Saturday, May 24, 2008

தியாகராஜ பாகவதர் மனைவிக்கு ஒரு லட்சம் ரூபாய்


தியாகராஜ பாகவதர் மனைவிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி
கருணாநிதி உத்தரவு


சென்னை, மே.24-

தியாகராஜ பாகவதர் மனைவிக்கு மருத்துவ செலவுகளுக்காக ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்குவதாக கருணாநிதி அறிவித்துள்ளார்.

தினத்தந்தியில் செய்தி

மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் மனைவி ராஜாம்பாள் வறுமை நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு கூட வழியின்றி அவதிப்படுவதாக தினத்தந்தியில் இந்த மாதம் 10-ந் தேதி செய்தி வெளியிடப்பட்டது. அந்த செய்தியில் "தனது பாட்டி ராஜம்மாளின் சிகிச்சைக்கு கலை உலகத்தினர் மற்றும் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். எனக்கும் எனது தம்பிக்கும் அரசு வேலை வழங்க முன்வர வேண்டும்'' என்ற அவரது பேரன் சாய்ராமின் வேண்டுகோளும் இடம்பெற்றிருந்தது. இதனை பார்த்த சிலர் அவருக்கு உதவ முன்வந்தனர். இப்போது முதல்-அமைச்சர் கருணாநிதி ஒரு லட்ச ரூபாய் வழங்க ஆணையிட்டு அந்த தொகை உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒரு லட்சம் உதவி

தமிழ்த் திரையுலகில் மிகுபுகழ் பெற்று விளங்கியவர் பழம்பெரும் நடிகர் மறைந்த ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர். அவரது மனைவி ராஜாம்பாள் அம்மையார் வறுமை நிலையில் வாழ்வதறிந்து 1999-ம் ஆண்டில் தமிழக அரசு சார்பில் அவருக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். அதனை நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ள ராஜாம்பாள் அம்மையார் தற்போது மிகுந்த வறுமையுடன் நோய்வாய்ப்பட்ட நிலையில் மேலும் உதவி கோரி எழுதியுள்ள கடிதம் நேற்று வந்ததைத் தொடர்ந்து, அவருக்கு உடனடியாக ஒரு லட்ச ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று ஆணையிட்டார்.

முதல்-அமைச்சரின் இந்த ஆணையின்படி, சென்னை மாவட்ட கலெக்டர் சென்னை சூளைமேட்டில் உள்ள ராஜாம்பாள் அம்மையாரின் இல்லத்திற்குச் சென்று அவரிடம் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை நேற்றே வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
http://www.dailythanthi.com/article.asp?NewsID=414620&disdate=5/24/2008

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails