Wednesday, August 12, 2009

புலிகளின் மௌனம் எதுவரை ?

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகள் கொழும்பில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடும் என்று புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
ஸ்ரீலங்கா அரச படைகளால் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலாளர் கே.பி.யை மீட்பதற்குரிய இராஜதந்திர முயற்ச்சிகள் தோல்வி அடையும் பட்சத்தில் இராணுவ ரீதியில் தமது எதிர்ப்பினை புலிகள் காண்பிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் உறங்கு நிலையில் வைக்கப்பட்டுள்ள தற்கொலை குண்டுதாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் இந்த தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
புலிகளின் தாக்குதல்கள் அரசியல் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் மீதாகவோ அல்லது சாதாரண பொதுமக்கள் மீதானதாகவோ இருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
புலிகளுக்கு சார்பான சில வெளி நாடுகளின் தீவிர அழுத்தங்கள் காரணமாகவே இந்த உறங்கு நிலை உறுப்பினர்கள் தாக்குதல் நடத்துவது தவிர்க்கப்பட்டு வந்துள்ளதாகவும் எனினும் கே.பியின் கைதினை அடுத்து அந்த நாடுகளும் இலங்கை அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்புவதற்கு எத்தனங்களை மேற்கொண்டுள்ள நிலையில் அவர்களின் ஜனநாயக போராட்டதையும் அழிப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்ச்சிகள் சில உலக நாடுகளை விசனமடையச் செய்துள்ளதாகவும் அதன் காரணமாக விடுதலைப் புலிகளை மீண்டும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட அவை ஊக்கப்படுத்துவதாகவும் தெரியந்துள்ளது.
 
இந்த நிலையில் புலிகளின் மரபு சார் போராட்ட வலு மட்டுமே தற்போது தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அவர்களின் ஏனைய போராட்ட வடிவங்கள் முன்னரைவிட பலமானதாக மாறியுள்ளதாகவும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு ஒன்று இலங்கை அரசாங்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளது.
 
கே.பியை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்கான இராஜதந்திர நகர்வுகளை ஏற்கனவே புலிகளின் வெளிநாட்டு பிரிவுகள் முன்னெடுத்து வரும் நிலையில் அவை பலனளிக்க தவறினால் வன்னி படை நடவடிக்கையில் தமிழ் மக்களுக்கும் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு பழிவாங்கும் வகையில் பலத்த அழிவுகளை ஏற்படுத்தும் தாக்குதல்களை புலிகள் தெற்கில் நடத்தக் கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
புலிகளின் தாக்குதல் நடைபெறக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதை பாதுகாப்பு விவாரங்களுக்கான அமைச்சரவை பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெலவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
 
எது எப்படி இருப்பினும் புலிகளின் மௌனம் எப்போது கலையும் என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails