யாழ்ப்பாணம் அருகே, அதிகாலையில் அதிரடி தாக்குதல்
கடற்படை தளம் செயல்பட்ட குட்டித்தீவை விடுதலைப்புலிகள் கைப்பற்றினார்கள்
13 சிங்கள மாலுமிகள் கொல்லப்பட்டனர்
கொழும்பு, மே.30-
இலங்கை ராணுவம் மற்றும் கடற்படை தளம் செயல்பட்ட குட்டித்தீவை, அதிரடி தாக்குதல் மூலம் விடுதலைப்புலிகள் கைப்பற்றினார்கள். அதிகாலை நடைபெற்ற மோதலில் சிங்கள மாலுமிகள் 13 பேர் கொல்லப்பட்டனர்.
குட்டித்தீவு மீட்பு
இலங்கை தமிழர் பகுதியான யாழ்ப்பாணம் அருகில் உள்ள குட்டித்தீவில் (சிரத்தீவு) ராணுவம் மற்றும் கடற்படை தளங்கள் செயல்பட்டு வருகின்றன. விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பிரிவினர் நேற்று அதிகாலையில் இந்த ராணுவ தளங்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.
எதிர்பாராத இந்த தாக்குதலில் நிலை குலைந்த சிங்கள கடற்படை மாலுமிகள் கொல்லப்பட்டனர். வெற்றிகரமாக நடைபெற்ற இந்த தாக்குதலை அடுத்து குட்டித்தீவை கைப்பற்றியதாக விடுதலைப்புலிகள் அறிவித்து உள்ளனர்.
ராணுவம் மறுப்பு
விடுதலைப்புலிகளின் ஆதரவு இணைய தளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. பலியான 3 மாலுமிகளின் படங்களுடன் அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதக்குவியலும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால், இலங்கை ராணுவம் இந்த தகவலை மறுத்து உள்ளது.
இந்த தாக்குதலை அடுத்து பூநகரியில் இருந்து ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்குதலில் கடற்புலிகளின் 4 படகுகளை மூழ்கடித்து, 15 விடுதலைப்புலிகளை கொன்றுவிட்டதாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தசநாயகே அறிவித்து இருக்கிறார்.
பீரங்கி தாக்குதல்
சிங்கள வீரர் ஒருவர் பலியானதாகவும், 3 வீரர்களை காணவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாணம் நகரை நோக்கி கடற்புலிகள் நடத்திய பீரங்கி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 6 பேர் பலியானார்கள் 20 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் அவர் கூறினார்.
இந்த தாக்குதல் பற்றி விடுதலைப்புலிகள் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
54 பேர் பலி
சித்திரத்தீவு மற்றும் முல்லைத்தீவு, மன்னார் பகுதியில் விடுதலைப்புலிகளின் முகாம்கள் மீது இலங்கையின் முப்படையினர் நடத்திய தாக்குதலில் 46 விடுதலைப்புலிகள், பொதுமக்கள் 6 பேர், 2 சிப்பாய்கள் உள்பட 54 பேர் பலியானதாக ராணுவ தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் இலங்கைப்போரில், தற்போது ராணுவத்தின் கை ஓங்கி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கணித்து உள்ளனர். என்றாலும், இரு தரப்பிலுமே சரியான தகவல்கள் வெளியிடப்படுவது இல்லை என்பதால், உண்மை நிலவரம் இன்னும் புதிராகவே இருந்து வருகிறது.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=415806&disdate=5/30/2008
No comments:
Post a Comment