Wednesday, May 28, 2008

பீச் ஓர பங்களா மர்மம்.

 
 
நீலக்கடல் அலைகள் எந்தநேரமும் முத்தமிடும் நீண்ட எலியட்ஸ் கடற்கரை. அழகான அந்த பீச்சில் உலா வரும் காதல் ஜோடிகளின் கண்கள் கூட, அங்கே அஸ்திவாரம் தோண்டப்பட்டு அசுர வேகத்தில் உருவாகி வரும் ஒரு பங்களாவைக் காணத் தவறுவதில்லை. ``ஏண்டா செல்லம்? எனக்காக கடலோரம் இப்படி ஒரு வசந்த மாளிகையை எவ்வளவு நாளா கட்டுறே? சொல்லவே இல்லியே?'' என்று காதலிகள் செல்லமாக காதலனை வாருகிற காட்சிகளும் அங்கே அடிக்கடி அரங்கேறுகின்றன.

சரி! யாருக்காகத்தான் கட்டப்பட்டு வருகிறது அந்தக் வசந்த மாளிகை? `அந்த கனவு மாளிகையில் இருந்தபடி கடற்கரையின் அழகைப் பார்த்து ரசிக்கப் போகிற பாக்கியசாலி யார்? இந்த கேள்விக்கான பதில் `கவர்னர்' என்று அமைந்துவிட்டதால் கலங்கிப் போய் இருக்கிறார்கள் பலர்.

`சுனாமி சுருட்டிய சுருட்டலுக்குப்பின் கடற் கரையில் இருந்து ஐநூறு மீட்டர் தூரத்துக்குள் யாரும் கட்டடம் கட்டக் கூடாது என்று அரசு கட்டளையிட் டிருக்கிறது. கடலோர மீனவர்களை கழுத்தைப் பிடித்துத் தள்ளாதகுறையாக ஐநூறு மீட்டர் தொலைவுக்கு அப் பால் அப்புறப்படுத்துகிறது. அப்படியிருக்க, கவர்னருக்கு மட்டும் கடல்அலை தொடும் தூரத்தில் கனவு மாளி கையா? என்னய்யா கூத்து? ' என்ற கேள்வியும் பலரிடம் எகிறித் தெறிக்கிறது.

அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட தென் சென்னை மக்களின் சொர்க்கபுரியாக இருக்கும் எலியட்ஸ் பீச்சில் கடற்கரையில் இருந்து சில அடி தூரத்தில் கட்டப்பட்டு வரும் அந்தக் கனவு மாளிகையைக் காணும் ஆவலில் நாமும் எலியட்ஸ் பீச்சுக்கு விரைந்தோம்.

பெசன்ட்நகர் பிரதான சாலையில் இருந்து சர்ரென விலகி, கடற்கரையில் நடுநாயகமாக அந்த மாளிகையின் கட்டுமானப் பணிகள் கனஜோராக நடந்து கொண்டிருந்தன. அந்த மாளிகையின் பரப்பளவு ஏறத்தாழ பத்து கிரவுண்ட். அதைச் சுற்றி கச்சிதமாகக் காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டு, பத்தடி ஆழத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டு, படு பரபரப்பாகக் கட்டட வேலை நடந்து கொண்டிருந்தது. நாம் காம்பவுண்டின் உள்புறம் சென்று கட்டடப் பணிகளைக் பார்வையிட்டோம். கட்டட முகப்பில் புல் வளர்ப்பதற்காக செம்மண் கொட்டி சமன் செய்யப் பட்டிருந்தது. புல்வெளியில் நின்று பார்த்தால் கடற்கரையின் அழகு முழுவதுமாக கண்ணுக்குத் தெரியும் வகையில் மாளிகையின் வடிவமைப்பு தென்பட்டது. அங்கே இருந்த கட்டுமானத் தொழிலாளர்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.

``இந்தக் கட்டடத்தின் சுவர்கள் `வயர்கட் பிரிக்' என்று சொல்லப்படும் விலை உயர்ந்த செங்கற்களால் உருவாகி வருகின்றன. ஒரு செங்கல்லின் விலை இருபது ரூபாய். இந்த வகை செங்கல்லில் வீடு கட்டினால் கடலின் உப்புக் காற்றால் சுவரில் அரிப்பு ஏற்படாது'' என்று அவர்கள் விளக்கினார்கள்.

``பல லட்ச ரூபாய் செலவில் படுஜோராகத் தயாராகிறது இந்த மாளிகை. தரைத்தளத்தோடு, முதல் தளம் கொண்டதாக கட்டடம் அமையப் போகிறது. இந்த மாளிகையில் கவர்னர் அவ்வப்போது வந்து ஓய்வெடுக்க வசதியாக இரண்டு படுக்கையறை, ஒரு சமையலறை உள்பட அனைத்து வசதிகளும் வாஸ்து முறைப்படி கட்டப்பட்டு வருகிறது'' என்றனர் அவர்கள்

அங்கிருந்த ஒரு கட்டடத் தொழிலாளியிடம் பேசினோம். "நாங்கள் எல்லாரும் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள். பொதுப்பணித்துறை காண்ட்ராக்டர் மாயக்கிருஷ்ணன் அழைத்ததால் வேலை செய்ய வந்திருக்கிறோம். `கவர்னருக்காகக் கட்டப்படும் பங்களா என்பதால் எல்லாரும் நல்லபடியாக வேலை செய்யணும்' என்று ஆரம்பத்திலேயே சொல்லி வேலை வாங்குகிறார்கள். சில மாதங்களில் வேலை முடிந்துவிடும்'' என்றார் அவர். கட்டடத்தின் பின்புறம் சென்றபோது, சில அடி தூரங்களில் தொட்டுவிடும் தூரத்தில் கடல் இருந்தது.

எலியட்ஸ் பீச்சில் புதிதாக எழும்பி வரும் இந்த மாளிகையைப் பற்றி, அடுக்ககம் மற்றும் குடியிருப்போர் சங்கங்களின் மாநிலத் தலைவர் மணிசங்கரிடம் கருத்துக் கேட்டோம்.

"இது அப்பட்டமான விதிமீறல். மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் கடலோர பாதுகாப்புச் சட்டத்தின் படி கடலில் இருந்து ஐநூறு மீட்டர் தூரத்தில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது. ஆனால் இங்கே கடலுக்கு மிக அருகில் கட்டடம் கட்டப்படுகிறது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உத்தரவைச் செயல்படுத்த வேண்டிய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சி.எம்.டி.ஏ) அதிகாரிகள் எந்தவித எச்சரிக்கையும் செய்யாமல் இதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். மாநகராட்சி அதிகாரிகளிடமும் தவறு இருக்கிறது. விதிமுறைகள் எல்லா மக்களுக்கும் ஒன்றுதானே?'' என்று ஆதங்கப்பட்டார் அவர்.

கடற்கரையில் கட்டப்படும் இந்த கவர்னர் மாளி கையை எதிர்த்துப் போராடி வரும் நுகர்வோர் பாதுகாப்புக்குழு என்ற அமைப்பின் சுற்றுச்சூழல் பிரிவு நிர்வாகியான ராஜேஷ் ரங்கராஜன் என்பவரிடமும் பேசி னோம்.

"சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மீனவ மக் களுக்குக் கூட இரண்டு கிலோமீட்டர் தொலைவில்தான் பொது நல அமைப்புகள் வீடுகள் கட்டிக் கொடுக்கின்றன. இதற்காக தொலைவில் உள்ள அரசு நிலங்கள்தான் ஒதுக்கப்படுகின்றன. ஆனால், இங்கே தனி ஒருவருக்கு கடற்கரையில் பங்களா கட்ட அனுமதித்திருப்பதன் மூலம் அரசு இரட்டை வேடம் போடுவது நன்றாகத் தெரிகிறது. பொதுப்பணித்துறை சார்பில் அங்கே கட்டடம் கட்டி வருகின்றனர். மாநில அரசின் உயர் பதவியில் இருக்கும் கவர்னர் பர்னாலாவின் பாதுகாப்பைப் பற்றிக் கூட கவலைப்படாமல் இப்படி கடலோரம் அவருக்கு பங்களா கட்டுகிறார்கள். கிண்டி, ராஜ்பவனில் கவர்னருக்குப் போதிய வசதி இருக்கிறது. ஊட்டியிலும் கவர்னருக்கு ஓய்வு பங்களா இருக்கிறது. அப்படியிருக்க எதற்காக இப்படி ஒரு புதிய பங்களா? மக்கள் பணத்தை வீணாக்கவா?

கவர்னர் இந்த கடற்கரை மாளிகைக்கு ஓய்வெடுக்க வந்தால், இந்தப் பகுதி உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துவிடும். அப்போது பீச்சில் ஓய்வெடுக்க வரும் சாதாரண மக்கள் மிகுந்த தொல்லைக்கு ஆளாவார்கள். கடலோர ஒருங்கமைப்புச் சட்டம் 1991_ன்படி கடலின் அதிகபட்ச அலையின் தாக்கம் (ஹை டைட் லைன்) இருக்கும் இருநூறு மீட்டர் சுற்றளவில் எந்த ஒரு வளர்ச்சித் திட்டமும் இருக்கக் கூடாது. இந்த பங்களா காம்பவுண்ட் நூறு மீட்டருக்குள் வருகிறது. இதுவே விதிமீறிய செயல்தான்.

அதுபோல பெசன்ட் நகரில் இருந்து நீலாங்கரை வரையுள்ள பகுதி கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதி. இப்படி கடலருகே கட்டடம் கட்டுவதால் ஆமை இனம் கூட அருகிப் போகும். எனவே `கடலோரத்தில் கட்டடம் கட்ட எப்படி அனுமதி கொடுத்தீர்கள்?' என்று பொதுத் துறையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் மனு செய்திருக்கிறோம். எங்களுக்குப் கிடைக்கும் ஆதாரங்களை வைத்து சட்டரீதியாகப் போராடுவோம்'' என்றார் அவர் உறுதியாக.

கவர்னர் அலுவலக வட்டாரங்களில் நாம் பேசிய போது, "கவர்னருக்கு ராஜ்பவனில் போதுமான அளவுக்கு வசதிகள் இருக்கிறன. இதில் புதிதாக அவருக்கு மாளிகை கட்ட வேண்டிய அவசியமில்லை. கவர்னர் அலுவலகத்தில் துணைவேந்தர் நியமனம் உள்பட பல விஷயங்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் உள்ள ஒரு தனிநபருக்காக ஒருவேளை இந்த கடற்கரை மாளிகை கட்டப்பட்டு வரலாம். அப்படி கட்டடம் கட்டுவது மாநில அரசின் முடிவாகத்தான் இருக்க முடியும். எங்களுக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது'' என்றனர் அவர்கள்.

இதுதொடர்பாக சி.எம்.டி.ஏ தலைவரும், அமைச்சருமான பரிதி இளம்வழுதியிடம் பேச முயன்ற போது அவர் சார்பாகப் பேசியவர்கள், "எலியட்ஸ் பீச்சில் புதிதாக கட்டடம் கட்டுவது பற்றி ஆவணப் பூர்வமாக எங்களிடம் எந்தவித தகவலும் வரவில்லை. பெசன்ட் நகர் பீச்சில் கட்டடம் கட்ட நாங்கள் எந்தவித அனுமதி யும் கொடுக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகளிடம் போய்க் கேட்டுப் பாருங்கள்'' என்று கைகாட்டினர்.

சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியனிடம் நாம் பேசியபோது, "பெசண்ட் நகர் பீச்சில் கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருவது உண்மைதான். ஆனால், அது புதிதாகக் கட்டப்படவில்லை. ஏற்கெனவே இருந்த பழைய கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணியைத்தான் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்'' என்றார் உறுதியாக.

பந்து பொதுப்பணித்துறை பக்கம் போய் விட்டதால், அந்த துறையின் உயர் அதிகாரி ஒருவரைக் கேட்டோம். "பொதுப்பணித் துறை சார்பில் எந்த ஒரு கட்டடமும் கடற்கரையில் கட்டுவதற்கான முயற்சிகள் நடக்கவில்லை. தற்போது மேற்கொள்ளப்படும் பணிகள் கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணிகள்தான்'' என்று ஒரேடியாக சாதித்து முடித்து விட்டார் அவர்.

ஆக, அந்த பங்களா ஒரு மர்ம மாளிகையாகத்தான் காட்சியளிக்கிறது. உண்மைகளை விளக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

படங்கள்: ஞானமணி.
ஆ. விஜயானந்த்
 
 
<a href="http://www.kumudam.com"> நன்றி:குமுதம் ரிப்பொர்ட்டர்</a>
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails