்து, போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தவனை, மீண்டும் கூட்டிப் போய்விட்டனர். கேட்டால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. தேவையில்லாமல் என் மகனைத் தீவிரவாதியாக மாற்றிவிட்டனர்'' என்ற பசீரா, உயர்நீதிமன்றத்தில் காதரை மீட்க ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், கோர்ட்டில் வழக்கு வரவிருந்த சிறிது நேரத்திலேயே காதரை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர் போலீஸார்.

பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்புடைய `தவ்ஃபீக்கும், அபுதாகீரும் எந்நேரமும் கைது செய்யப்படலாம்' என்ற தகவல் பரவியதால், மீடியாக்கள் கமிஷனர் அலுவலகத்திலேயே குவிந்து கிடந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தலைமறைவு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் அபுதாகீர் கோர்ட்டில் சரணடையப் போவதாகத் தகவல் பரவ, மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கோர்ட்டில் சரணடையச் செல்வதற்கு முன்பு நாம் அபுதாகீரை, அவரது வக்கீல் ரஜினிகாந்த் உதவியோடு மண்ணடியில் சந்தித்துப் பேசினோம்.

"என்ன சொல்வதென்றே தெரியவில்லை! இந்த இரண்டு மாதத்தில் போலீஸார் என்னை `லஸ்கர் இ தொய்பா தீவிரவாதியாகவே மாற்றிவிட்டனர். மண்ணடியில் கார்மெண்ட் எக்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தேன். ஒரு வருடத்திற்கு முன்புதான் `இறைவன் ஒருவனே' தவ்ஃபீக் எனக்கு அறிமுகம் ஆனார். அவரது பேச்சுக்களால் கவரப்பட்டு நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். ஒருநாள், அப்துல்காதர் என்னிடம், போலீஸ் தேடி வருவதாகச் சொன்னார். மறுநாள், `இந்து மதத் தலைவர்களைக் கொல்ல திட்டமிட்டிருப்பதாகவும், குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்பிருப்பதாகவும், லாட்ஜில் சதித்திட்டம் போட்டதாகவும், நானும் தவ்ஃபீக்கும் தப்பியோடிவிட்டதாக' தகவல் வெளியானது. ஆனால், லாட்ஜில் பழனி உமர் மட்டும்தான் தங்கியிருந்தான். ஹீராவை எக்மோர் ரயில் நிலையத்தில் கைது செய்தனர். அப்போது அவரிடம் இரண்டு வேட்டிகள்தான் இருந்தன. ஆனால், வெடிகுண்டு, துப்பாக்கி இருந்ததாகப் போலீஸ் சொன்னது.

மரபுரீதியாக நாங்கள் பேசிய பல பேச்சுக்கள் சில இஸ்லாமிய அமைப்புகளுக்குப் பிடிக்கவில்லை. அதோடு எங்கள் அமைப்புக்கு ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்தோடு வருவதும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. நாங்கள் தீவிரவாதியாக சித்திரிக்கப்பட்டதற்கு இதுதான் ஒரே காரணம். தவ்ஃபீக் மற்றும் எங்களில் சிலரை ஒழித்துக்கட்டினால்தான் நிம்மதி என்று அவர்கள் செயல்பட்டார்கள். கடந்த ஜனவரி 11_ம்தேதி நரேந்திரமோடி வந்ததற்கு, எங்களைக் கொடி பிடித்து போலீஸாரே எதிர்ப்பு காட்டச் சொன்னார்கள். நாங்கள் மறுத்ததும், பாதுகாப்புக் கைது என்ற பெயரில் பதினேழு நாட்கள் சிறையில் அடைத்தனர். இதற்கு அந்த அமைப்புகளின் தூண்டுதல்தான் காரணம்.

ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பிக்கு பின்புதான், என் மீது சதித்திட்டம்,  நாச வேலைக்கு திட்டமிட்டது என்ற ரீதியில் வழக்குகள் போடப்பட்டன. அதற்கு முன்பு என் மீது ஓர் அடிதடி வழக்குகூட கிடையாது. தவ்ஃபீக் இன்னமும் தலைமறைவாகத்தான் இருக்கிறார். அவர் வெளியில் வந்தால் போலீஸார் சுட்டுக் கொன்று விடுவார்கள். காரணம். ஒருமுறை போலீஸார் தவ்ஃபீக்கை என்கவுன்டரில் சுடப் போகும் தகவலைக் கேள்விப்பட்ட அவர் ஆவேசமாகி, `என்னை  எப்படிக் கொல்கிறார்களோ, அதேபாணியில்தான் அவர்களுக்கும் மரணம் நேரும்' என்றார். இது போலீஸாருக்கு அதீத கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.   

வேலூர் கோட்டையில் உள்ள மசூதி தொடர்பாக பிரச்னை வந்தபோது, `மசூதியை இடித்தால் எங்கள் கைகள் சும்மா இருக்காது' என இந்து முன்னணிப் பிரமுகர் ஒருவரை குறிவைத்து பேசினோம். உடனே `ராம.கோபாலன் உயிருக்குக் குறி' என்றார்கள். ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பில் எங்களுக்குத் தொடர்பு என்றதால் தலைமறைவாக இருந்தோம். இப்போது குஜராத் குண்டுவெடிப்பிற்கும் எங்களைக் கைகாட்டுகின்றனர். நாங்கள் வன்முறைப் பாதையை விரும்பவில்லை. அமைதியான வழியில்தான் இயக்க வேலைகளைச் செய்து வந்தோம்.

இரண்டு மாதமாக தலைமறைவாக இ,ருக்கிறேன். என் அலுவலகத்திற்கும் போலீஸார் சீல் வைத்துவிட்டனர். என் அப்பாவை அடிக்கடி விசாரணைக்கு அழைப்பது, என் தங்கையை நடுரோட்டில் வைத்து விசாரிப்பது என போலீஸார் செய்யும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அல்லாவை மட்டும்தான் நான் நம்புகிறேன். கோர்ட்டில் சரண்டரான பிறகு எனக்கு எது வேண்டுமானாலும் நேரலாம். இருப்பினும் கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு நடப்பதை முழுமையாக எதிர்கொள்ளவே இங்கே வந்திருக்கிறேன்'' என்றபடியே எழும்பூர் நீதிமன்றத்தில் சரண்டராக விரைந்தார் அபுதாகீர்.

நீதிமன்றத்திற்குள் அபுதாகீர்  நுழைந்தபோது, போலீஸார், மீடியாக்கள் என ஒரு பெரும்படையே அங்கே திரண்டிருந்தது. அபுதாகீரை `பதினைந்து நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்புமாறு' நீதிபதி முருகானந்தம் உத்தரவிட, புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அபுதாகீர்.

இறுதியாக, வழக்கை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரிகளிடம் பேசினோம். "தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடுத்து, பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்புடையவர்களை அழைத்து விசாரித்து வருகிறோம். அப்துல்காதரை விடுவித்துவிட்டோம். ஹீரா என்பவரை விசாரிக்க நெல்லை போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். அபுதாகீரை விரைவில் கஸ்டடியில் எடுத்து விசாரிப்போம். இந்து மதத் தலைவர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியது உள்பட சில வழக்குகள் அவர் மீது இருக்கிறன. விசாரணை முடிவில் பயங்கரவாத அமைப்புகளோடு இவர்களுக்கு உள்ள தொடர்புகள் வெளியில் தெரியவரும்'' என்றனர் அவர்கள்.

படங்கள்: ஞானமணி
ஸீ ஆ. விஜயானந்த்

http://www.kumudam.com Reporter

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails