தமிழின் நம்பர் 1 நாளிதழ் என கூவித் திரியும் தினகரனை இனிமேல் படிக்கக் கூடாது என நினைத்திருக்கிறேன். கொஞ்சம் இலகுவாக காலையில் செய்திகளை சட்டென்று வாசித்து விடலாமே என்பதனால் தான் தினகரனை வாசித்து வந்தேன், ஆனால் தினகரனின் மரத்துப் போன ரசனை அதை வெறுக்க வைத்து விட்டது.
முக்கியமாக ஒன்றே ஒன்று ! எங்கேனும் ஒரு துயரம் நிகழ்ந்து விட்டால் அந்தப் படத்தை அப்படியே கலரில் அள்ளிக் கொண்டு வந்து முதல் பக்கத்தில் போடுவது. அதை வாசிப்பவர்களின் மனநிலையையோ, அந்த புகைப்படத்தைச் சார்ந்த மனிதர்களின் மனநிலையையோ சற்றும் கண்டு கொள்ளாத தினகரனின் போக்கு.
இன்றைய நாளிதழைப் புரட்டினால், இடிபாடுகளுக்கிடையே கடந்த 40 மணி நேரமாய் போராடும் சிறுமி என கண்களில், திகிலும், வேதனையும், பயமும் கலந்த ஒரு மழலையின் மரணப் போராட்டப் படம் ஒரு பக்கம்.
எரிந்து கொண்டிருக்கும் மனித உடல் இன்னொரு பக்கம்.
நெஞ்சில் முழுவதுமாக இறங்கிய கத்தியுடன் படுத்திருக்கும் மனிதர் ஒரு பக்கம். குத்து, வெட்டு, கதறல் என ஒரு யுத்தக்களத்தில் பிசுபிசுப்புக் கையுடன் நடந்து செல்லும் உணர்வு மேலோங்குகிறது.
என்னதான் நிலை நிறுத்த விரும்புகிறதோ தினகரன். நாளிதழில் எடிட்டர், ஆசிரியர் எல்லோருமா இத்தகைய கொடூர ரசனையை குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள்.
மற்ற பத்திரிகைகள் எல்லாம் எப்படி இன்றைய செய்திகளை வெளியிட்டிருக்கின்றன என புரட்டிப் பார்த்தேன். பெரும் நாளிதழ்கள் எல்லாம் செய்திகளை, கட்டுரைகளை, விவரங்களை முழுமையாகப் போட்டு வெறுமனே பதட்டத்தையும், வலியையும், கூட்டும் படங்களை காட்டாமல் விட்டிருந்தன.
அது தான் நாளிதழ் தர்மம் என நினைக்கிறேன். அமெரிக்காவிலெல்லாம் கொலை நடந்தால் கூட அதை நாளிதழ்கள் பெரும்பாலும் வெளியிடுவதில்லை. பொதுமக்களிடையே பதட்டம் ஏற்படுத்தாமல் அந்த சிக்கலை காவல்துறை பிண்ணணியில் செயலாற்றி முடித்துக் கொள்வதே வழக்கம்.
இந்தியாவில் பரபரப்பு, பதட்டம், உடனடிச் செய்தி, எக்ஸ்குளூசிவ் என பல்வேறு பெயர்களுடன் இருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் எடுத்துக் கொண்டு சென்று விடுகின்றனர்.
நாளிதழ்களுக்கென சில விதிமுறைகள், வரைமுறைகள் உண்டு. அவற்றில் கொஞ்சமேனும் கற்றுக் கொள்வது தினகரனுக்கு நல்லது. மற்றபடி பத்து இலட்சம் பிரதி விற்பதை வைத்துக் கொண்டெல்லாம் தம்பட்டம் அடிப்பது வெறுப்படிக்கிறது.
இன்றைக்கு நாளிதழில் வெளியான ஒரு படத்தைப் பார்த்துவிட்டு எனது மழலை மகளின் முகம் போன போக்கைப் பார்த்தபின் இனிமேலும் இதை வாங்கக் கூடாது என முடிவெடுத்திருக்கிறேன்.
No comments:
Post a Comment