Wednesday, May 28, 2008

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி.இவ்வளவு இடங்களை பிடிக்க காரணம் என்ன?ஓர் ஆராய்ச்சி

கர்நாடகத் தேர்தலில் தமது இந்துத்வா முழக்கங்களை பி.ஜே.பி. முன் வைக்கவில்லை. அதை மூட்டை கட்டி வைத்து விட்டது. விலைவாசி உயர்வைத்தான் முன்னிறுத்தியது. காரணம், வெங்காயத்தின் விலை உயர்வுதான் தங்கள் டெல்லிப் பிரதேச ஆட்சியையே கவிழ்த்தது என்பதனை அவர்கள் அறிவார்கள். விலைவாசி உயர்வுப் பிரச்னையால் நல்ல பலன் கிடைத்தது. நமது பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் புரிய வேண்டுமே?
 
 
 
 
 
 
ர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. தனிப்பெரும் சக்தியாக எழுந்திருக்கிறது. தனித்து ஆட்சி அமைக்க  அதற்கு இன்னும் கூடுதலாக சில இடங்கள் தேவையென்றாலும் அரசு அமைக்க அந்தக் கட்சியை அழைப்பதுதான் ஜனநாயகம்.


இந்த வெற்றி மூலம் விந்தியத்திற்குத் தெற்கே பி.ஜே.பி. தடம் பதிக்கிறது. தலித் மக்கள் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பார்கள். அந்த வாக்கு வங்கியை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி குஜராத் தேர்தலில் சிதைத்தது. மீண்டும் நரேந்திர மோடி முதல்வரானார். இப்போது கர்நாடகத்தில் பி.ஜே.பி. ஆட்சிப் பீடம் ஏற, அதே கைங்கர்யத்தை மாயாவதி செய்திருக்கிறார்.


கர்நாடகத் தேர்தலில் மாயாவதி தனித்து `களம்' காண்கிறார் என்ற செய்தி ஏற்கெனவே பி.ஜே.பி.யின் வெற்றிக்குக் கட்டியம் கூறி விட்டது.


தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் பி.ஜே.பி.யின் தேர்தல் வல்லுனர் அருண் ஜேட்லி பெங்களூருவுக்கு வந்து சேர்ந்தார். அமைதியாகப் பணிகளைத் தொடங்கினார். அடுத்து அவர் ஓர் அறிவிப்புச் செய்தார். வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, `தேர்தல் பணியில் வெகுதூரம் முன்னேறி விட்டோம். ஆனால் காங்கிரஸ் கட்சி இன்னும் பயணத்தையே தொடங்கவில்லை' என்றார். இறுதிவரை பி.ஜே.பி.யே முன்னேறி முன்னேறி வெற்றிக் கம்பத்தைச் சற்றுத் தடுமாற்றத்துடன் தொட்டு விட்டது.


பொதுவாக கர்நாடகாவின் கடற்கரை மாவட்டங்கள் - தென் கன்னடப் பகுதி பி.ஜே.பி.யின்  கோட்டை என்பார்கள். இம்முறை அந்தக் கோட்டையில் சற்று ஓட்டை விழுந்தது. மராட்டிய மொழிபேசும் மக்கள் கணிசமாக வாழ்கின்ற வட கன்னட மாவட்டங்களில் காங்கிரஸ்  கட்சியின் பலம் கூடியிருக்கிறது. ஆனால், அதன் செல்வாக்கு மண்டலமாகக் கருதப்பட்ட மத்திய கர்நாடகாவில் பெரும் சரிவைச் சந்தித்து இருக்கிறது.


கடந்த தேர்தலில் பெற்ற இடங்களை விட தற்போது காங்கிஸ் கட்சிக்கு 15 இடங்கள் கூடுதலாகக் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் அந்தக் கட்சி ஆறுதல் பெறலாம். ஆனால், பி.ஜே.பி. 31 இடங்கள்  அதிகமாகப் பெற்றிருக்கிறது.


அரசியல் பொம்மலாட்டம் நடத்தும் தேவேகவுடாவின்  ஐக்கிய ஜனதா தளம்தான் பெரும் இழப்பைச் சந்தித்தது.   அதன் சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு இன்னும் கர்நாடகம் முழுமையாக விடை கொடுக்கவில்லை. இருந்தாலும் மரணஅடி கொடுத்திருக்கிறது. வேண்டுமானால் உயிர் பிரிய-வில்லை என்று சொல்லலாம்.


கர்நாடகத் தேர்தலில் பணம்தான் பிரதானமாக இருந்தது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி தெரிவித்திருக்கிறார். உண்மை. இந்திய அரசியலை காங்கிரஸ் கட்சியும், பி.ஜே.பி.யும் அழிவு முனைக்கு அழைத்துச் செல்கின்றன என்பதனை கர்நாடகத் தேர்தல் வெளிச்சம் போட்-டுக் காட்டி விட்டது.


ரியல் எஸ்டேட் அதிபர்கள், சுரங்க முதலாளிகள், சங்கிலித் தொடராகப் பல்வேறு கல்லூரிகளை நடத்தும் கல்விக் கொள்ளையர்கள், திடீர் குபேரர்கள், கள்ளச்சாராய ஆலை அதிபர்கள் மற்றும் தாதாக்களின் கரங்களுக்கு இந்திய அரசியல் மாறி வருகிறது என்பதனையே காங்கிரஸ், பி.ஜே.பி. வேட்பாளர்களின் பட்டியல் படம் பிடித்துக் காட்டுகிறது.


மாநில பி.ஜே.பி.யின் தேர்தல் பெட்டகமே ஒரு ஜனார்த்தன ரெட்டிதான். அவர்தான் பி.ஜே.பி.க்காகத் தேர்தலையே நடத்தியவர். பெல்லாரியில் குடிகொண்டிருக்கும் அவர், சுரங்கங்களின் ஏகபோகச் சக்கரவர்த்தி. இப்போது சீனத்திற்கு பெல்லாரி இரும்புத் தாது கப்பல் கப்பலாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்த ரெட்டிகாரின் வருமானம் அவ்வளவு அதிகமில்லை.  ஒரு நாள் வருமானம் ஏழுகோடிதான் என்று கர்நாடக ஏடுகள் கண்சிமிட்டிக் கூறுகின்றன.


காங்கிரஸ் வெற்றி பெற்றால், சுரங்கத் துறையிலுள்ள தமது ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி விழுந்து விடும் என்று நியாயமாகவே அச்சப்பட்டார். அந்த ரெட்டிகாரின் தர்பாரை மீறி பெல்லாரி உள்பட பல மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி தேர்தல் பணியே செய்ய முடியவில்லை.


வாரிசு அடிப்படையில் இனி தேர்தல் டிக்கெட் இல்லை என்று கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமை நல்ல முடிவு எடுத்தது. மார்கரெட் ஆல்வா உள்பட காங்கிரஸ் கட்சியின் 12 பெரும் புள்ளிகளின் வாரிசுகளுக்கு தேர்தல் டிக்கெட் கொடுக்கவில்லை. அதே சமயத்தில் வேட்பாளர் தேர்வில் பி.ஜே.பி.யின் வழியைத்தான் பின்பற்றியது. காங்-கிரஸ் வேட்பாளர்களில் கணிசமானவர்கள் வசதி-படைத்த செல்வந்தர்கள்தான். பி.ஜே.பி. ரகத்தைச் சேர்ந்த-வர்கள்-தான்.


தேவேகவுடாவின் மைந்தன் குமாரசாமி முதல்வராக இருந்தபோது ஒரு நல்ல காரியம் செய்தார். பெங்களூரு நகர எல்லைக்குள் யார் யார் அரசு நிலங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதனைக் கண்டுபிடிக்க ஒரு குழு அமைத்தார்.  அரசுக்குச் சொந்தமான ஏறத்தாழ 1300 ஏக்கர் நிலங்களை அரசியல்வாதிகள்தான் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதனை அந்தக் குழு கண்டுபிடித்தது.


ஆனாலும் நிலத்தை மீட்க முடியவில்லை. ஆக்கிரமிப்பாளர்கள் பலநூறு  மாடி வீடுகள், அடுக்கு மாடி வீடுகள் கட்டி விற்பனை செய்து பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகளாகி விட்டார்கள். அவர்களும் இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பி.ஜே.பி. வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். வெற்றியும் பெற்றனர். தங்கள் நலன் என்று வரும்போது, இவர்கள் ஆளும் கட்சியைக் காப்பதற்கு அணிதிரண்டு நிற்கத் தயாராக இருக்கிறார்கள். இந்திய அரசியலின் இதயமே எப்படிச் செல்லரித்துப்-போய் வருகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.


கர்நாடகா தேர்தலில் குறிப்-பிடத்தக்க அம்சம் என்னவெனில், காங்கிரஸோ, பி.ஜே.பி.யோ, கவுடாவின் ஜனதா தளமோ கூட்டணி அமைக்கவில்லை. தனித்தேதான் போட்டியிட்டன.


நாடு முழுமையும் நடந்த தொகுதிச் சீரமைப்பிற்குப் பின்னர் கர்நாடகம்தான் முதன்முதலாகத் தேர்தலைச் சந்தித்தது. எனவே, தீர்ப்பு எப்படியிருக்கும் என்று தேர்தல் ஆணையமும் அச்சம் தெரிவித்தது. அரசியல் கட்சிகளும் திகைத்துப் போய்தான் தேர்தல் களத்திற்கு வந்தன. ஆனால், தொகுதிச் சீரமைப்பு எந்தக் கட்சியின் வெற்றி தோல்விகளையும் தீர்மானிக்கவில்லை. மாநில காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தொடர்ந்து ஒன்பதாவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார்.


தங்கள் கட்சியின் ஆதரவின்றி எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்று கவுடாவின் ஜனதாதளம் நம்பிக்கையோடு இருந்தது. பெல்லாரி சுரங்கத் துறையையும், தொழில்துறையையும் எந்தக் கட்சி தங்களுக்கு சீதனமாக அளிக்கிறதோ, அந்தக் கட்சியுடன் அணி சேர தேவேகவுடா தயாராக இருந்தார். ஆமாம். கர்நாடகா அரசியலைத் தீர்மானிப்பதே பெல்லாரி சுரங்கங்கள்தான்.


அடுத்து வரும் சட்டமன்றங்களின் தேர்தல் தீர்ப்பிற்-கும், நாடாளுமன்றத் தேர்தல் தீர்ப்பிற்கும் கர்நாடக தேர்தல் தீர்ப்பு முன்னோடியாக இருக்கும் என்று பி.ஜே.பி. தெரிவித்தது. இப்போது அந்தக் கட்சி நம்பிக்கையோடு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.


கர்நாடகத் தேர்தலில் தமது இந்துத்வா முழக்கங்களை பி.ஜே.பி. முன் வைக்கவில்லை. அதை மூட்டை கட்டி வைத்து விட்டது. விலைவாசி உயர்வைத்தான் முன்னிறுத்தியது. காரணம், வெங்காயத்தின் விலை உயர்வுதான் தங்கள் டெல்லிப் பிரதேச ஆட்சியையே கவிழ்த்தது என்பதனை அவர்கள் அறிவார்கள். விலைவாசி உயர்வுப் பிரச்னையால் நல்ல பலன் கிடைத்தது. நமது பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் புரிய வேண்டுமே?


எதிர்காலத்தில் புதிய அரசியல் அணிகள் அமைவதற்கான வாசலை கர்நாடகா  தேர்தல் திறந்து விட்டிருக்கிறது. சோனியாவுக்குத் தெரிய வேண்டுமே?            ஸீ 
 

 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails