Thursday, May 8, 2008

விடுதலைப் புலிகள் மீண்டும் விமானத் தாக்குதல் - 6 ராணுவத்தினர் பலி

விடுதலைப் புலிகள் மீண்டும் விமானத் தாக்குதல் - 6 ராணுவத்தினர் பலி
    

Air Tigers With Prabhakaran
கொழும்பு: இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 6 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

இலங்கையில் கடந்த சில நாட்களாக விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடைய கடும் சண்டை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த சண்டையில் 165 இலங்கை ராணுவத்தினரை கொன்றதாக புலிகள் தெரிவித்தனர். ஆனால் அரசுத்தரப்பில் 48 பேர் உடல் கைப்பற்றப்பட்டதாகவும் மேலும் 39 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இலங்கை வெலிஓயா பகுதியில் இன்று அதிகாலையில், விடுதலைப் புலிள் விமானம் மூலம் தாக்குதல் நடத்தி இலங்கை படைகளுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

இன்று அதிகாலை 1.45 மணியளவில் 2 போர் விமானங்கள் மூலம் விடுதலைப் புலிகளின் வான் படைப் பிரிவினர் தாக்குதல் நடத்தினர். மொத்தம் 3 குண்டுகளை ராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் போட்டுள்ளனர்.

இதில் 6 பேர் பலியானதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராணுவத் தரப்புக்கு பேரிழப்பு ஏற்பட்டிருப்பதாக கொழும்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலை பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா உறுதிப்படுத்தியுள்ளார்.

சமீப காலமாக விமானத் தாக்குதலில் ஈடுபடாமல் புலிகள் இருந்து வந்த நிலையில் மீண்டும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகளிடம் செக் நாட்டின் சிறிய ரக போர் விமானங்கள் உள்ளன. கடந்த ஆண்டு இந்த விமானப்படை தாக்குதலில் இறங்கியது. இதுவரை 5 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 22ம் தேதி அனுராதபுரம் விமான தளத்தின் மீது தாக்குதல் நடந்தது.

அதன் பின்னர் விமானப் படைத் தாக்குதல் நடக்காமல் இருந்தது. இடையில், விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளத்தை முற்றிலும் அழித்து விட்டதாக ராணுவம் கூறியிருந்தது.

ஆனா ல்தற்போது மீண்டும் விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடத்தியிருப்பது இலங்கை ராணுவத்தை அதிர வைத்துள்ளது. அதிலும் இந்த முறை நடந்த தாக்குதல் குறி தவறாமல் இருந்ததாக ராணுவமே கூறியுள்ளதால் புலிகளின் விமான பலம் இன்னும் குறையவில்ைல என்பதை நிரூபிப்பதாக உள்ளது.

மேலும் மணலாறு பகுதியில் ராணுவம் நுழைய முயன்றதையும் விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த இரண்டு தாக்குதல்களிலும் ராணுவத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையே, விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப்பகுதியில் ராணுவத்தினர் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சண்டையில் பாலம்பிட்டி, தட்சணமாறாதமடு ஆகிய இடங்களில் 8 போராளிகள் கொல்லப்பட்டதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், வவுனியா மற்றும் மேற்கு வெலிஓயாவில் நடந்த மோதலில் 10 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் மன்னார் பகுதியில் பரப்பகந்தல் என்ற இடத்தில் 4 புலிகளை கொன்றதாகவும் ராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த 1 வருடமாக மணலாறு பகுதி வழியாக விடுதலைப்புலிகள் முகாம்களுக்குள் ராணுவத்தினர் முயற்சித்துவரும் நிலையில் இந்த தாக்குதல் அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails