Wednesday, May 14, 2008

சென்னையில் 14 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ! 22 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

இந்த சம்பவம் 11_7_1975 அன்று இரவு சுமார் 8_30 மணி அளவில் நடந்தது
 
 
 

சென்னையில், 177 அடி உயர 14 மாடி (எல்.ஐ.சி.) கட்டிடம் தீப்பிடித்து எரிந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கியது.

14 மாடி கட்டிடம்
 
 
சென்னை அண்ணா சாலையில் 14 மாடிகளுடன் கம்பீரமாக காட்சி தருவது எல்.ஐ.சி. கட்டிடம். இங்கு ஆயுள் இன்சூரன்ஸ் அலுவலகமும் (எல்.ஐ.சி.) கடைகள், அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

இந்தக் கட்டிடம் 177 அடி உயரம் கொண்டது. 1957_ம் ஆண்டு ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டது. அப்போதைய மத்திய நிதி மந்திரி மொரார்ஜி தேசாய் இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந்த கட்டிடம்தான் தமிழ்நாட்டிலேயே மிக உயரமான கட்டிடம்.

14_வது மாடியின் உச்சியில் ஏறி நின்றால் சென்னை நகர் முழுவதையும் காணமுடியும். இதற்கு 25 காசு கட்டணம் வசூலித்து பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இப்படி பார்வையாளராக அனுமதிக்கப்பட்ட ஒரு வாலிபர் உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் பார்வையாளர் அனுமதி நிறுத்தப்பட்டது.

தீப்பிடித்தது

இந்த எல்.ஐ.சி. கட்டிடத்தில் 11_7_1975 அன்று இரவு சுமார் 8_30 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் 14 மாடிகளிலும் தீப்பற்றி எரிந்தது. மேகத்தை தொடும் அளவுக்கு தீ ஜ×வாலைகள் தெரிந்தன.

புகை மூட்டத்தினால் அந்த பகுதியே இருண்டது. போக்குவரத்து நிறுத்தப்பட்டன. அருகில் இருந்த கடைகள் எல்லாம் மூடப்பட்டு, அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தார்கள்.

இந்த தீ விபத்து செய்தி சென்னை நகர் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் ஓடிவந்தனர். ஆனால் அவர்களை அருகில் செல்லாதபடி போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

அண்ணா சாலை, புதுப்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர் பகுதியில் உள்ள வீடுகளின் மாடிகளில் நின்று பார்த்தால் கூட எல்.ஐ.சி. கட்டிடத்தில் தீப்பிடித்து எரிந்ததை பார்க்க முடிந்தது.

கட்டிடத்தின் தரை தளத்தில் உம்மிடியார் நகைக்கடை, பின்னி ஜவுளிக்கடை, பெருமாள் செட்டி எழுதுபொருள் (ஸ்டேஷனரி) கடைகள் அனைத்தும் தீப்பிடித்தன. இந்த கடைகளில் இருந்த விலை உயர்ந்த நகைகள், ஜவுளிகள் எரிந்தன.

எல்.ஐ.சி. அலுவலகங்களில் இருந்த பீரோக்கள், நாற்காலி, மேஜை போன்றவை கருகி உருக்குலைந்தன. முக்கிய தஸ்தாவேஜ×கள் சாம்பலாயின. கட்டிடத்திற்குள் எரிந்த பொருட்கள் காற்றில் தீப்பந்தங்கள் போல் பறந்து வெகு தூரத்தில் விழுந்தன.

கருணாநிதி பார்த்தார்

முதல்_அமைச்சர் கருணாநிதி சிந்தாதிரிப்பேட்டையில் நெடுஞ்செழியன் பிறந்த நாள் விழாவில் பேசிக்கொண்டிருந்தார். தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், கூட்டத்தை ரத்து செய்துவிட்டு விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தார்.

தீயணைப்பு பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டார். துரிதமாக தீயை அணைக்கும்படி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

22 மணி நேர போராட்டம்

தீயணைக்கும் பணியில் 1,500 பேர் ஈடுபட்டனர். உயரமான ஏணிகளில் ஏறி அவர்கள் தீயை அணைக்க முயன்றபோதிலும் 5_வது மாடிக்கு மேல் தண்ணீரை பீய்ச்சி அடிக்க இயலவில்லை.

அதிகாலை வரையில் விடிய விடிய போராடிய போதிலும் தீ அடங்கவில்லை. கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருந்தது.

தீயின் கடும் வெப்பத்தால் கட்டிடத்தில் ஏராளமான வெடிப்புகள் விழுந்தன. இத னால் தீயணைப்பு வீரர்கள் அச்சம் அடைந்தார்கள். கட்டிட நிபுணர்கள் வந்து பரிசோதித்துவிட்டு இடிந்து விழாது என்று கூறிய பிறகு தீயணைப்பு படையினர் உள்ளே நுழைந்தனர். ஒவ்வொரு மாடியாக சென்று தீயை அணைத்தனர்.

மறுநாள் (12_ந்தேதி) மாலை 6 மணி அளவில் 14_வது மாடியை அடைந்தார்கள். 6_30 மணி அளவில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.

அதாவது 22 மணி நேர போராட்டத்துக்குப்பிறகு தீ அணைந்தது. தீ விபத்துக்கான காரணம் கண்டறிய 250 `சாம்பிள்'கள் எடுக்கப்பட்டு ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

14 மாடிகளிலும் இருந்த தஸ்தாவேஜ×கள் (ரிக்கார்டுகள்) தீயில் எரிந்தன. ஆனால் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 லட்சம் பாலிசிகள் கட்டிடத்தின் பாதாள அறையில் வைக்கப்பட்டு இருந்தன. அவை காப்பாற்றப்பட்டன.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails