யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்' என்ற பழமொழி சந்தன வீரப்பனுக்கும் ரொம்பவே பொருந்தும் போலிருக்கிறது. தற்போது மக்கள் தொலைக்காட்சியில் மீள்ஒளிபரப்பாகி வரும் `சந்தனக்காடு' என்ற வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றுத் தொடருக்கு தொடக்கத்தில் இருந்தே சர்ச்சை சலங்கை கட்டி ஆடுகிறது. ஆரம்பத்தில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அதற்கு எதிராக நீதிமன்றத்தையும் அணுகியதால் `சந்தனக்காடு' குழு அதிர்ச்சி அடைந்தது நிஜம். அதன்பின் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முத்துலட்சுமியை அழைத்து சமரசம் செய்தார். பின்னர், வழக்கை வாபஸ் வாங்கிய முத்துலட்சுமி, `அந்தத் தொடரை ஒளிபரப்ப எந்த எதிர்ப்பும் இல்லை' என்று எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். இதன்பிறகு புதுத்தெம்புடன் ஒளிபரப்பான சந்தனக்காடு தொடர், பலத்த வரவேற்பைப் பெற்றது. `வீரப்பன் என்கவுன்ட்டர் செய்யப்படவில்லை. விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார்' என்ற க்ளைமாக்ஸோடு அந்தத் தொடர் முடிவுக்கு வந்தது. `சந்தனக்காட்டின்' வெற்றி விழாவை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்ட மக்கள் தொலைக்காட்சி நிர்வாகிகள், அதற்காக ஒரு திரைப்படத்தின் வெற்றி விழா ரேஞ்சுக்கு நாளிதழ்களில் விளம்பரம் செய்து. ப்ளக்ஸ் பேனர்களை வைத்து அசத்தினர். கடந்த புதனன்று அந்த விழா சென்னையில் வெற்றிகரமாக நடந்தேறியது. டாக்டர் ராமதாஸ், இயக்குநர்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா, பாலாஜி சக்திவேல், சீமான், திருச்செல்வன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மற்றும் சந்தனக்காடு இயக்குநர் கௌதம் மற்றும் குழுவினர் அதில்கலந்து கொண்டனர். விழாவில் பேசியவர்கள், வீரப்பனையும் ராமதாஸையும் இஷ்டத்துக்குப் புகழ்ந்து தள்ளினர். ``இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகும் அனைத்து தொலைக்காட்சிகளும் தமிழீழத்தில் தடை செய்யப்பட்ட நிலையில், மக்கள் தொலைக்காட்சி மட்டுமே அங்கு ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் போர்க்களத்தில் இருக்கும் என் சகோதரன் (பிரபாகரன்) தினமும் இரவு எட்டரை மணிக்கு ஒளிபரப்பாகும் சந்தனக்காடு தொடரைப் பார்க்காமல் இருக்க மாட்டான்(!)'' என்று சீமான் ஒரே போடாகப் போட்டார். ஓவியர் வீர.சந்தானம் பேசும்போது, ``ராமேஸ்வரத்தில் விஜயகாந்த் பேசியது குமுதம் ரிப்போர்ட்டரில் தெளிவாக வந்திருக்கிறது. அவரது பேச்சுக்கு தமிழக அரசு என்ன சொல்லப் போகிறது?'' என்று கேள்வி எழுப்பினார். இயக்குநர்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றோர் இயக்குநர் கௌதமையும், வீரப்பனாக நடித்த கராத்தே ராஜாவையும் புகழ்ந்ததோடு ராமதாஸையும் புகழ்ந்து தள்ளினார்கள். புஷ்பவனம் குப்புசாமி அவர் பங்குக்கு, ``வீரப்பன் அடக்கம் செய்யப்பட்ட இடம் சமாதி அல்ல. கோயில்'' என்ற சந்தனக்காடு டைட்டில் பாடலைப் பாடி அசத்தினார். பின்னர், நாட்டுப்புறப் பாடல் ஒன்றை மனைவி அனிதாவுடன் சேர்ந்து பாடி கலகலப்பூட்டினார். ``வீரப்பன் ஒரு மாவீரன், அவன் உயிருடன் இருந்திருந்தால் ஒகேனக்கல் எங்களுடையது என்று கர்நாடகம் பிரச்னை செய்திருக்காது. தமிழகத்தின் எல்லைச்சாமி வீரப்பன்'' என்று விழாப் பேருரையில் பேசினார் ராமதாஸ். கலகலப்பாக நடந்த இந்த விழாவில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கலந்து கொள்ளவில்லை என்ற தகவல், பத்திரிகை நிருபர்களை உறுத்த, தங்கள் சந்தேகத்தை மக்கள் தொலைக்காட்சித் தரப்பில், அவர்கள் கேட்டும் விட்டார்கள். ``எங்கள் தரப்பில் இருந்து அழைத்தோம்; அவர்தான் வரவில்லை. காரணம் தெரியவில்லை'' என்ற பதில் மக்கள் தொலைக்காட்சி நிர்வாகிகளிடம் இருந்து வந்தது. `உண்மையில் முத்துலட்சுமி விழாவுக்கு அழைக்கப்பட்டாரா?' என்பதைத் தெரிந்து கொள்ள அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம். ``முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். சந்தனக்காடு தொடர் வெற்றிவிழாவுக்கு என்னை யாரும் அழைக்கவில்லை. அப்படியே அழைத்திருந்தாலும் நான் சென்றிருக்க மாட்டேன்'' என்றார் முத்துலட்சுமி. `ஏன் சென்றிருக்க மாட்டீர்கள்?' என்று அவரிடம் கேட்டபோது, பேசஆரம்பித்தார். ``என்னிடம் அனுமதி வாங்காமலேயே வீரப்பன் கதையை சந்தனக்காடு தொடராக எடுக்கத் தொடங்கினார்கள். நாங்கள் நீதிமன்றத்தை அணுகினோம். என்னைப் பற்றியும், என் மகள்கள் இருவரைப் பற்றியும் தொடரில் எதுவும் சொல்லக் கூடாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தோம். அதன்பின், ராமதாஸ் ஐயா என்னைத் திண்டிவனத்துக்கு அழைத்தார். `வீரப்பனைப் பற்றி தரக்குறைவாக எதையும் நாங்கள் காட்டப் போவதில்லை. உன்னைப் பற்றியும் எதுவும் தவறாகச் சொல்லப் போவதில்லை. எனவே வழக்கை வாபஸ் வாங்கிவிடு. அதே சமயத்தில் உனக்கு விருப்பம் இல்லையென்றால் வழக்கை நடத்திக் கொள்ளலாம். நாங்கள் உன்னை வற்புறுத்தவில்லை' என்று என்னிடம் சொன்னார். அவரே கேட்டுக் கொண்டதால் வழக்கை வாபஸ் வாங்க முடிவெடுத்தேன். மேலும் என்னைப் பற்றி தொடரில் காட்டுவதையும் எதிர்க்கவில்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டேன். பின்னர், வழக்கு செலவுக்காக ஐம்பதாயிரம் ரூபாயை ஐயா என்னிடம் கொடுத்தார். என் இரு மகள்களின் படிப்புச் செலவுக்காக அவர்கள் படிக்கும் பள்ளியில் ஒரு முறை இருபத்து மூன்றாயிரமும், மற்றொரு முறை பதினைந்தாயிரமும் அவர் செலுத்தினார். இதுதவிர,வேறு எந்தப் பணமும் அவரிடம் இருந்து நாங்கள் பெறவில்லை. பிளஸ் டூ படிக்கும் என் மூத்த மகள் வித்யாராணி, பிளஸ் ஒன் படிக்கும் இளைய மகள் பிரபா ஆகியோருக்கு பள்ளியில் பணம் செலுத்த வேண்டியிருந்தது. நான் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை பாக்கியும்இருந்தது. இந்தச் செலவுக்காகப் பணம் கேட்டு, கடந்த மே மாதம் என் அக்கா மற்றும் என் இரு மகள்களுடன் ஐயாவைச் சந்திக்க திண்டிவனம் போனேன். ஐயாவிடம் `செலவுக்குப் பணம் வேண்டும்' என்று கேட்டேன். அப்போது அவர் எங்களைத் திட்டத் தொடங்கினார். `எங்களை எதிர்த்து கேஸ் போட்டு என்ன சாதித்தாய்? மகள்கள் படிப்புச் செலவுக்குப் பணம் கொடுத்துவிட்டேன். இனி எதுவும் கிடையாது. முடியாது' என்று கோபமாகப் பேசினார். அவரது பேச்சால் ஆவேசமான என் இளைய மகள் பிரபா, `கேஸை வாபஸ் வாங்கிவிட்டோம். எழுதியும் கொடுத்துவிட்டோம். இனி இவர்களால் என்ன செய்ய முடியும் என்றுதானே இப்படிப் பேசுகிறீர்கள். இது நியாயமா?' என்று ஐயாவைப் பார்த்துக் கேட்டாள். உடனே ஐயா `வெளியே போ' என்று என் மகளைப் பார்த்துக் கத்தினார். அதற்கு, என் மகள், `யார் யாரோ எங்கள் அப்பாவின் கதையைப் படம் எடுக்க முன்வந்தார்கள். எங்கள் அம்மாவே படம் எடுத்திருந்தால் எங்களுக்குத் தேவையான பணம் கிடைத்திருக்கும்' என்றாள். அப்போது ஐயா, `உங்க அம்மாவால் படம் எடுக்க முடியுமா?' என்று கேட்டார். அதில் மேலும் ஆவேசமான என் மகள், என்னைப் பார்த்து `உன்னை நன்றாக ஏமாற்றி விட்டார்கள். அவர்களிடம் இனி மண்டியிட்டுத்தான் பணம் வாங்க முடியும்' என்றாள். அவளது இந்தப் பேச்சால் அதிர்ச்சியடைந்த ஐயா, தன் உதவியாளரை அழைத்து, என் மகளை வெளியே இழுத்துப் போகச் சொன்னார். அவரும் எங்களைப் பிடித்து வெளியே இழுத்துத் தள்ளினார். இதனால் என் மகள்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிவிட்டனர்'' என்றவர், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார். ``என் கணவர் வாழ்ந்த அந்தக் காட்டுப் பகுதியில் அலைந்து படம் எடுத்ததையே சந்தனக்காடு குழுவினர் சாதனையாகப் பேசுகிறார்கள். ஒருகாலத்தில் அவருடன் அந்தப் பகுதியில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சுற்றித் திரிந்த எங்களுக்கு எவ்வளவு வேதனை இருந்திருக்கும்? இன்றைக்கு என் கணவரைப் புகழும் யாரும் எங்கள் குடும்பக் கஷ்டத்துக்கு உதவ முன் வருவதில்லை. அவரது பெயரில் நடக்கும் விழாவுக்குப் பெயரளவில் கூட எனக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை. தமிழ், தமிழ் என்று பேசி நாடகம் ஆடுபவர்களின் முகத்திரையைக் கிழித்து, யார் உண்மையானவர்கள் என்பதை உலகிற்குக் காட்டுவேன்'' என்று வீரப்பன் பாணியில் சபதம் போட்டு முடித்துக் கொண்டார் முத்துலட்சுமி. படம்: மீடியா ராமு ஸீ வெற்றி |
No comments:
Post a Comment