'இளைஞர்களைக் காக்க புகையிலை விளம்பரங்களை தடை செய்க' | |
| |
உலகிலுள்ள 1.8 பில்லியன் இளைஞர்களைக் காப்பதற்கு, உடனடியாக அனைத்து நாடுகளும் புகையிலை விளம்பரங்களுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் (உ.சு.நி.) கேட்டுக்கொண்டுள்ளது. 'உலக புகையிலை எதிர்ப்பு தினம்' இன்று (மே 31) அனுசரிக்கப்படும் நிலையில், உயிரைக் கொல்லும் புகையிலைப் பழக்கத்துக்கு இளைஞர்கள் பலரும் அடிமையாவதற்கு தூண்டுதலாய் இருக்கும் புகையிலை விளம்பரங்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதை உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டு வலியுறுத்த முடிவு செய்துள்ளது. பல கோடி ரூபாய் செலவில், உலகம் முழுவதுமுள்ள புகையிலை நிறுவனங்கள் செய்யும் விளம்பரங்கள், இளைஞர்களின் புகைப்பழக்கத்துக்கு தூண்டுகோலாய் அமைகின்றன என்பதை, அண்மைக்கால மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்திருப்பதை உலக சுகாதார நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. கவர்ச்சிக்கும், சக்திக்கும், எதிர்பாலினத்தவரை ஈர்க்கவல்லதாகவும் புகையிலை பங்காற்றுவதாக, தவறான போக்கில் விளம்பரங்கள் மூலம் இளைஞர்களை புகையிலை நிறுவனங்கள் வசியப்படுத்துவதாக உ.சு.நி. வெகுவாக சாடுகிறது. "புகையிலையை விட்டொழிவதாலும், அப்பழக்கத்தின் விளைவால் மரணமடைவதாலும் குறைகின்ற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு, இப்பழக்கத்துக்கு இளம் வயதினர் அடிமையாவதற்கான வழிகளைப் பின்பற்றி, தங்களது வியாபாரத்தை புகையிலை நிறுவனங்கள் பெருக்கிக் கொள்கின்றன" என்கிறார், உ.சு.நி.யின் தலைமை இயக்குனர் டாக்டர் மார்கிரேட் சான். "புகையிலையை விளம்பரப்படுத்துதல், பிரபலப்படுத்துதல் போன்ற அனைத்து வடிவிலான நடவடிக்கைகளை தடை செய்தால்தான், உலக இளைஞர்களை காப்பற்ற முடியும்" என்று மார்கிரேட் திட்டவட்டமாக கூறுகிறார். உலக அளவில் பெரும்பாலும் 18 வயதிற்கு உள்ளாகவே புகைப்பழக்கத்துக்கு இளைஞர்கள் ஆளாகின்றனர். குறிப்பாக, 25 சதவிகிதத்தினர் 10 வயதுக்கு முன்பாகவே இப்பழக்கத்தைத் தொடங்கிவிடுகின்றனர். திரைப்படங்கள், இணைய தளங்கள், ஃபேஷன் பத்திரிகை இதழ்கள், இசை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளின் மூலம் தங்களது விளம்பரங்களை இளைஞர்களைக்கு எளிதில் கொண்டு சேர்க்கிறது புகையிலை நிறுவனங்கள். பள்ளிச்சிறார்களும் இளம்பெண்களும்! உலக அளவில் 13 முதல் 15 வயது வரையிலான பள்ளிச் சிறார்களில் 55 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர், புகையிலை விளம்பரங்களை நேரடியாக பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். வளரும் நாடுகளிலோ 80 சதவிகித இளைஞர்களை புகையிலை நிறுவனங்கள் குறிவைப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும், உலக அளவில் மாணவிகளிடத்திலும் புகைப்பழக்கம் துரிதமாக பரவிவருவது அதிகரித்துள்ளதாகவும் உ.சு.நி. எச்சரிக்கிறது. தற்போது, உலக அளவில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்டோர் புகைப்பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். ஆண்டுதோறும் உலக மக்கள் தொகையில், 5.4 மில்லியன் பேரின் உயிர்களை புகைப்பழக்கம் குடிக்கிறது! இந்தியாவில் இப்பழக்கத்தால் ஆண்டுக்கு ஏழத்தாழ 10 லட்சம் பேர் இறக்கின்றனர். உலக அளவில் அடுத்த 50 ஆண்டுகளில் 520 மில்லியன் மக்கள், புகைப்பழக்கத்துக்கு பலியாகும் அபாயம் உண்டு என்றும் உ.சு.நி. எச்சரிக்கிறது. | |
(மூலம் - வெப்துனியா |
Saturday, May 31, 2008
'இளைஞர்களைக் காக்க புகையிலை விளம்பரங்களை தடை செய்க'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment