Sunday, May 25, 2008

முகம் மாறும் கிரிக்கெட்... தடுமாறும் வீரர்கள்!

கிரிக்கெட்டின் முகம் மாறிவிட்டது.


ஐந்து நாட்கள் நின்று நிதானமாக ஆடும் டெஸ்ட் ஆட்டம், கொஞ்சம் வேகம், கொஞ்சம் விவேகம் என்று கலந்துகட்டி ஆடும் ஒருநாள் போட்டிக்கான செல்வாக்கு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை.

அடிஅடியென, இடிஇடியென அடிக்கும் மட்டையாளர்களுக்கும்,
ஸ்டம்புகளை எகிறவிடும் பந்துவீச்சாளர்களுக்கும் தான் இன்றைக்கு மதிப்பு. `டுவென்டி- 20'-ல் எல்லாமே அதிரடி வேகம் தான். இங்கு யாரும் நொண்டி
யடிக்க முடியாது.

விளம்பரதாரர்கள், பார்வையாளர்கள் என்ற அளவிலேயே நின்ற நிறுவன முதலாளிகளும், நடிகர்களும் கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களாக, விளம்பரத் தூதர்களாக மைதானத்துக்குள் வந்துவிட்டனர்.

என்றைக்கு பிசினஸ் மகாராஜாக்கள் கிரிக்கெட்டு வந்தார்களோ, அப்போதே கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு, பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, லாப- நஷ்டக் கணக்குப் பார்க்கும் மெகா தொழில் என்றாகிவிட்டது.

ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் ஒரு வீரர் சோபிக்காவிட்டால் தேர்வாளர்கள்தான் கவலைப்படுவார்கள். இன்று `டுவென்டி- 20'யிலோ ஒரு வீரர் சொதப்பினால் அந்த அணியின் ஓனருக்கு ரத்த அழுத்தம் எகிறுகிறது.

பிரமëமாண்டமான முதலீடு, விலாவாரியான விளம்பர உத்திகள், சியர் லீடர்ஸ் மாதிரியான `ஜிகினா' வேலைச் செலவு, உலக அளவிலான கவனம், சர்வதேச டி.வி. ஒளிபரப்பு என்ற ஐ.பி.எல்.லினë அதீதமான பின்னணியில், ஒரு அணி சந்திக்கும் தோல்விகள் சில சலசலப்புகளையும், விரும்பத்தகாத சூழலையும் ஏற்படுத்துவது இயல்பே.

`பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்' உரிமையாளரான மதுபான சக்கரவர்த்தி விஜய் மல்லையாவின் வார்த்தைகளிலிருந்து அதை முழுமையாகப் புரிந்து
கொள்ளலாம்.

``நான் கிரிக்கெட்டை அதிகம் விருமëபிப் பார்ப்பவன் என்றபோதும், அதில் நிபுணன் கிடையாது. ஆனாலும் அதிரடியாக விளையாடும்திறன் படைத்த சிலரை அணியில் சேர்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் டிராவிட்டின் `ஐடியா' வேறு மாதிரி இருந்தது. அவர் ஒரு முக்கியமான வீரர் என்பதாலும், அணியின் தலைமை நிர்வாகி சாரு சர்மா அவருக்கு ஆதரவாக இருந்ததாலும் அவர்கள் போக்கில் விட்டுவிட்டேன். ஆனால் அணி பட்டியலைப் பார்த்த எனது நண்பர்கள், `இது டெஸ்ட் அணி போல இருக்கிறது' என்றார்கள். அதனë பிரதிபலிப்பு இனëறு தெரிகிறது. என்ன செய்வது, `துரதிர்ஷ்டவசமாக' மற்ற விளையாட்டுகளைப் போல கிரிக்கெட்டிலும் கேப்டன்தான் `பாஸ்' என்ற நிலைமை இருக்கிறது. எங்கள் அணி புள்ளி பட்டியலில் கடைசியில் இருப்பதை நான் மட்டுமல்ல, டிராவிட்டும் விரும்ப மாட்டார் என்று நினைக்கிறேன்...'' என்று பொருமித் தீர்த்துவிட்டார்.

இதன் தொடர்விளைவாக சாரு சர்மா அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, டிராவிட் தனக்கே உரிய பாணியில் `கட்டை' போட்டார்.

ஐ.பி.எல்.லில் மும்பை இண்டியன்ஸுக்குப் பிறகு அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். இதிலும் பல சர்வதேச ஸ்டார்கள் இருந்தும் சோபிக்காமல் போனதுதான் ஆச்சரியமான வருத்தம். `பாலைவனச் சோலையாய்' ஒன்றிரண்டு போட்டிகளில் டிராவிட் அசத்தியும் அணி கரை சேரவில்லை.

சீனியர் கிரிக்கெட் வீரர்கள் பலர் டிராவிட்டுக்கு ஆதரவாக இருந்தபோதும், `முதல் போடும் முதலாளிக்கு கேள்வி கேட்க உரிமை இருக்கிறது' என்றும் கொக்கி போடுகிறார்கள்.

ஐ.பி.எல்.லில் நட்சத்திரங்கள் பலர் இருந்தும் சறுக்கிய மற்றொரு அணி டெக்கான் சார்ஜர்ஸ். இந்த இரண்டு அணிகளின் வீழ்ச்சி உணர்த்தும் உண்மை, அணியின் வெற்றிக்கு பெரிய பெயர்களோ, சூப்பர்ஸ்டார்களோ மட்டும் உத்திரவாதம் கொடுத்துவிட முடியாது. உதாரணமாக, `பளிச்'சென்ற `பெரும்புள்ளிகளோ', தனியாகப் பயிற்சியாளரோ இல்லாத, ஐ.பி.எல். அணிகளிலேயே குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட `ராஜஸ்தான் ராயல்ஸ்' சக்கைப்போடு போடுகிறது.

ஆனால் ஐதரபாத் அணி தடுமாறினாலும், அதன் வீரர்
களுக்கு உரிமையாளர் தரப்பிலிருந்து வெளிப்படையான நெருக்கடி ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது.

``எங்கள் அணியின் கடினமான நேரங்களில் எல்லாம் எங்கள் உரிமையாளர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள்...'' என்று நிர்வாகத் தரப்புக்கு புகழ்மாலை சூட்டுகிறார், காயத்தால் விலகியிருக்கும் டெக்கான் சார்ஜர்ஸ் கேப்டன் வி.வி.எஸ். லட்சுமண்.

ஆனால் எந்த அணி உரிமையாளரும் தோல்வியை சகித்துக்கொள்ள மாட்டார், ரசிக்க மாட்டார் என்பதே உண்மை. பிசினஸ் உலகின் அத்தனை அம்சங்களும் கிரிக்கெட்டிலும் அம்சமாகப் பொருந்தìவிட்ட நிலையில், தொழில் உலகில் தீவிரப் போட்டி இங்கேயும் இருக்கத்தானே செய்யும்?

ஆக, களத்தில் நிற்கும் வீரருக்கு எக்கச்சக்க நெருக்கடி. வீரர்களுக்கு கோடி கோடியாய் கொடுக்கப்படும் `கூலி' பற்றித்தான் சாதாரண மக்களுக்குத் தெரிகிறது. ஆனால் கண்ணுக்குத் தெரியாத பல டன் அழுத்தத்தை விளக்கொளியில் விளையாடும் வீரர்களே உணர்வார்கள். இதற்கெல்லாம் ஈடுகொடுக்கக்கூடிய வீரர்களால்தான் இன்றைய `டுவென்டி-20' யுகத்தில் தாக்குப்பிடிக்கவும் முடியும்!
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails