Wednesday, May 14, 2008

ஜெய்ப்பூர் தாக்குதல்: 8 பேர் கைது -உலக நாடுகள் கண்டணம்

ஜெய்ப்பூர் தாக்குதல்: 8 பேர் கைது
.
 
.
ஜெய்ப்பூர், மே 14: ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்றிரவு  12 நிமிடங்களுக்குள் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63ஆக உயர்ந்துள்ளது. 200க்கும் அதிகமானோர் காய மடைந்தனர்.
.
மக்கள்  நெரிசல்  அதிகமாக இருக்கும் நேரத்தையும், இடங்களையும் தேர்ந் தெடுத்து குண்டுகளை  வைத்துள்ளனர்.  சில இடங்களில் வெடித்தவை ஆர்.டி.எக்ஸ்.  ரக குண்டுகள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 நகரின்  கோட்வாலி பகுதியில் உள்ள  துணிக்கடை ஒன்றின்  அருகிலும், இப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிலும் குண்டுகள் முதலில் வெடித்தன. இதனைத் தொடர்ந்து  திரிபோலியா பஜாரில் குண்டு வெடித்தது.  மேலும் ஹனுமார் கோயில் அருகிலும், மானஸ் சௌக்,  படி சௌபல், சோட்டி சௌபல், ஜோஹரி பஜார் ஆகிய  பகுதிகளிலும் தொடர்ச்சியாக குண்டுவெடிப்புகள்  நிகழ்ந்தன.

 முதல் குண்டுவெடிப்பு இரவு 7.40 மணிக்கு நிழ்ந்தது. குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு  வங்க தேசத்தில்  இயங்கும் ஹர்கத்உல்ஜிகாதி இஸ்லாமி (ஹுஜி) என்ற  தீவிரவாத அமைப்பே முக்கிய காரணமாக இருக்கும் என சந்தேகிப்பதாக  ராஜஸ்தான்  மாநில டிஜிபி  ஏ.எஸ்.கில் தெரிவித்தார்.

ஊரடங்கு
ஜெய்ப்பூரில் நிலவும் பதற்றமான  சூழ்நிலையை அடுத்து  மத்திய உள்துறை அமைச்சகக் குழுவினர் மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினர் இங்கு வந்துள்ளனர். நகரம் முழுவதும் பதட்டம் நிலவுவதால் லால்கோதி, ஆதர்ஷ் நகர், டிரான்ஸ் போர்ட் நகர், மானக்சவுக், சுபாஷ் சவுக், ராம்கஞ்சு, கோட்வாலி உள்ளிட்ட 15 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிடிபட்டனர்
நாடுமுழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள  இந்த தொடர் குண்டு வெடிப்புக்கு வங்க தேச தீவிரவாத அமைப்பு ஹுஜி தான் காரணம் என்று கருதப்படும் நிலையில் இது தொடர்பாக 8  பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில் குண்டுவெடிப்பில் காயம் அடைந்த ஒருவரும், ரிக்ஷா இழுக்கும் தொழிலாளி ஒருவரும் அடங்குவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

சாவு எண்ணிக்கை
குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் 63ஆக உயர்ந்துள்ளது என்று ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். எனினும், இதுவரை 85 பேர் உயிரிழந்திருப்பதாக  அதிகாரப் பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைவர்கள் கண்டனம்
தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தருணத்தில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், துணை ஜனாதிபதி அமீத் அன்சாரியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதே போல அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு உதவ ராஜஸ்தான் மாநில அரசுக்கு எல்லா உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இது மனித குளத்திற்கு எதிரான கொடுங்குற்றம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள்
இந்த தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்க, பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அப்பாவி மக்களை குறி வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் மிகக் கொடூரமானவை என்று தெரிவித்துள்ள  அந்த நாடுகள், பலியானவர்களின் குடும்பங்களுக்கு தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளன...

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails