Saturday, May 3, 2008

விலைவாசி உயர்வுக்கு இந்திய மக்கள் காரணமா?அமெரிக்க அதிபர் புஷ் கருத்து முற்றிலும் தவறானது-கண்டனம்


விலைவாசி உயர்வுக்கு இந்திய மக்கள் காரணமா?
அமெரிக்க அதிபர் புஷ் கருத்து முற்றிலும் தவறானது
காங்கிரஸ் - கம்ïனிஸ்டு கண்டனம்


புதுடெல்லி, மே.4-

விலைவாசி உயர்வுக்கு இந்தியர்கள் அதிகமாக சாப்பிடுவதே காரணம் என்று அதிபர் புஷ் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ், கம்ïனிஸ்டு உட்பட பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

விலைவாசி உயர்வு

அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இதே நிலைமை நீடிக்கிறது. விலைவாசியை கட்டுப்படுத்த தவறி விட்டதாக மத்திய அரசை கண்டித்து பாரதீய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே இந்தியா மற்றும் சீனாவில் அதிக அளவில் உணவு பொருட்கள் பயன் படுத்துவதால் விலை அதிகரித்து விட்டதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி கண்டலீசா ரைஸ் தெரிவித்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்தியாவே காரணம்

இந்த நிலையில், வாஷிங்டன் அருகே ஒரு பொருளாதார மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் புஷ், `உலகம் முழுவதும் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள நடுத்தர மக்கள் அதிக அளவில் உணவு பொருட்களை சாப்பிடுவதால் அவற்றின் தேவை அதிகரித்து விலைவாசி உயர்ந்து விட்டது' என்றார்.

புஷ்சின் இந்த கருத்துக்கு காங்கிரஸ், பாரதீய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியதாவது:-

காங்கிரஸ் கண்டனம்

இந்தியாவில் உணவு பொருட்கள் பயன்படுத்துவதில் மாற்றம் ஏற்பட்டதாலேயே விலைவாசி அதிகரித்து விட்டதாக அதிபர் புஷ் கருதுவது முற்றிலும் தவறானது. இந்தியா, உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடு அல்ல. அது ஏற்றுமதி செய்யும் நாடு. வளர்ந்த நாடுகளில் பயோ-டீசல் உற்பத்திக்காக பெரும்பாலான விளைநிலங்களை ஒதுக்கியதே விலை உயர்வுக்கு முக்கிய காரணம் ஆகும்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியின்போது, இந்தியாவின் உணவு தன்னிறைவுக்காக முதலாவது பசுமைப் புரட்சி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் இருந்து இந்தியா பின்வாங்கவில்லை. இரண்டாவது பசுமை புரட்சி திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் வேளாண் உற்பத்தியை 4 சதவீதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மணீஷ் திவாரி தெரிவித்தார்.

மத்திய மந்திரி தாக்கு

மத்திய வர்த்தக துறை இணை மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "அதிபர் புஷ்சுக்கு ஒருபோதும் பொருளாதார அறிவு சிறப்பாக இருந்தது கிடையாது. தற்போது, மீண்டும் ஒருமுறை அதை நிரூபித்து இருக்கிறார். இந்தியாவில் உணவு பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதால் உலக அளவில் விலைவாசி உயர்ந்து விட்டதாக கூறுவது முற்றிலும் தவறானது'' என்றார்.

பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

பாரதீய ஜனதா

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் மத்திய மந்திரிகளின் பொறுப்பற்ற அறிக்கைகளுக்கு அதிபர் புஷ், முழு வடிவம் கொடுத்து இருக்கிறார். விலைவாசி உயர்வு குறித்து மத்திய மந்திரி பிரபுல் படேல் கூறியபோது கூட, `மக்களின் உணவு பழக்க மாற்றத்தால் விலைவாசி அதிகரித்து விட்டது' என்று இதே போன்ற கருத்தை தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சி என்பது, அத்தியாவசிய பொருட்களின் அதிகப்படியான தேவையோடு இணைந்தது ஆகும். தேவையான அளவு உணவு பொருட்களை வினியோகம் செய்வதோடு, விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பதும் அரசின் பொறுப்பு.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

இடதுசாரிகள்

இந்திய கம்ïனிஸ்டு தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா கூறுகையில், "இந்தியாவில் அதிக அளவு உணவு பொருட்கள் பயன்படுத்துவது குறித்து புஷ் எதுவும் சொல்லத் தேவையில்லை. அவருடைய நாட்டில் அவருக்கு நிலவும் பிரச்சினைகளை முதலில் கவனிக்க வேண்டும். இந்தியாவின் பிரச்சினையை நாங்களே சமாளிப்போம். இதுபோன்று அசிங்கமான முறையில், இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம்'' என்றார்.

மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், "உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்ததற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளே காரணம் என்று ஐ.நா.சபை தெளிவாக கூறியுள்ளது. எனவே, அதிபர் புஷ்சின் கருத்து முட்டாள்தனமானது'' என்று கூறினார்.

 


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=410584&disdate=5/4/2008

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails