Friday, May 30, 2008

சமஸ்கிருதத்தில் 100 வாங்கிய முஸ்லீம் மாணவர்

சமஸ்கிருதத்தில் 100 வாங்கிய முஸ்லீம் மாணவர்
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

சென்னை: முஸ்லீம் மாணவரான குல்சார் அகமது, சமஸ்கிருதப் பாடத்தில் 100க்கு நூறு வாங்கி அசத்தியுள்ளார்.

சென்னை முகப்பேரில் உள்ள டிஏவி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாவது வகுப்பு படித்தவர் குல்சார் அகமது. இவரது பூர்வீகம் கேரளா. குல்சார் அகமது, 10வது வகுப்பில் இரண்டாவது மொழிப் பாடமாக சமஸ்கிருதத்தை தேர்ந்தெடுத்தார். 9ம் வகுப்பிலேயே அவர் சமஸ்கிருதம் படித்தார்.

நேற்று வெளியான பத்தாவது வகுப்பு தேர்வு முடிவுகளில், குல்சாருக்கு சமஸ்கிருதத்தில் 100 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. இந்துக்களின் புனித மொழியாக கருதப்படும் சமஸ்கிருதத்தில், முஸ்லீம் மாணவரான குல்சார் சென்டம் போட்டது சக மாணவர்களுக்கு வியப்பைக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து குல்சார் கூறுகையில், சமஸ்கிருதம் படிக்க எனக்கு சிரமமாக இல்லை. 8ம் வகுப்பு வரை நான் இந்தி படித்துள்ளேன் என்பதால் சமஸ்கிருதத்தை நான் எளிதாக எதிர்கொள்ள முடிந்தது. இதன் மூலம் எனது மொத்த மதிப்பெண் சராசரி உயர்ந்துள்ளது.

எனக்கு ராமாயணம், மகாபாரதம் முழுமையாகத் தெரியும். 11 வயதாகும்போதே நான் ஆங்கிலத்தில் மகாபாரத்தைப் படித்துள்ளேன்.
எனக்கு மகாபாரத்தில் மிகவும் பிடித்த கேரக்டர் அர்ஜூனன்தான் என்றார் குல்சார்.

சமஸ்கிருதத்தில் சென்டம் போட்டுள்ள குல்சார், தனது மத பழக்கங்களிலும் அதிக நம்பிக்கை கொண்டவராம்.

இதுகுறித்து குல்சாரின் தந்தை அப்துல் ஹமீது கூறுகையில், குல்சார் தினசரி தொழுகை நடத்தத் தவற மாட்டார். நான் கூட சில நேரங்களில் செய்ய மாட்டேன். ஆனால் குல்சார் அப்படி இல்லை. தவறாமல் தொழுகை செய்வார் என்றார்.

பலே மருதபாண்டியன்!:

மாநில அளவில் பத்தாவது வகுப்புத் தேர்வில் 2வது ரேங்க் பெற்றுள்ள பெரம்பலூர் மருதபாண்டியன், ஒரு ஏழை விவசாயியின் மகன் ஆவார். 3 பாடங்களில் இவர் சென்டம் போட்டு அசத்தியுள்ளார்.

தந்தையுடன் சேர்ந்து விவசாயத்தையும் பார்த்துக் கொண்டே படித்து சாதனை படைத்துள்ளார் மருதபாண்டியன். வியாழக்கிழமையும் வயலுக்குப் போய் வேலை பார்த்து விட்டு வந்து படுத்தவருக்கு வெள்ளிக்கிழமை இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

காலையிலேயே மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியின் அலுவலகத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு மருதபாண்டியனுக்கு இனிப்பான செய்தியைத் தந்தது.

பத்தாவது வகுப்பில் மாநில அளவில் 2 வது ரேங்க் பெற்றுள்ள மருதபாண்டியன், மொத்தம் 494 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். தமிழில் 98, ஆங்கிலத்தில் 98, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 என பிரமிக்க வைத்துள்ளார்.

விவசாயியின் மகனான இவருக்குள் ஒளிந்திருக்கும் திறமையை மதித்து அவரது பெற்றோரும் தங்களது மகனை ஊக்குவித்து வந்தனர். பெற்றோர்களின் ஆதரவால்தான் தன்னால் இந்த சாதனையைப் படைக்க முடிந்தது என்கிறார் மருதபாண்டியன்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails