ஜய்ப்பூர் குண்டு வெடிப்பு சதிகாரன் கைது
வங்காள தேச தீவிரவாத அமைப்புக்கு தொடர்பா?
ஜெய்ப்பூர், மே.14-
ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக ஒரு சதிகாரன் கைது செய்யப்பட்டான். இச்சம்பவத்தில் வங்காள தேச தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
சதிகாரன் கைது
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவன் கைது செய்யப்பட்டான். அவன் பெயர் விஜய். மும்பையைச் சேர்ந்தவன். அவனிடம் போலீசார் துருவித்துருவி விசாரித்து வருகிறார்கள்.
சைக்கிள் பால்பேரிங்குகளை குண்டு வெடிப்பில் பயன்படுத்தியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்தில் ஒரு டைம் பாம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
வங்காள தேச அமைப்பு
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் வங்காள தேசத்தில் இருந்து செயல்படும் ஹர்கத்-உல்-ஜிகாதி இஸ்லாமியா என்ற தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது தடை செய்யப்பட்ட அமைப்பாகும். உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற கோர்ட்டு குண்டு வெடிப்புகள், ராம்பூரில் ரிசர்வ் போலீஸ் முகாம் மீதான தாக்குதல் ஆகியவற்றை இந்த அமைப்புதான் நடத்தியது.
அத்தாக்குதல்களில் பயன்படுத்தியது போன்ற வெடிபொருட்கள், இந்த குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், இது ஹர்கத்-உல்-ஜிகாதி இஸ்லாமியாவின் சதிவேலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த அமைப்புக்கு பாகிஸ்தானின் ஜெய்ஸ்-இ-முகமது உதவி செய்து இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதை கண்டறிய, கடந்த 48 மணி நேரத்தில் ஜெய்ப்பூரில் இருந்து செய்யப்பட்ட எஸ்.டி.டி. மற்றும் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை உளவுப்பிரிவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். சம்பவ இடத்தை தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.
இந்த குண்டு வெடிப்பில் வெளிநாட்டின் தொடர்பை மறுக்க முடியாது என்று மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். ஆனால் எந்த ஒரு நாட்டையும் குறிப்பிட்டு கூற முடியாது என்றும் அவர் கூறினார்.
பிரதமர் உறுதி
குண்டு வெடிப்பை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜேவுடன் பிரதமர் மன்மோகன்சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். மாநில அரசுக்கு எல்லாவித உதவிகளும் அளிக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பட்டீலுடனும் பிரதமர் பேசினார். உள்துறை செயலாளர் மதுகர் குப்தாவுடன் பிரதமர் அலுவலகம் தொடர்ந்து தொடர்பு கொண்டு அவ்வப்போதைய நிலவரத்தை கேட்டு வருகிறது. உள்துறை செயலாளர் மதுகர் குப்தா, ராஜஸ்தான் தலைமை செயலாளரை தொடர்பு கொண்டு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறார். உள்துறை அமைச்சக குழு ஜெய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கிரிக்கெட் போட்டி நடக்குமா?
குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி வசுந்தரா ராஜே அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்குவதாகவும் அவர் கூறினார்.
குண்டு வெடிப்புக்கு மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பட்டீல் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில அரசுக்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த அவர், பயணத்தை ரத்து செய்து விட்டு டெல்லி திரும்பினார்.
ஜெய்ப்பூரில் வரும் சனிக்கிழமை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் ஜெய்ப்பூரில் குண்டு வெடிப்பு நடந்து இருப்பதால், அங்கு திட்டமிட்டபடி கிரிக்கெட் போட்டி நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. கிரிக்கெட் போட்டியை பாதுகாப்பாக நடத்த முடியுமா? என்று ஆய்வு நடந்து வருகிறது.
பா.ஜனதா கண்டனம்
ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.
பா.ஜனதா துணைத்தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:-
பலவீனமான பிரதமர் மற்றும் கோழைத்தனமான உள்துறை மந்திரி தலைமையிலான அரசின் மென்மையான அணுகுமுறையால்தான் இத்தகைய குண்டு வெடிப்புகள் நடக்கின்றன. மத்திய அரசு தனக்கு கிடைக்கும் தகவல்களை மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளாததால்தான், இப்படி நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் முல்போர்டும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=412549&disdate=5/14/2008
No comments:
Post a Comment