செயற்கையாக ஏற்றப்படுவதாக தகவல்
சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகர விளக்கு தோன்றுவது பற்றி விசாரணை
கேரள முதல்-மந்திரி அறிவிப்பு
திருவனந்தபுரம், மே.30-
சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர விளக்கு தோன்றுவது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று கேரள முதல்-மந்திரி வி.எஸ்.அச்சுதானந்தன் அறிவித்தார்.
மகர விளக்கு
கேரளாவில் சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவிலுக்கு தென்னிந்திய மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து பல லட்சம் பக்தர்கள் சென்று அய்யப்பனை தரிசித்து வருகிறார்கள்.
மகர சங்கராந்தி நாளன்று பொன்னம்பல மேட்டில் மகர விளக்கு 3 முறை தோன்றி மறையும். மகர விளக்கு தோன்றும்போது, அய்யப்பனே காட்சி தருவதாக கருதி பக்தர்கள் வழிபடுகின்றனர். அப்போது சரண கோஷம் விண்ணை பிளக்கும்.
செயற்கையானது என சர்ச்சை
இந்த நிலையில் அய்யப்பன் கோவில் தலைமை தந்திரியின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், திருவாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவருமான ராமன் நாயர் கூறுகையில்; மகர விளக்கு என்பது இயற்கையானது அல்ல. கோவில் ஊழியர்களால் செயற்கையாக ஏற்றப்படுகிறது என்று தெரிவித்தார்.
அதையடுத்து கேரள சுற்றுலா மேம்பாட்டுத் துறை தலைவரும், இடதுசாரி ஆதரவாளருமான செரியன் பிலிப் மற்றும் சில நாத்திக குழுக்களும், மகர ஜோதி என்பது பக்தர்களை ஏமாற்றும் ஒரு மோசடி என்று கூறினார்கள்.
சர்ச்சைக்குரிய இந்த கருத்துக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தலைமை தந்திரி விளக்கம்
இந்த நிலையில் இந்தப் பிரச்சினை பற்றி அய்யப்பன் கோவில் தலைமை தந்திரி கண்டரரு மகேஸ்வரரு சார்பில் அவரது பேரனும், தந்திரியுமான ராகுல் ஈஸ்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
மகர விளக்கு வேறு. மகர ஜோதி வேறு. மகர ஜோதி என்பது மகர சங்கராந்தி அன்று கிழக்கு திசையில் தோன்றும் நட்சத்திரத்தை குறிக்கும்.
மகர விளக்கு என்பது, பழங்காலத்தில் அய்யப்பனின் மூலஸ்தானமாக இருந்த பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படுவதாகும். மகர விளக்கு ஏற்றும் இந்த வழக்கம், பரசுராம முனிவரால் தொடங்கி வைக்கப்பட்டது ஆகும். அதனை நினைவூட்டும் விதமாகத்தான் இப்போது அங்கு விளக்கு ஏற்றப்படுகிறது. காடுகளில் வசித்த பழங்குடி மக்களால், இந்த வழக்கம் பல நூற்றாண்டுகாலமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது.
எந்த ரகசியமும் இல்லை
மகர ஜோதியும், மகர விளக்கும் ஒன்று என்று நினைக்கும் ஒரு சிலரின் தவறான கருத்து காரணமாக இந்த சர்ச்சை எழுந்துள்ளது. இது தேவையில்லாதது. இந்த இரண்டு விஷயங்களையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும்.
மகர விளக்கு என்பது கடவுள் அய்யப்பனுக்கு வழங்கப்படும் ஒரு பாரம்பரிய தீப ஆராதனை. மற்றபடி இதில் எந்த ரகசியமும் இல்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தேவசம்போர்டு மந்திரி
இதற்கிடையே கேரள தேவசம்போர்டு மந்திரி ஜி.சுதாகரன் கூறுகையில், மகர விளக்கு மனிதர்களால் ஏற்றப்படுகிறது என்பது அரசாங்கத்துக்கு தெரியும் என்று கூறி உள்ளார்.
மகர விளக்கு ஏற்றப்படும் பகுதிக்கு செல்வதென்பது மிகவும் கடினம் ஆகும். இஸ்லாமிய மக்கள் சந்திரனின் பிறைவடிவை பார்த்து, விழாவை தீர்மானிப்பது போலான ஒரு நிகழ்வுதான் இது. நம்பிக்கை உள்ளவர்களின் நம்பிக்கையில் கைவைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. இதை சொல்வதால் எனது முற்போக்கு சிந்தனைக்கு எந்த குறையும் ஏற்படாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
விசாரணைக்கு உத்தரவு
இந்த நிலையில் கேரள முதல்-மந்திரி வி.எஸ்.அச்சுதானந்தன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது; சபரிமலையில் மகர விளக்கு வெளிச்சம் எப்படி உருவாகிறது என்று கண்டறிய விசாரணை நடத்தப்படும். இப்பிரச்சினையில் பக்தர்களின் நம்பிக்கைக்கு இடைïறு ஏற்படுத்தும் விதத்தில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று அவர் கூறினார்.
பக்தர்கள் வேதனை
ஏற்கனவே கன்னட நடிகை ஜெயமாலா கோவில் கருவறை வரை சென்றதாக கூறியது, உன்னிக்கிருஷ்ண பணிக்கரின் தேவ பிரசன்னம் ஆகியவற்றால் சபரிமலை அய்யப்பன் கோவில் சர்ச்சைகளில் சிக்கியது. இந்த நிலையில் மகர விளக்கு பற்றி தற்போது சர்ச்சை எழுந்திருப்பது, அய்யப்ப பக்தர்களை வேதனை அடையச் செய்துள்ளது.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=415808&disdate=5/30/2008&advt=1
No comments:
Post a Comment