புதுடெல்லி, ஜுலை.28-
45 பேரை பலிகொண்ட ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக, இஸ்லாமிய மாணவர் இயக்க தீவிரவாதி ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரை தொடர்ந்து, நேற்று முன்தினம் குஜராத் மாநிலம் ஆமதாபாத் சங்கிலி தொடர் குண்டு வெடிப்பில் 45 பேர் பலியானார்கள்.
டெல்லியில் கைது
குஜராத் போலீசார் நடத்திய விசாரணையில், இஸ்லாமிய மாணவர் இயக்க (சிமி) தீவிரவாதி அப்துல் ஹலீம் என்பவருக்கு இந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. 2002-ம் ஆண்டில் நடைபெற்ற குஜராத் கலவரத்தில் தொடர்புடைய ஹலீம், டெல்லியில் தலைமறைவாக இருந்து வந்தார்.
ஆமதாபாத் குண்டுவெடிப்பை தொடர்ந்து, குஜராத் போலீசார் டெல்லி போலீசாருடன் தொடர்பு கொண்டு ஹலீமுக்கு வலை விரித்தனர். போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், டெல்லி நகரின் இதயப் பகுதியான டேனி லிம்டாவில் பதுங்கி இருந்தபோது ஹலீம் பிடிபட்டார்.
ஹலீம் கைதான தகவலை ஆமதாபாத் இணை போலீஸ் கமிஷனர் ஆஷிஸ் பாட்டியா உறுதி செய்தார். ஆமதாபாத் குண்டுவெடிப்பு தொடர்பாக முதலில் கைதானது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இளைஞர்களுக்கு பயிற்சி
குஜராத் கலவரத்தை தொடர்ந்து, அகதிகள் முகாமில் தங்கி இருந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் ஹலீம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அந்த குடும்பங்களை சேர்ந்த ஆவேசமான இளைஞர்களை திரட்டி உத்தரப்பிரதேசத்துக்கு அழைத்துச்சென்ற ஹலீம், பின்னர் அவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி தீவிரவாத பயிற்சி பெற ஏற்பாடு செய்தார்.
அந்த இளைஞர்கள் மூலம் நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் நாச வேலைகளை மேற்கொள்வதற்கான திட்டம் தீட்டியதில் முக்கிய பங்கு வகித்தவர், அப்துல் ஹலீம் என்று குஜராத் போலீசார் தெரிவித்தனர். தற்போது போலீசாரின் பிடியில் சிக்கிய ஹலீமிடம் ஆமதாபாத் குண்டு வெடிப்பு பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=428240&disdate=7/28/2008
No comments:
Post a Comment