Monday, May 19, 2008

தமிழ் இலக்கிய உலகில் சுஜாதாவின் இடம் என்ன என்பது சுவாரசியமான கேள்வி

தமிழ் நடையில் தடம் பதித்தவர்
 
.
.
எழுத்தாளர் சுஜாதா அவரது எழுத்தைப் போலவே இளமைத் துடிப்புடன் வாழ்ந்து மறைந் திருக்கிறார். 70 வயதை கடந்த நிலையிலும் தனது உடலை வாட்டிய நோய்களை பொருட்படுத்தாமல், அவர் துடிப்புடனே எழுதியும் செயல்பட்டும் வந்தார்.
பெயரும் புகழும் சம்பாதித்துவிட்ட நிலையிலும் தளராத உற்சாகத்துடன், தமிழ் வாசகர்களுக்கு தான் அறிந்தவற்றை சொல்ல வேண்டும் என்ற உணர்வோடு எழுதி வந்திருக்கிறார்.
.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் தீவிரமாக இயங்கி வந்த சுஜாதாவை எந்த அடைமொழிக்குள்ளும் அடக்கி விட முடியாது.

ரங்கராஜன் என்னும் இயற்பெயர் கொண்ட அவர், தனது மனைவி "சுஜாதா' பெயரை புனைப்பெயராக எழுதத் தொடங்கிய காலத்தில் ஒரு ஜனரஞ்சகமான எழுத்தாளராகவே அறியப்பட்டார். தனக்கென தனித்துவமிக்க ஜனரஞ்சக எழுத்தாளர்.

குமுதத்தில் தொடராக வெளி வந்த முதல் நாவலான "நைலான் கயிறு' மூலம் வாசகர்கள் மத்தியில் பிரபலமான "சுஜாதா', பெல் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிய படியே பத்திரிகைகளில் எழுதி குவித்த வேகம் அசாத்தியமானது.

சுஜாதா எழுதாத தமிழ் பத்திரிகைகளே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு தமிழ் எழுத்துலகில் அவரது கொடி பறந்தது.

"கணேஷ்வசந்த்' பாத்திரங்களை பிரபலமாக்கிய சுஜாதா, இன்னொரு பக்கம் ஸ்ரீரங்கம்
எஸ்.ஆர். என்னும் பெயரில் "கணையாழி' இலக்கிய பத்திரிகையில் கனமான விஷயங் களை தனக்கே உரிய இலகுவான நடையில் எழுதி வந்தார்.

அவரது இலக்கிய முகம் வெகுஜன வாசகர்களுக்கு தாமதமாகவே அறிமுகமானது. அதற்கு முன்பாகவே அறிவியல் சார்ந்த விஷயங்களை எளிமையாகவும் சுவையாகவும் சொல்லக் கூடியவராக அவர் அறியப்பட்டார்.

அவருடைய நவீன தமிழ் நடை இதற்கு உதவியாக இருந்தது. "கம்ப்யூட்டர்' என்பது ஒரு சொல்லாக கூட அறிமுகமாகாத காலத்திலேயே அவர் சிலிக்கான் பற்றியும், கம்ப்யூட்டர் பற்றியும் எழுதியது வியப்புரிக்குரியது.

அற்புதமான அறிவியல் புனை கதைகளையும் எழுதியதோடு, விஞ்ஞானத்தின் சமகால போக்கை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்த வண்ணம் இருந்தார்.
நாவல்கள் எழுதுவதில் கொஞ்சம் இடைவெளி விட்ட சுஜாதா, பின்னர் புதிய வேகத்தோடு
எழுதத் தொடங்கினார்.

இடையே மெக்சிகோ சலவைக்காரி ஜோக் தனக்கு தெரியும் என்று சொல்லி வாசகர்களின் கவனத்தை ஈர்க்கவும் அவரால் முடிந்தது. கனவு தொழிற்சாலை, ஸ்ரீரங்கத்து தேவதைகள், பதவிக்காக, மோதிரக் கதைகள், கொலையுதிர் காலம், வசந்தகால குற்றங்கள் என்றும் எழுத முடிந்தது.

விஞ்ஞானம் பற்றி எழுதி வந்த சுஜாதா, தனது சாதாரண நாவல்களில் கூட போகிற போக்கில் உலக விஷயங்களையும், பிரபலமான ஆளுமைகளையும் குறிப்பிட்டபடி இருப்பார்.

 இப்படி வைரக் கடத்தல் பற்றிய கதையில் ஒற்றை வரியில் "டி பியர்ஸ்' நிறுவனம் பற்றி எழுதி வருவார். கணேஷ் விடுமுறைக்காக படிக்க டால்ஸ் டாயின், வார் அண்டு பீஸ் நாவலை எடுத்து வைத்துக் கொண்டான் என்று எழுதுவார்.

இப்படி நல்ல வாசகர்களுக்கு தனது நாவலில் அவர் ஆங்காங்கே பொறி வைத்திருப்பார். அதை பிடித்துக் கொண்டால் வாசகர்கள் தீவிரமான விஷயங்களை தெரிந்து கொள்ளும் பயணத்தை மேற்கொள்ள தொடங்கலாம்.

பின்னர் கணையாழியில் எழுதியது போலவே, பிரபலமான பத்திரிகை களிலும், இலக்கிய விஷயங்களை எழுதத் தொடங்கினார். ஞானக் கூத்தனின் கவிதைகளையும், சுந்தர ராமசாமியின் புளிய மரத்தின் கதையையும், நகுலனின் நினைவுப் பாதையையும், தி.ஜானகிராமனின் கட்டிப்போடும் தமிழ் நடை பற்றியும் அவர் சராசரி வாசகர்களுக்கு அறிமுகம் செய்தார்.

இசங்களின் பெயரில், தமிழில் இலக்கிய உலகில் பலர் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த போது, சுஜாதா ஆரவாரமே இல்லாமல் உலக இலக்கியம் பற்றி எழுதிக் கொண்டிருந்தார்.
அவர் சுட்டிக்காட்டி பிரபலமான இளம் கவிஞர்களும் உண்டு. மனுஷ்ய புத்ரன், மகுடேஸ்வரன் போன்றோர் இதற்கு உதாரணம். அவர் கை காட்டிய புத்தகங்களின் பின்னே ஆயிரக்கணக்கான வாசகர்கள் படையெடுக்க தயாராக இருந்த நிலையிலும் சுஜாதா "விமர்சனம்' என்ற மகுடம் தரித்துக் கொள்ள விரும்பியதில்லை.

நல்ல விஷயங்களுடனான எனது பரிச்சயத்தை பகிர்ந்து கொள்வதே எனது பணி என அவர் செயல்பட்டு வந்தார். ஜனரஞ்சகமான எழுத்தாளர் என்ற நிலையில் இருந்து இலக்கிய உலகிற்கும், வெகுஜன வாசகனுக்கு  மான பாலமாக அவர் உருவாகி நின்றார்.

கேள்விபதில் பகுதி மூலம் அவர் வாசகர்களுக்கு தெரியப்படுத்திய விஷயங்களும் அநேகம்.
எழுதாத விஷயமே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு பல துறைகள் பற்றி எழுதிய சுஜாதா, திருக் குறளுக்கும் உரை எழுதினார். புறநானூற்றை எளிமைப்படுத்தி தருவதாக கூறினார். திரைக்கதை எழுதுவது எப்படி என்றும் கற்றுக் கொடுத்தார்.

பிரபலமாக இருந்த காலத்தில், "காயத்ரி' உள்ளிட்ட நாவல்களை படமாக்க கொடுத்து இயக்குனர்கள் அவற்றை சிதைத்து விட்டார்கள் என்று புகார் சொல்லிக் கொண்டிருந்த சுஜாதா, பிற்காலத்தில் தமிழ் திரை உலகில் ஐக்கியமான விதமும் வியப்பிற்குரியது தான். மணிரத்னம், ஷங்கர், நடிகர் கமல் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படைப்பு குழுவில் அவருக்கு நிரந்தர இடம் கிடைத்தது.

சுயசரிதையை கூட வழக்கம் போல் எழுதாமல், அவை கட்டுரைகள் போலவே அவர் "கற்றதும் பெற்றதும்' என எழுதினார்.

தனது காலத்தில் பெரும் புகழை சம்பாதித்த சுஜாதா, சர்ச்சைகளுக்கோ, விமர்சனங்களுக்கோ அப்பாற்பட்டவர் அல்ல தான்! அதையும் வெகு ஜனமாக்க முடிந்தது அவரது பலம் என்றால் அதுவே அவரது பலவீன மாகவும் இருந்தது.

கனமான விஷயங்களை ரொம்பவும்எளிமை படுத்தி விடுவார் என்பதும், இலக்கியத்தரமாக அதிகம் எழுதியது இல்லை என்றும் அவர் மீது விமர்சனங்கள் உண்டு.

குறிப்பாக, நழுவிச் செல்லும் அவரது பண்பு, கடுமையாக விமர்சிக்கப் பட்டதுண்டு.  புறநானூறு உரையில், தமிழ் இலக்கியத்தை தன் மேதாவித்தனத்தால் தப்பும் தவறுமாக எழுதி  இருக்கிறார் என்றும் கூறப் பட்டது. விமர்சனங்களை கேட்டு அவர் அதிகம் கோபப்பட்டதில்லை. பெரும்பாலும் புன்னகையுடனேயே எதிர் கொண்டார்.

தமிழ்  இலக்கிய உலகில் சுஜாதாவின் இடம் என்ன என்பது சுவாரசியமான கேள்வி. இலக்கிய ஆசான் என்று அவரை பலர் ஏற்க மறுக்கலாம், ஆனால் நவீன தமிழ் உரையில் புதிய வேகத்தை கொண்டு வந்ததற்காக அவர் பாராட்டப்பட வேண்டியவர்.

சங்கத் தமிழில் துவங்கி தமிழுக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு. தமிழ் உரைநடையை பொறுத்தவரை அதற்கு நவீனத்துவத்தை ஏற்படுத்தி புதிய பரிமாணத்தை தந்ததற்காக தமிழ் அவரை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.
இரா. நரசிம்மன்

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails