பெய்ஜிங், மே.18-
இந்தியாவை குறிவைத்து சீனா ஏவுகணைகளை நிறுத்தி வைத்திருப்பதாக செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சீனா அச்சுறுத்தல்
இந்தியாவுக்கு சீனா தொடர்ந்து பல ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்தியாவுக்கு சொந்தமான அருணாசல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஏற்கனவே ஆக்கிரமித்த இந்திய பகுதிகளையும் விட்டுத்தர மறுக்கிறது. மேலும், இந்தியாவுக்கு தொல்லை தரும் நோக்கத்தில் பாகிஸ்தானுக்கு அணு ஆயுத தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறது.
சீனாவுடனான எல்லை பிரச்சினைகள் இன்னும் தீர்ந்த பாடில்லை. இந்நிலையில், சமீபத்தில் சீனாவின் ஹைனன் தீவில் கடலுக்கடியில் அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல் தளத்தை சீனா அமைத்தது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
செயற்கைகோள் படங்கள்
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், இந்தியாவை குறிவைத்து சீனா ஏவுகணைகளை நிறுத்தி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. சீனாவின் கிங்கை மாகாணத்தில் டெலிங்கா அருகே 2 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் 58 ஏவுகணை ஏவுதளங்களை சீனா அமைத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூட்டமைப்பு எடுத்த செயற்கைக்கோள் படங்களில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இந்த விஞ்ஞானிகள் கூட்டமைப்பு, அரசு சார்பற்ற அமைப்பாகும். உலக அளவில் அணு ஆயுதம் மற்றும் ஆயுதங்களை ஒழிக்கும் முயற்சியில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது.
இந்த படங்களை நன்றாக ஆய்வு செய்த விஞ்ஞானிகள் கூட்டமைப்பு, இந்த ஏவுதளங்கள், இந்தியாவின் வடமாநிலங்களையும், ரஷியாவின் தென்பகுதியையும் குறிவைத்து காணப்படுவதாக தெரிவித்தனர்.
அணுகுண்டு தாக்குதல்
இந்த ஏவுதளங்களில் இருந்து டிஎப்-21 ரக ஏவுகணைகள் பறக்க தயார் நிலையில் உள்ளன. இவை டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் வடமாநிலங்கள் வரை வந்து தாக்கும் சக்தி படைத்தவை என்றும் விஞ்ஞானிகள் கூறினர். இந்த ஏவுகணைகள் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் ஆகும். இவற்றில் அணுகுண்டுகளையும் ஏற்றி அனுப்ப முடியும்.
இந்த ஏவுகணைகளால் ரஷியாவின் தென்பகுதியையும் தாக்க முடியும். ஆனால் ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளுக்கு ஆபத்து இல்லை என்று விஞ்ஞானிகள் கூறினர்.
No comments:
Post a Comment