கன்னித்தன்மை பரிசோதனை: இந்து மதவெறிக் கும்பலின் ஆணாதிக்க வக்கிரப்புத்தி
ஏழ்மையின் காரணமாகத் திருமணமாகாமல் இருக்கும் பெண்களுக்கு இலவசமாகத் திருமணம் செய்து வைக்கிறோம் எனக் கூறி, மணமேடை வரை அழைத்துச் சென்ற பிறகு, மணப்பெண் கன்னித்தன்மையுடன் இருந்தால்தான் திருமணம் என்று சொல்லி, அவர்களை இழிவுபடுத்திய கொடுமை மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசே இதனைச் செய்துள்ளது என்பதுதான் இன்னமும் கொடுமை.
'முக்கிய மந்திரி கன்யாதான் யோஜனா' (முதலமைச்சர் திருமண உதவித் திட்டம்) என்ற திட்டத்தின் மூலம் அம்மாநிலத்தில் இலவசத் திருமணங்கள் மாதந்தோறும் நடத்தி வைக்கப்படுகின்றன. இதில் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்குச் சீதனமாக, ஒரு பெட்டியில் சமையல் பாத்திரங்களும், ஒரு கைபேசியும், 6500 ருபா ரொக்கமாகப் பணமும் வழங்கப்படும். 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட தொன்னூறாயிரம் தம்பதிகளுக்கு இலவசத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளன.
தங்களது திருமணத்திற்குக் கூட அரசிடம் கையேந்தும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டு, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மணமேடைக்கு வந்த பெண்களை இத்தகைய சோதனை மூலம் உளவியல் ரீதியாக வதைத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்களில் இருவர் போலீசில் புகார் செய்ததையடுத்து, இந்த விசயம் வெளிஉலகிற்குத் தெரியவந்து பெரும் அதிர்ச்சியை நாடெங்கும் உருவாக்கியது. காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகள் நாடாளுமன்றத்தில் இதனை விவாதிப்பதாகக் கூறி, அந்த ஏழைப் பெண்களை மீண்டும் அவமானப்படுத்தின.
முதலில் அவ்வாறு பரிசோதனை ஏதும் செய்யப்படவில்லை என்று மறுத்த பா.ஜ.க.வினர், பின்னர் பொதுவான உடல்நலப் பரிசோதனை மட்டும் நடத்தப்பட்டதாகக் கூறினார்கள். இறுதியாகக் குட்டு வெளிப்பட்டவுடன், தங்களது செயலுக்கு நியாயம் கற்பிப்பதற்காக "மணப்பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா எனப் பரிசோதித்தோம்; ஆனால் கன்னித்தன்மைப் பரிசோதனை எதுவும் நடைபெறவில்லை" என்று கூறினார்கள். இதன் மூலம் திருமணம் செய்ய வந்திருந்தவர்கள் அனைவரையும் ஏமாற்றுக்காரர்களாகச் சித்தரித்ததுடன், அரசுக்கு எதிராகப் புகார் கொடுத்த அந்த இரு பெண்களையும் மிரட்டி தங்களது புகாரைத் திரும்பப்பெற வைத்து, ஒரு வழியாகப் பிரச்சனைக்கு முடிவு கட்டியுள்ளனர்.
கற்பு நெறியைக் காப்பாற்றுவது எனும் பெயரில், பருவமடைந்த பெண்களை வீட்டைவிட்டு வெளியே அனுப்பாமல் அடுக்களையில் பூட்டிவைக்கும் சனாதானிகள், பெண்ணின் உடலில் உள்ள கன்னித்திரைதான் அவர்களது கன்னித்தன்மையைப் உறுதி செய்வதாகக் கருதுகிறார்கள். ஆனால், காட்டுமிராண்டித்தனமான இவ்வரையறை பெரும்பாலான உழைக்கும் பெண்களுக்கு அறிவியல்ரீதியாகப் பொருந்தாது. ஆண்களுக்கு நிகராக விவசாய வேலைகள், விறகு வெட்டுதல், தையல்வேலை உள்ளிட்ட கடினமான வேலைகளைச் செய்வதாலும் சைக்கிள் ஓட்டுவதாலும் இயல்பாகவே உழைக்கும் பெண்களில் பெரும்பாலானோர், கன்னிப்பரிசோதனை எனும் இந்த வக்கிரமான சோதனையில் தோல்வியடையவே செய்வர். விளையாட்டு வீராங்கனைகளுக்கும் கூட இது பொருந்தும். ஏழைப் பெண்களை இச்சோதனைக்கு உட்படுத்துவது என்பது ஆணாதிக்க வக்கிரம் மட்டுமல்ல; அடுப்பூதும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே கூடாது எனும் பார்ப்பனியத் திமிரும் கூட.
திருமண உதவித் திட்டத்திற்கு கன்னிப்பரிசோதனையை முன்நிபந்தனையாக்குவதன் மூலம், விதவைப்பெண்களும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் மறுமணம் செய்வதை நேரடியாகத் தடுத்து, பெண்களுக்கெதிராகக் காலந்தோறும் கொடுமை இழைத்துவரும் இந்துப் பார்ப்பனியத்தை பா.ஜ.க. அரசு நிலைநிறுத்த நினைக்கிறது. ஆண்-பெண் சமத்துவத்திற்கு எதிரானதாகக் கருதப்படும் இந்தப் பரிசோதனைக்கு உலகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் பா.ஜ.க. அரசு சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஏழைகளாக இருப்பதாலேயே அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் ஆளும் வர்க்கத் திமிரில் இது நடந்து கொண்டுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களில் பா.ஜ.க. வடமாநிலங்களில் மோசமாகத் தோற்றிருப்பினும், அதன் மக்கள் விரோதத் தன்மை கொஞ்சம்கூட மாறிவிடவில்லை. கணவனை இழந்த பெண்களை உடன்கட்டை ஏற்றிக் கொல்லும் சதியைக் கூச்சமின்றிப் போற்றும் அதன் சனாதனப் பாரம்பரியம் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. பா.ஜ.க. கும்பலின் ஆணாதிக்க பார்ப்பனீயக் கொடுமைதான் மத்தியப் பிரதேசத்தில் 'கன்னிப் பரிசோதனை' என்ற பெயரில் வக்கிரமாக அரங்கேறியுள்ளது. தன் மனைவியின் கற்பையே சந்தேகித்து அவளைத் தீக்குளிக்க வைத்த ஸ்ரீராமனைத் தேசிய நாயகனாகப் போற்றுபவர்களிடமிருந்து வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?
-புதிய ஜனநாயகம், ஆகஸ்டு -2009
No comments:
Post a Comment