சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள்ளேயே உள்ளது ஸ்ரீதில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில். இது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் கோயில். `இங்கே கொடி யேற்றம், பிரமோற்சவம் நடத்த வேண்டும்' என்று வைணவர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்க, அவ்வளவுதான்! பிரச்னை ஆரம்பமாகி விட்டது. ``இது சிவ ஸ்தலம். இங்கே பரிவார தேவதையாக இருக்கும் பெருமாளுக்கு எதற்கு பிரமோற்-சவம்? இது ஆகமத்துக்கு எதிரானது! அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த வி.வி. சுவாமிநாதன்தான் வைணவர்களைத் தூண்டி-விடுகிறார்'' என்று தீட்சிதர்கள் எகிறி எழ, தீயாய்த் தகிக்க ஆரம்பித்துள்ளது இப்பிரச்னை.
இதுபற்றி சிதம்பரம் நடராஜர் கோயில் பூஜா ஸ்தானிக டிரஸ்டிகளில் ஒருவரான ராஜசேகர தீட்சிதரிடம் முத லில் பேசினோம். "இங்கே பெருமாள் பரிவார தேவதை யாகத்தான் வீற்றிருக்கிறார். பரிவார தேவதைக்கு பிர மோற்சவ விழா நடத்தக் கூடாது. அத்துடன் இங்கே கோயில் என்ற அமைப்புடன் பெருமாள் இல்லை. தனி சன்னதியில்தான் பெருமாள் இருக்-கிறார். கோயில் என்றால் ராஜகோபுரம், கொடிமரம், பலிபீடம், கர்ப்பகிரகம் எல்லாம் இருக்க வேண்டும். இங்கே ராஜகோபுரத்துக்கு வெளியில்தான் கொடிமரம், பலிபீடம் இருக்கிறது. அத்துடன், கொடிமரத்தில் கொடியேற்றுவதற்கான வளையங்கள் எதுவும் அமைக்கப் படவில்லை.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில்களுக்குள்ளும் பெருமாள் சன்னதிகள் இருக்கின்றன. அங்கேயெல்லாம் பிரமோற்சவ விழா நடத்தப்படுவதில்லை. பிரமோற்சவ விழா என்றால், தேரோட்டம் வேண்டும். இவர்களிடம் தேரே இல்லை. அதேபோல் வாகன மண்டபம், கல்யாண மண்டபம், தீர்த்தவாரி விழா நடத்த தீர்த்தம் என எதுவுமே இங்கே இல்லை. அப்படியிருக்க, பிரமோற்சவம் நடத்த வேண்டும் என்று வைண வர்கள் பிடிவாதம் பிடிப்பது மூர்க்கத்தனமான செயல்'' என்றார் அவர் ஆத்திரத்துடன்.
"நாங்கள் கதவைத் திறந்துவிட்டால்தான் அவர்கள் பூஜையே செய்யமுடியும். இதை நாங்கள் ஆணவத்துடன் சொல்லவில்லை. அந்தக் கோயில் கும்பாபிஷேகத்துக்குக் கூட நாங்கள்தான் யாகசாலைக்கு இடம் தந்து, யாகத்துக்குத் தேவையான வெள்ளிச் சொம்பு ஆகியவற்றைத் தந்து ஒத்துழைப்புக் கொடுத்தோம். ஆகமத்தை மாற்றக் கூடாது என்பதால்தான் பெருமாளுக்கு இங்கே பிரமோற்சவம் நடத்தக் கூடாது என்கிறோம். நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தைப் பார்ப்பதற்காக இங்கே வந்தவர்தான் இந்த கோவிந்தராஜப் பெருமாள். அவரது சன்னதி நடராஜர் கோயிலுக்கு இடைஞ்சலாக இருப்பதால், அதை அப்புறப்படுத்திவிட்டு பெரு மாளைத் தூக்கி கடலில் போடவேண்டும் என்று, இந்தக் கோயிலை அமைத்த மன்னனே சொன்னதாகக் கூட வரலாறு இருக்கிறது.
வி.வி.சுவாமிநாதன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது, நடராஜர் கோயில் நகைகளைச் சரிபார்க்க அவற்றை எடுத்து வரச்சொன்னார். நாங்கள் மறுத்து விட்டோம். அதை மனதில் வைத்துத்தான் இப்போது வைணவர்களைத் தூண்டிவிட்டு அவர் பழி தீர்க்கப் பார்க்கிறார். அத்துடன், எங்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்றும் சொல்கிறார். சைவ, வைணவ மோதலைத் தூண்டி விடும் இவரையல்லவா குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும்? இந்தப் பிரச்னையை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்ளப் போகிறோம்'' என்றார் துரை தீட்சிதர் என்பவர் படபடப்புடன்.
சரி! வைணவர்கள் தரப்பு என்ன சொல்கிறது? அது-பற்றி நமக்கு விளக்கம் தர முன்வந்தார் தில்லை ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் கோயில் மேனேஜிங் டிரஸ்டி ரங்காச்சாரி.
"திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகி-யோ-ரால் பாடல் பெற்ற ஸ்தலம் இது. தனி திவ்ய கேஷத்திரம். அத்துடன் தனி நிர்வாகம்,தனி ஆகமத்துடன் இங்கே பூஜை நடந்து கொண்டி ருக்கிறது. இந்தக் கோயிலில் பிரமோற்சவம் நடத்த பக்தர்கள் விரும்பியதால், அறநிலைய அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி விட்டோம். விழாவுக்கு ஒத்துழைப்பு வேண்டும் என தீட்சிதர்களி டமும் விண்ணப்பித்திருக்கிறோம். அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
ஒரு தனிக்கோயில் என்றால் அது கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். அந்த அம்சத்துடன் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், கொடிமரம், பலிபீடம் என ஒரு கோயிலுக்குத் தேவை யான அனைத்தும் இந்த பெருமாள் கோயிலுக்கு இருக்கிறது. பெருமாளை பரிவார தேவதை என்று தட்டிக்கழித்தால், இங்குள்ள சிவகாமி அம்மன், சுப்பிரமணியசுவாமி போன்றவர்களும் பரிவார தேவதைகள்தானே? அவர்களுக்கெல்லாம் கொடியேற்றி உற்சவம் நடத்துவது மட்டும் சரியா?
பிரமோற்சவ பிரச்னையில் முன்னாள் அமைச்சர் சுவாமி நாதன் எங்களைத் தூண்டிவிட வில்லை. 1968-ம் வருடம் உற்சவம் நடத்த நாங்கள் அறநிலையத்துறைக்கு விண்ணப்பித்தபோது, தீட்சிதர்கள் ஆணையரிடம் அப்பீல் வாங்கினார்கள். பிறகு, 1982-ல் மறுபடியும் நாங்-கள் முயன்றபோது தீட்சிதர்கள் உயர்நீதிமன்றம் போனார்கள். ஆகவே, எங்களை யாரும் தூண்டிவிடவில்லை. ஆதிமுதலாக நாங்களாகவேதான் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஆயிரம் பேசினாலும் நடராஜர் கோயிலுக்குள் சைவ, வைணவ பேதம் கிடையாது. ஒரே இடத்தில் நின்று கொண்டு சிவனையும், பெருமாளையும் வழிபடுவது மாதிரியான அமைப்பு சிதம்பரத்தைத் தவிர வேறு எங்கும் கிடையாது'' என்றார் அவர் போட்டோவுக்கு மறுத்தபடி.
அவரைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய நபர் ஒருவர் பல `பகீர்' தகவல்களைப் பகிர்ந்தார்.
"நாலாயிர திவ்விய பிரபந்தம் உருவானதே இந்த கேஷத்திரத் தில்தான் என்கிறார்கள். இங்கு கொடிமரம், பலிபீடம் போன்றவை இருப்பதால் ஏற்கெனவே பிரமோற்ச வம் நடந்திருக்க வேண்டும். தில் லையில் இப்போது தீட்சிதர்களின் பலம் சற்றுக் குறைந்திருப்பதால் இந்த பிரமோற்சவப் பிரச்னை எழுந்திருக்கிறது. பிரமோற்சவம் நடத்தினால் பெருமாளுக்கு சக்தி அதிகமாகி, நடராஜருடைய சக்தி குறைந்துவிடும் என்று தீட்சிதர்கள் கருதுவதாலேயே இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்'' என்றார் அவர்.
கடைசியாக வி.வி.சுவாமிநாதனிடம் பேசினோம்.
"அதிர்ஷ்டவசமாக இந்த பெருமாள் கோயில் தமிழக அரசின் அறநிலையத்துறை நிர்வாகத்தின்கீழ் இருக்கிறது. பெருமாள் கோயில் பரம்பரை டிரஸ்டிகள் என்று சொல்பவர்கள், தீட்சிதர்களை எதிர்க்கத் துணிவில்லாமல் பயந்தாங்கொள்ளிகளாக இருப்பதால் தான் இந்தக் கோயிலே விளங்காமல் இருக்கிறது.
இந்தக் கோயில் அறங்காவலர் நிர்வாகத்தில் மேனேஜிங் டிரஸ்டி என்ற ஓர் அலங்காரப் பதவிதான் இருக்கிறது. அந்த இடத்தில் அதிகாரமுள்ள நிர்வாக அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும். 1979லிருந்து அறநிலையத்துறையும், நிர்வாக அறங்காவலர்களும் எடுத்த முயற்சியே பிரமோற்சவம் நடத்தப்படவேண்டு மென்பது தான். இதற்குத் தடை ஏற்பட்டுக்கொண்டே இருந்தால், போலீஸில் புகார் செய்யவேண்டியதுதானே? ஆனால் செய்ய மறுக்கிறார்கள். அரசு உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னபிறகுதானே கனகசபையில் தேவாரம், திருவாசகம் பாட தீட்சிதர்கள் அனுமதித்து அடங்கிப் போனார்கள்'' என்றவர், "இந்தப் பிரச்னையில் நான் யாரையும் தூண்டிவிடவில்லை. மக்களுக்கு விழிப்புணர்வுதான் ஊட்டுகிறேன். இதில் அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கனகசபையில் நடந்தது மாதிரி ஒரு பெரிய மோதலே நடக்கும்'' என்றார் தெளிவாக. ஸீ
ஸீ ஆர். விவேக் ஆனந்தன்
No comments:
Post a Comment